மற்றொரு மாலையில்... - 10

உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!



நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...

மற்றொரு மாலையில்... - 09

காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!


பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

'படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!'
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
'இந்தா கோவில் பிரசாதம்'
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!

விழி படபடக்கும் சப்தம்

காதலர் தின வாழ்த்துக்கள்


*

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

*

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

*

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

*

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

- ப்ரியன்.

பெரியதாக்கி பார்க்க படம் மேல் சொடுக்கவும்

மற்றொரு மாலையில்... - 08

தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!

இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!

கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!

புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!

அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!

காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.

'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!

- உயிர் இன்னும் உருகும்.

மற்றொரு மாலையில்... - 07

தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!


பரிட்சைக்கு முந்தைய
கடைசி பள்ளி வேலை
நாளது;

படிக்க கொடுக்கும்
படிப்பு விடுமுறையை
களிக்க கணக்குப் போடும்
கூட்டம் ஒன்று!
விடுமுறையை தொடரும்
பரிட்சை பற்றிய
பயத்தில் பதறும்
கூட்டம் மற்றொன்று!

இவ்விரு வேறு
கூட்டத்தினிடையில்
பிரிவை எண்ணி
நடுநடுங்கி இருந்தன
இரு கூடுகள்!

கடைசியாய் பயந்தகிடந்த
அந்நிமிடம் வந்தேவிட்டது
அவ்வகுப்பறையில்
நம் கடைசி மணித்துளிகள்!

கையில் கிடைத்த
கூர்மை பொருள் கொண்டு
நீயே சாட்சியென
மேசையிடம் சொல்லியபடி
மேசையின் உள்பக்கம்
ஒரு பைத்தியமாய்
கிழிக்கிறேன்
இருவர் பெயரையும்!

வெட்டி தொங்கவிடப்பட்ட
தண்டவாள கட்டையில்
பள்ளி முடிந்தற்கான
அடையாளமாய்
நீண்ட மணி அடிக்கப்படுகிறது!
அது
ஏனோ உயிருக்கு
மணியடிப்பதாய் தோன்றுகிறது!

காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

தலைக்குனிந்து
நகர்ந்தவள்!
தூரமாய் சென்று
நின்று வகுப்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பக்கமாய் நான் வந்ததும்
'நல்லா படி!'
'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;
நீ சொன்ன
அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல
தைரியம் இல்லாதவன்
'ம்!' என்றபடி நகர்கிறேன்;
ஒரு குளத்தளவு நீரை
கண்ணில் தேக்கிக்கொண்டு.

- உயிர் இன்னும் உருகும்...

இதுகாரும் உருகிய உயிர் காண :

06.,05.,04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 06

ஒரு மரத்தடியில்
வசந்தத்தில் உனக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்!
காத்திருந்து நாட்கள் பல
கடந்த இக்காலத்தில்
காய்ந்த இலைகளை
பொழியத் தொடங்கிவிட்டன
மரங்கள் மழையாக!


கரையோரம் துள்ளும்
தங்க மீனாய்
ஆற்றின் ஓரம்
தோழியர் படைசூழ
தண்ணீருக்கு அடியிலும்
மேலுமென கழித்திருப்பாய்
வாரயிறுதி நாட்களை!

உனை இருநாள்
காணாமல் போனால்
இருண்டிடும் கண்களென
மனம் பகர
கால் முந்த
எத்தோச்சையாய் வருவதாய்
சமாதானம் சொல்லி
கடந்து நான்
அழகு கடத்திப் போகும்
அந்நாட்களில்
ஒரு புன்முருவல் பகிர்வோடு
முடிந்துபோகும்
நம் பேச்சு!

தொட்டுக் கொள்ள
உப்பும் மிளகாயும்
தின்றபின் சுவைக்கூட்ட
ஆற்று தண்ணியுமென
தோழியர்களுடன் நீ
குழுமியிருந்த நாளொன்றில்!

