ஆச்சரியம் காட்டுகிறது என் காதல்

உலகில் உள்ள
அழகான பொருட்களுடன்
எல்லாம் அவளை
ஒப்பிட்டுப் பார்த்து
அவளுக்கு ஈடு அவளே என
ஆச்சரியம் காட்டுகிறது
என் காதல்!

- ப்ரியன்.

கண்டுகெண்டது காதல்

என்னை நானாகத்
தொலைத்த இடத்தில்
தன்னை தானாக
கண்டெடுத்துக்
கொண்டது காதல்!

- ப்ரியன்.

எரிச்சலூட்டும் காதல்

உதயன் கையசைத்து
புறப்படும் அழகு மாலையில்
அவள் கைப் பற்றி
கடல் நுரையில்
கால் நனைத்து
கடல் சுகிக்க அமர்ந்து
தூரம் நகரும் படகொன்றினை
சிவந்த வானின் அழகோடு
காட்டும் சாக்கில் மேல்சாய்ந்து
கன்னம் உரசி 'இச்' வைக்க எத்தனிக்க
மூக்கு வியர்த்து
இடையில் வந்தமர்ந்து
இது எல்லாம் அப்புறம்ம்ம்ம்ம்ம்ம் தான்
என நீட்டிச் சொல்லி
எரிச்சலூட்டும் காதல்!

- ப்ரியன்.

காதலும் கடவுளும்

காதலை ஒருபக்கம் வைத்து
தன்னை மறுப்பக்கம் வைத்து
யார் வேண்டும் என்றான் கடவுள்!
கடவுளை மறுதலித்து
காதலை எடுத்துக் கொள்ள
ஏமாற்றத்தில் அடிக்க பின்
துரத்துகிறான் கடவுள்!
பத்திரமாய் நான்
கட்டிக்கொண்ட சந்தோசத்தில்
துரத்தும் கடவுளைப் பார்த்து ஒரு
கேலிப் புன்னகை சிந்துகிறது
என் காதல்!

- ப்ரியன்.

கிறுக்குகிறது காதல்

நான் இறப்பதற்குள்
அவளைப் பற்றி
ஒரு குயர் நோட்டு அளவாவது
எழுதிமுடிக்க வேண்டும் என
மும்முரமாய் கண்டதையெல்லாம்
கிறுக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

காதல் மனசு

காகிதம் பேனா இரண்டும்
கையிலிருந்தும் கவிதை தோன்றா
ஒர் அந்திமாலையில்
அவள் கொலுசு சப்தம்
கேட்ட கணம்
ஹை கவிதை வருது என
எனைவிட்டு
எட்டிக் குதித்து ஒடுகிறது
என் காதல் மனசு!

- ப்ரியன்.

காதலின் உள்ளிருப்பு போராட்டம்

அவளைப் பற்றி
கவிதை கிறுக்க உபயோகிக்காத
அழகான வார்த்தைகளையெல்லாம்
கூட்டி வைத்து
எனக்கு எதிராக
ஓர் உள்ளிருப்பு
போராட்டம் நிகழ்த்துகிறது
என் காதல்!

- ப்ரியன்.

காத்திருக்கிறது காதல்

மலையின் ஆழ்சரிவுகளில்
சருகுகள் சரக் சரக் சத்ததில்
தளிர் பற்றி
வழுக்குப் பாறைக் கடந்து
அங்கங்கே தொங்கும் பாம்புகள் துரத்தி
சில்லென வெண்ணாடைத் தரித்த அருவி நனைந்து
கறும்குகைப் புகுந்து
கைக்கு எட்டிய பாறை விளிம்பு தொட்டு
அப்பக்கம் எட்டிப் பார்க்கையில்
அவளுடன் சேர்ந்து எனக்காக கைநீட்டிக்
காத்திருக்கிறது காதல்!

- ப்ரியன்.

தவழும் காதல்

தூரத்தில் அமர்ந்து
கைநீட்டும் தாயைப் பார்த்து
பொக்கைவாயில் எச்சில் வழிய
வேகமாய் தவழ்ந்துச் செல்லும்
குழந்தைப் போல்;
அவளைக் கண்டால்
தவழ்ந்து அவளை நோக்கி
வேகமாய் முன்னேறுகிறது
என் காதல்!

