ஒற்றை சிறகு

கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!

- ப்ரியன்.

காலப் பறவை

இதயத் தரையெங்கும்
சிதறிக்கிடக்கும்
ஞாபக மணிகளைக்
கொத்தித் தின்றபடியே
பறந்து பயணிக்கிறது
காலப் பறவை!

- ப்ரியன்.

ஆதி 'முகம்'!

உலக மாற்றங்களின் வேகங்கள் ஏதும் இன்னும் அதிகம் பாதிப்பை உண்டாக்காத கிராமம் சென்றபோது படம்பிடித்த ஆதிவாசி குழந்தையின் படமொன்று!

ஒக்கேனக்கல் - சில படங்கள்

சமீபத்தில் ஒக்கேனக்கல் சென்றபோது எடுத்த படங்கள் இவை.கன்னடத்தில் 'ஒஹே' என்றால் புகை என்று பொருள்.தண்ணீர் விழுந்து புகை எழும்புவது தெரிகிறதா உங்களுக்கு?

அவனை முந்தானையாய் சுமக்கும் தருணங்கள்!

மொத்தம் எட்டு இடத்தில்
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான்
பிரம்மன் உன்னில் என்கிறான்!
அடக் கடவுளே!
எனக்கே தெரியாத இடத்தில் ஒன்றா?
எப்படி கண்டுகொண்டான் இவன்!

*

காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!

*

அவனை முந்தானையாய்
சுமக்கும் தருணங்களைவிட
அற்புதமான தருணங்களிருப்பதாய்
தெரியவில்லை எனக்கு!

- ப்ரியன்.

நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்!

மெல்ல மெல்ல
ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!

*

வாங்கி வந்த
புடவை அழகாயிருக்கிறது
எப்படி தேர்ந்தெடுத்தாய் என்றேன்!
'என் தேவதைக்கான புடவை என்றேன்;
நான் நீ என எல்லா புடவைகளும் ஓடி வந்தன!
மீண்டுமொருமுறை ஆழுத்திச் சொன்னேன்
என் தேவதைக்கான புடவை என்று!
இதனை முன்னுக்குத் தள்ளி மற்றது எல்லாம்
மூக்கை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டன'
என்கிறாய்!
முகமெல்லாம் வெட்கம் வடிய
நெஞ்சோடு சாய்ந்துக் கட்டிக் கொள்கிறேன் நான்!

*

வரும்போது
மல்லிகை கேட்டிருந்தேன்!
மறந்தவனிடம்
பேச மறுத்து
'உம்'மென்றிருந்தவளிடம்!
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!
கடவுளே,
இவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்!

- ப்ரியன்.

எனை முழுதும் எடுத்துக் கொள்!

ஆர்வமாய்
தொலைக்காட்சி பார்த்திருக்கையில்
வா!வந்து
வந்தமர்ந்துக் கொள்ளென
மடியில் அமர்த்திக் கொள்கிறாய்!
போ!
இனியெங்கே தொலைக்காட்சி பார்ப்பது!

*

என்னைப் பற்றி
எழுதுவதில் அல்ல!
உன் முதல் வாசகி என்பதிலேயே
பெருமையெனக்கு!

*

விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!

- ப்ரியன்.

முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!

*

மாராப்புக்கு
பின்போட்டுக் கொள்ளும் சமயங்களில்;
பின்னாக எனைக் குத்திக் கொள்ளேன் என்று
என்றோ அவன் சொன்ன
ஒற்றைவரி மனம் கொத்தி நிற்க
முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!

*

மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!

- ப்ரியன்.

பொன்ஸ் -- கருத்துக் கணிப்பு -- முடிவு

பொன்ஸ் பா.க.ச பதிவு போட்டு நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார் என்றாலும் லேட்டாகவாவது ரிசல்ட் கொடுக்க வேண்டியது கடமையாகிறது.

கருத்துக்கணிப்பு முடிவு :மொத்த வோட்டுக்கள் : 138
வேண்டும் : 109
வேண்டாம்! : 15
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! : 14

இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் - மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது.

எனவே , செல்லும் வோட்டுகள் 109 இவை அனைத்தும் வேண்டும்! என்ற தேர்வுக்கே செல்லுகிறது.எனவே கருத்துக் கணிப்பில் 100% சதவீதம் வேண்டும்! என்ற தேர்வுக்கே!

வோட்டு போட்ட அனைத்து பா.க.ச அன்பர்களுக்கும் + கள்ளவொட்டு போட்ட மக்களுக்கும் நன்றிகள் :)

வணக்கம் நண்பர்களே,

இந்த வார நட்சத்திர பதிப்பாளர் 'பொன்ஸ்' பற்றிய கருத்துக் கணிப்பு.இந்த வலைப்பூவில் என் கவிதைகள்(??) விடுத்து பதியப்படும் இரண்டாவது பதிவு இது.

பாலாபாயை கலாய்க்க இந்த பதிவென்பதால் இந்த சிறப்பு.பொன்ஸ் நட்சத்திர அந்தஸ்து பெற்றவுடன் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு நினைவிருக்கலாம்.இல்லாவிட்டால் மீண்டும் இங்கே

/*நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?*/

அதன் ஒரு முகமாக,இந்த கருத்துக் கணிப்பு(இன்னும் ஒண்ணு ஹி ஹி ஹி).நீங்கள் செய்ய வேண்டியது

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?

1.வேண்டும்
2.வேண்டாம்
3.பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!

என்ற மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது.'வேண்டும்' என எவ்வளவு முறை கள்ளவோட்டு போட்டாலும் கண்டுக் கொள்ளப்படமாட்டது ;).

வோட்டுப் பெட்டி இங்கே:
பா.க.ச பதிவு

நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?
வேண்டும்.
வேண்டாம்!!!
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!
கண்டுபிடியுங்கள் : என்ன மரம் இது?

இந்தப்படம் ஏதோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டதல்ல.என் மாமா தோட்டத்தின் கிணற்றுமேட்டில் எடுக்கப்பட்ட படமே.இங்கே இருக்கும் மரங்கள் என்ன மரம் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம்.கையில் பிடித்துள்ள பழம் அம்மரத்தின் பழமே.

க்ளூ : குயில்களுக்கு மிகவும் பிடித்த பழம் இது.