வழமைப் போல்
கண் பேசி
கடந்தவனை
இழுத்து நிறுத்தினாய்
'நெல்லிக்காய் சாப்பிடுகிறாயா?' எனும்
கேள்விக் கொக்கியால்!

அழகு
களவாட வந்தவன்
கண்கயிற்றாய் கட்டுண்டு
சொன்னேன்
'ம்!' அதுவே
ம் அவ்வளவே பதில்!
அதுவே முதலில் உன்னிடம்
பேசிய சொல்லும் கூட!
ஒற்றை எழுத்தானாலும்
ஓராயிரம் முறை
உயிர் சிலிர்த்திட
அதுவே போதுமானதாயிற்று!

இருந்த ஒற்றை
நெல்லிக்காயினை
ஓரக்கடி கடித்து தந்தாய்!

நெல்லிக்காய் தின்று
தண்ணீர் குடித்தால்
தொண்டைக்குழி இனிக்குமென்பது
அதுவரை கண்ட அனுபவம்!
ஆனால்
கடித்த பாகத்தின் ஓரம் ஒட்டிய
உன் எச்சில் திவலைகளை குடித்து
உயிரெல்லாம் இனித்தது
அன்று கொண்ட புது அனுபவம்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 07

இதுகாரும் உருகிய உயிர் காண :

05.,04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 05

உன் மெளனம்
மொழியும் மொழியின்
வீரியத்திற்கு முன்
என் கவிதைகள் எல்லாம்
ஏதுமற்ற சூன்யம்!


தமிழ் வகுப்பில்
காமத்துப் பாலிலும்
அகத்திணை பாடல்களிலும்
தலைவன் நானென
தலைவி நீயென
கனவெல்லாம்
தீண்டி உறவாடி
பேசித்திரிந்த நாளது!

பதிலுக்கு
முறைவைத்து
மருதாணியால் சிவந்த
உன் நகம்
வேதியியல் ஆய்வகத்தில்
தீண்டி வைக்க!

காப்பர் சல்பேட்டின் நீலமும்
காப்பர் குளோரைடின் பச்சையும்
பொட்டாசியம் குரோமேட்டின் மஞ்சளும்
பொட்டாசியம் டை குரோமேட்டின் ஆரஞ்சுமென
கலந்து இதய
வானமெங்கும் வண்ணமாய் வெடித்து சிதற!

ஸ்பரிச மயக்கத்தில்
அமிலம் மாற்றி ஊற்றிட
கையிருந்த கூம்பு
வெடித்து சிதறி
கண்ணாடி பூக்களை தூவியது!

எழுந்த புகையில்
கைப்பற்றி நடனமாடியிருந்தோம்
இருவரும்!

உள்ளங்கையளவு தண்ணீர்
முகத்தில் அருவியென தெளிக்க
கண்விழித்து பார்க்கையில்
சுற்றி வகுப்பு நண்பர்களின் முகமெல்லாம்
கவலை மேகம் சூழ
கிடந்திருந்தேன் தரையினில்!

அமிலம் அரித்த எரிச்சல்களை
அதை தொடர்ந்த
முதலுதவி மருந்துகளின் இரணங்களை தாண்டி
உணர்வின் அங்குலம் அங்குலமாய்
விஸ்வரூபம் எடுத்து
உயிர் எல்லாம்
பொழிந்து குளிரூட்டுகிறது
உன் விழியோரம் திரண்டிருந்த
இரு விழி கண்ணீர் துளிகள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 06

இதுகாரும் உருகிய உயிர் காண :

04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 04

தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!


காற்று குடித்து
உப்பிய சக்கர வயிறை
முள் கிழித்து
சப்பையாக்கிட
மிதிவண்டியை தள்ளியபடி
பயணிக்கிறாய் பள்ளி நோக்கி!