- ப்ரியன்.

காதல் விழா

அவள் பார்வைப்பட்ட
நாளையெல்லாம்
பண்டிகை தினம் எனக்
நாட்குறிப்பில் குறித்துவைத்து
விழா எடுத்துக் கொண்டாட
மெல்ல தயாராகிவிட்டது
என் காதல்!

- ப்ரியன்

ஓரு நிலவும் ஓராயிரம் சூரியன்களும

ஒரு நிலவைக் காட்டி
என்னுள்
ஒரு ஆயிரம்
சூரியன்களுக்கு
ஒளிப் பிச்சையிடுகிறது
காதல்!

- ப்ரியன்.

பூ அவள் காதல் சிற்பம்

கல்லாக கிடக்கும் என்னை
அவள் கூந்தல்
உதிறும் பூக்கொண்டு
சிற்பமாக வடிக்க
பிரயத்தனம் செய்கிறது
காதல்!

- ப்ரியன்.

கரையும் காதல்

உனைக் காணமுடியா
முற்பகல்களில்
உருகி உருகி
அழுது
கரையத் தொடங்குகிறது
என் காதல்!

- ப்ரியன்.

குழந்தை கிறுக்கிய ஓவியம்

அவள் பெயரை
கிறுக்கி கிறுக்கி
என் இதயச் சுவரெல்லாம்
அழகாக்கிக் கொண்டிருக்கிறது
காதல் குழந்தை!

- ப்ரியன்.

பிம்பம்

முன்னொரு நாளில்
என்னறை கண்ணாடியில்
நீ விட்டுச் சென்ற
பிம்பப் பதிவை
காதலின் சின்னம் எனப்
பிடித்துவைத்து
எனை நிதமும்
சித்ரவதை செய்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

பாதச்சுவட்டு கவிதை

கடற்கரை மணலில்
நீ பதித்து சென்ற
கால் தடத்தில்
கவிதை கண்டேன் என
கட்டம் கட்டி
பார்த்திருக்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

கை கட்டி நகர்கிறது காதல்

அவள் விழியில்
தொலைத்த என் உயிரை
தொலைத்த இடம் விடுத்து;
எல்லா இடமும் தேடி
கிட்டவில்லை எனக் கைவிரித்து
கைகட்டி அதுபாட்டிற்கு நகர்கிறது
காதல்!

- ப்ரியன்.

காதல் பூ

அவளுக்கான
மலர் தேடுகையில்
பூந்தொட்டியில்
பூக்களோடு ஒரு பூவாய்
மலர்ந்து
காத்திருக்கும் காதல்!

- ப்ரியன்.

காதலில் தத்தளித்தல்

அவள் விழியில்
விழுந்து தத்தளிப்பவன்
என்னைக்
காப்பாற்றுவது போல் காப்பாற்றி
மீண்டும் அவள் விழியில் தள்ளி
தத்தளிப்பதை
மெல்ல அமர்ந்து பார்த்து
இரசிக்கிறது காதல்!

- ப்ரியன்.

காதல் அகங்காரம்

புறப்பொருளுடன்
தொடங்கும்
என் கவிதைகளில்
எல்லாம் கூட
அகப்பொருள் திணித்து
அகங்காரமாய் சிரிக்கிறது
காதல்!

- ப்ரியன்

தொலைத்ததும் கிடைத்ததும்

என்னை தேடித் தேடி
உன்னிடம் தொலைத்த
என்னைத் தேடித் தேடி
சலித்த கணம்;
கண்டுகொண்டதாய்
நானெனச் சொல்லி
உன்னை தந்து;
தொலையக் காரணமான
உன்னையே கையில் தந்து;
தள்ளி நின்று சத்தமாக
சிரித்து தொலைக்கிறது
காதல்!

- ப்ரியன்.

விழி-காதல்

தொட்டனைத் தூறு
மணற்கேணி
விழிமொழிக்
கற்றனைத் தூறும்
காதல்!

- ப்ரியன்.