என்ட மக்கள் புலம்பெயர்ந்த வீதி!

எம்மக்கள் புலம்பெயர்ந்த
வெற்று வீதிகளில்
முகம் திருப்பியப்படியே
பயணிக்கிறது சூரியன்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள்- 9

உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!

- ப்ரியன்.

நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

- ப்ரியன்.

எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!

- ப்ரியன்.

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

- ப்ரியன்.

உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!

- ப்ரியன்.

உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 8

உன்னைக் கண்டப் பிறகுதான்
அழகென்பது
உடலிருந்து
உள்ளத்துக்குத் தாவியது
எனக்கு!

- ப்ரியன்.

விடம்;
அமுதம்;
எதுவென அறியத்தராமல்
குடித்துப் பார்த்து
அறியும் விளையாட்டு
காதல்!

- ப்ரியன்.

அழகு
உவமைகளை உனக்கு
உவமானம் ஆக்குதலைவிட
உவமைகளுக்கு உன்னை
உவமானம் ஆக்குதலே
தகும்!

- ப்ரியன்.

என்னைப் பார்த்ததும்
நீ
ஊமையாகிவிட்டால் என்ன?
உன்
நாணம்தான்
சொல்லாகிவிட்டதே!

- ப்ரியன்.

இதயதரையில் நீ
நடந்துச் சென்ற
சுவடுகளிலெல்லாம்
கவிதை பூத்து
அழகுபார்க்கிறது காதல்!

- ப்ரியன்.

கரு மை வைக்கிறாய்
திருஷ்டி கழிகிறது
கண்களுக்கு!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 7

தொடமால்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!

- ப்ரியன்.

ஊர் என்ன பெயரோ
வைத்து அழைத்துவிட்டு போகட்டும்!
'டேய்' என நீ விளித்தலே
பிடிக்கிறது எனக்கு!
இன்று முதல்
'டேய்' என்பதே
என் பெயராகட்டும்!

- ப்ரியன்.

உன் கண்
பூக்களில்
வந்தமர்ந்து தேன் பருகும்
வண்டுகளாய்
என் கண்கள்!

- ப்ரியன்.

நீ இடும் புள்ளிகளில்
நீ ஒரு ஓரமாய்
நான் ஒரு ஓரமாய்
தள்ளி நிற்கிறோம்
இணைத்தேவிடுகிறாய் கோடுகளால்
கோலமாய் முடிக்கையில்!

- ப்ரியன்.

வானவில் வந்தால்
மழை நின்று போகும்
என்கிறது ஒரு கிழம்!
உன் கண்வில்லை
கண்டால் கவிதைமழை
பொழியும் என்கிறது - இந்த
காதல் பழம்!

- ப்ரியன்.

கருப்பான என்
வாழ்க்கைத் தாளில்
வெள்ளை வெள்ளை
எழுத்துக் கவிதைகளாய்
நீ!

- ப்ரியன்.

மதுமிதாவின் பார்வைக்கு

வலைப்பதிவர் பெயர்: ப்ரியன் (எ) பழம்நீ.விக்னேஷ்

வலைப்பூ பெயர் : ப்ரியன் கவிதைகள்

உர்ல் : / சுட்டி http://priyan4u.blogspot.com/ - கவிதைகள் பக்கம்
http://enkanvaziyae.blogspot.com/- என் எண்ணங்கள்
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: கோவை தற்சமயம் சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை...இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05 சனவரி மாதம் 2005

இது எத்தனையாவது பதிவு: இதோடு 141

இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://priyan4u.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கவிதைகள் சிலதையும் கவிதைப் போன்ற பலதையும் இணைய நண்பர்களுடன் பக்ர்தல் பொருட்டு...

சந்தித்த அனுபவங்கள்: என்னைப் பொருத்தவரை எல்லாமே இனிமை...அரசியல் / சாதி / மத பதிவுகள் தவிர்த்து கவிதைகள் அதிகம் பதித்ததால் இருக்கலாம்

பெற்ற நண்பர்கள்: கணக்கில் அடங்கா - நல் உள்ளங்கள் - உண்மையான நலம் விரும்பிகள்

கற்றவை: ஏராளம்...

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அதிகம்...அச்சுதந்திரம்தான் வலைப்பூவின் பலமும் பலவீனமும்

இனி செய்ய நினைப்பவை: எழுத்துகளை மெருக்கேற்றும் முயற்சிகள்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்

சில காதல் கவிதைகள் - 6

பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!

- ப்ரியன்.

உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!

- ப்ரியன்.

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

- ப்ரியன்.

குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!

- ப்ரியன்.

எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!

- ப்ரியன்.

நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!

- ப்ரியன்.

விதிகள்

ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!

ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!

கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!

அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! - நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!

கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!

ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!

அவ்வாறே வாழ்க்கையும்!

- ப்ரியன்.

அண்ணன் புகாரியின் 'ஆடுகளக்கோடுகள்' என்ற கவிதை வாசிக்கும் போது தோன்றிய வரிகள் இவை...நன்றி புகாரி அண்ணா :)

காவல்

இரவெல்லாம்
கண்விழித்துப்
பார்த்திருந்தேன் நிலவை;
ஆனாலும்,
காணாமல் போயிருந்தது
காலையில்
என் காவலையும் மீறி!

- ப்ரியன்.

கண்ணாடி

கைத்தவறி விழுந்த
கண்ணாடி சுக்குநூறாய்
சிதறிக்கிடந்தது தரையில்!

வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னத்தடா ஒடச்சு தொலைச்சே
அடுப்படியிலிருந்து கடிந்துக் கொண்டாள்
அம்மா!

அதன் ஆயுசு
அவ்வளவுதான் விடுவென்று
உடைத்த எனை காத்து
அப்போதும் வேதாந்தம் பேசினார்
அப்பா!

கண்ணாடி காதலியான
அக்காவோ
புதிது வாங்கும்போது
இன்னமும் பெருசா என்பதோடு
முடித்துக் கொண்டாள்!

ஏதும் பேசாமல்,
சில்லுகளைப்
பொறுக்கிச் சேர்த்து
குப்பைத் தொட்டியில்
போடுகையில்தான்
கவனித்தேன்;

உடைந்த
கண்ணாடித் துகள்கள்
ஒவ்வொன்றிலும் உறைந்த்திருந்தது
எந்தன் பிம்பம்!

- ப்ரியன்.