தாமதாமாய் புறப்பட்டு
கால இடைவெளியை
வேகத்தினால் நிரப்பிட
பறந்து முன்னேறி வந்தவன்
மிதிவண்டி தள்ளிவரும்
தாவணி மயிலைக் கண்டு
மிதிவண்டி மிதிப்பது விடுத்து
இறங்கி தள்ளி வருகிறேன்
துணைக்காய்!

பெரும் மெளனத்தோடு நகரும்
பிரயணத்தில்
அவ்வப்போது
பரிமாறிக் கொள்கிறோம்!
பட்டாம்பூச்சிகள் இமையானதென
சந்தேகம் கொள்ளுமளவு
படபடக்கும்
விழிகளோடு!

பார்வைகள் தொட்டு புணரும்
கணம் சட்டென
தலை தாழ்த்தி
நாணம் தரையெங்கும்
சொட்டச் சொட்ட
நடை பயிலுகிறோம்!

கட்டி கதைப்பேசியபடி
பின் தொடர்கின்றன - நம்
மிதிவண்டியின் சக்கர தடங்கள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 05

இதுகாரும் உருகிய உயிர் காண :

03.,02.,01

மற்றொரு மாலையில்... - 03

இசையின் குறிப்பாய்
பேசத் துவங்குகிறாய்!
எங்கோ!தூரத்தில்
இசைகிறது புல்லாங்குழல்
ஒத்தாக!


திருத்திய தேர்வுத்தாள்கள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
மதிப்பெண் வாரியாய்;

மரம் தங்கி
குளுமை குடித்த காற்று
கள்ளமாய் வகுப்பறை நுழைந்து
நுனி தொட்டு
செல்லமாய் வருடிச் செல்ல
ஸ்பரிசத்தின் கூச்சத்தில்
சிலுசிலுத்து
படபடத்து
அடங்குகின்றன தேர்வுத்தாள்கள்!

உனக்கடுத்தாய் என் பெயரோ
எனது அடுத்தாய் உனதையோ
அல்லது இருபெயரையும்
சேர்த்தோ அழைக்க
ஆசிரியரிடம்
தாள் வாங்கி
திரும்பும் பொழுது
எதிர் எதிர் திசையில்
பயணிக்கும் அதிவேக இரயில்களாய்
கண்கள் நான்கும்
முட்டிக் தொட்டுக் கொள்ளும்!

அக்கணம்,
சூழ்நிலையெங்கும் இருள் கவிந்து
மின்னல் வெட்டி
மழை தன் ஆடை களைகிறது

அம்மணமான மழை
கண்ட வெட்கத்தில்
புன்னகை மொட்டொன்று
இதயத்தினுள்
மெல்ல அவழ்ந்து பூக்கிறது!
முகம் மலர்கிறது!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 04

இதுகாரும் உருகிய உயிர் காண :

02.,01

மற்றொரு மாலையில்... - 02

2.

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!



எப்போதோ
யாரோ
ஊர்பிள்ளைகள் மீதான
இரக்க்கத்தில் தந்த
இறக்கமான நிலமது!

மரங்களே வேலியாய்
தன்னிறமே என்னவென்று மறந்த
ஓடுகள் வேயப்பட்ட கட்டிடங்கள் பலதும்
அங்கொன்றும் இங்கொன்றும்
புது கட்டிடங்களுமாய்
எழுந்து நிற்கும் பள்ளிக்கூடம்!

சூரியன் சுட்டெரிக்கப் போகிறேன்
என்ற எச்சரிக்கை விடுத்து
ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில்
பவனி கிளம்பிய காலை வேளையில்

விடுமுறை கழிந்து
பள்ளி புகுகிறாய்!
நேற்று
புத்தம் புதிதாய் பூத்த பக்கங்களை
தாவணி தவழவிட்டு!

இதுநாள் உனை
காணா சோகத்தில்
சருகாயிருந்த மரங்கள்
மெல்ல உயிர் பெருகின்றன
வறண்ட காற்றாய் நுழைந்து
உன் உயிர்வருடி
தென்றலாகி திரும்பும் காற்றை சுவாசித்து!
மொட்டுகள்
பூக்க துவங்குகின்றன
அவசரமாய்
வசந்தத்தின் முதல்நாள் வந்ததென்று!

இவையாவும் கண்டும் காணாமல்
தாழ்வான அந்நிலத்தில்
தயவுதாட்சணம் ஏதொன்றொன்றும்
அறியா தேவதையாய்
அழகையெல்லாம்
அள்ளி தெளித்து;
முன்னேறுகிறாய்
பன்னிரெண்டாம் வகுப்பு 'அ' பிரிவு நோக்கி
காற்றுடன் உறவாடி வரும்
தாவணி முந்தானையால்
அனைவரையும் தூக்கிலிட்டபடி!

பூ மாறி பூ மாறி
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சிகளாய்
உனை மொய்த்து நகர்கின்றன
அனைவரின் பார்வைகள்!

இடது சடையின் ஓரமாய்
ஓரிடம் பார்த்து
ஓர் பூவாய் ஒய்யாரமாய்
அமர்கிறது என்னுடையது மட்டும்!

தரைக்கு கண் பார்க்கவிட்டு
நகர்ந்தவள்
நான் பார்க்கமட்டுமே என
நாணம் கரைந்தொழுகும்
ஓர் ஓரப்பார்வை வீசி கடந்துச் செல்கிறாய்!

விழி நுழைந்து
உயிர் தேடிப் புறப்படும்
அப்பார்வை பிடித்து
இதயத்தின் ஆழத்தில்
அழுத்தி பத்திரப்படுத்துகிறேன்
மழைத்துளி சேர்த்து
முத்து பிரசவிக்கும்
கடலாகிடும் ஆசையோடு!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 03

இதுகாரும் உருகிய உயிர் காண :

01

மற்றொரு மாலையில்... - 01

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு
எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி
நிரைகிறாய்!



ஆகாய சிலேட்டில்
சில ஆயிரம் பெளர்ணமிகள்
சில நூறு சூரியன்கள்
வரைந்து
எச்சில் தொட்டு அழித்து
காலக் குழந்தை விளையாடி
முடித்த ஒரு மாலை பொழுதில்

எதிர்பாரா திசையிலிருந்து
எதிர்பாரா கணத்தில்
தலை கலைக்கும்
காற்றின் வேகமாய்
கவனம் கலைக்கிறது
வழியனுப்ப வந்தவர்களுடன்
கலகலக்கும்
ஒரு குரல்!

அதே பூ முகம்
அதே உயிர் பறிக்கும் கண்கள்!

மெல்ல
இதயத்தின் 'தடக் தடக்'
ஓசையோடு ஒத்து
ஓடத் தொடங்குறது
வேகமாய் இரயிலும்!

நாளிதழில் முகம் புதைத்திருந்தவனை
மென்மையாக அதே குரல்
தட்டி எழுப்புகிறது.

'இந்த பெட்டியை கொஞ்சம்
இப்படி நகர்த்தி தருகிறீர்களா?'

நாளிதழ் நகர - என்
முகம் பார்த்ததும்
அவளும் ஒரு கணம்
மூர்ச்சையாகித்தான் போனாள்!

இரயிலோடு போட்டியிட்டு
பின்னால் நகர்ந்துக் கொண்டிருந்த
மரங்கள் வெறித்து வெறுத்து
கவனம் திருப்பிய நிமிடம்!

அதற்காகவே காத்திருந்தவளாய்
அதிரம் குவித்து
'நீங்க?'

'ப்ரியன்'

'நான் ப்ரியா' நினைவிருக்கிறதா?

'ம்!'

மறக்கக் கூடியதா?
அவள் நினைவுகள்!

மறந்தால்!நிலைக்ககூடியதா?
எந்தன் உயிர்!!

இனி உருகும் உயிர் காண : மற்றொரு மாலையில்... - 02