பூப்படைந்த கவிதை!

நானும் நீயும்
தூரமாயிருக்கும் போது
சுடுகின்ற
அதே மவுனம்!

அருகருகே இருக்கையில்
அழகாய் இடையில்
வந்தமர்ந்துக் கொள்கிறது!

*

என் கவிதை புத்தகத்தில்
கண் தெரியாதவள் போல்
வருடி நீ படித்த
அக்கவிதைதான்
பூப்படைந்த கவிதை!

*

உனைப் பார்க்கப் போகும்
அந்நொடியில்தான்
அடைப்பட்டிருக்கிறது
எந்தன் உயிர்!

*

உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!

*

உன் நினைவுகளை
அடுக்கி அடுக்கி வைத்ததில்
என் இதயம் ஆனது
பெரிய காதல் நூலகம்!

*

காதல் கடவுளிடம் கேட்டுவைத்தேன்
அவனுக்கே தெரியவில்லையாம் - இப்போது
உன் வாசலில் காத்து கிடக்கிறோம்
சாளரம் திறந்து சொல்லிவிட்டுப் போ
காதல் என்ன நிறம்!

- ப்ரியன்.

இங்கே காதலி = ப்ளாக்

மனதுடன் இணைந்த
காதலியை காண தடை
அம்முதல்நாளின் பரிதவிப்பு;

நண்பர்களின் துணையுடன்
காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு;

போராட்டங்கள்
ஏக்கங்களின் முடிவில்
காதலியுடன் கைக்கோர்க்க
அனுமதி
ஆகா பரவசம்.

இங்கே காதலி = ப்ளாக்

பரிதவிப்பு - தித்திப்பு - பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.

(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)

ஆறு கவிதைகள் 6!

நவீன் அண்ணாச்சி கூப்பிட்டாரு
வெற்றி அண்ணன் இழுத்துப் பார்த்தாரு
குமரன் அண்ணாத்தேயும் கொடஞ்சு கொடஞ்சு கேட்டாரு
ம் மசிவோமா நாம

இந்த அந்த ன்னு தள்ளித் தள்ளி
ஆறப் போட்டாச்சு ஆறு பதிவை
வேற ஒண்ணுமில்லை மக்களே
வழக்கம் போலதான்
வேலை மேலதான்
பழி!

இதோ என் 'ஆறு' பதிவு;படிச்சுட்டு ஒரு ஆறு பின்னூட்டமாவது வரணும் ஆமா!

*

ஆற்றிலிருந்து
தோண்டப்படுகிறது மணல்
அக்குழியிலேயே அவ்வாற்றை
சமாதியாக்க!

*

வெள்ளி ஒட்டியாணமாய்
ஆறு ஓடிய
எம் ஊரின் தெருவெல்லாம்
தண்ணீருக்காய்
பிளாஸ்டிக் குடங்களின்
தவங்கள் இன்று!

*

கால் நனைத்து
மனம் சில்லிடவைத்த
ஆற்றை இன்று கடக்கையில்
தட்டிவிழ வைக்கிறது - பல் இளிக்கும்
அதன் விலா எலும்புகள்!

*

ஊருக்கே தண்ணீர் கொடுத்த ஆற்றுக்கு
நாக்கு வறண்டு கிடக்கிறது
ஒரு குவளை தண்ணீர் தர யாருமில்லை;
தண்ணீரும் இல்லை!

*

கிராமத்துக்கு செல்லுகையில் எல்லாம்
ஏதாவதொரு மாற்றம் கண்ணில் படும்
ஆனாலும்,
பளேரென இதயத்திலேயே அறையும்
ஆற்றின் ஆழம்!

*

முந்நாட்களில்
தொப்பென குதிக்கையில்
கால் சல சலக்க நடக்கையில்
தவம் கலைந்த
அவசரத்தில் பறந்த கொக்குகள்;
வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
பேர பிள்ளைகளுக்கு
பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
என்னைப் போலவே!

*

- ப்ரியன்.

சிதறிய கனவுகள்!

மும்பையில் மூன்று வருடங்களுக்கு முன் "இந்தியா கேட்"டில் குண்டுவெடித்தப் பொழுது நான் மும்பையில் இருந்தேன்.அக்கணம்,அச்செய்தியை தொலைக்காட்சியில் கண்ட கணம் எழுதியது...இன்றும் மும்பையில் குண்டுவெடித்து இக்கவிதையோடு ஒத்துவருவது மனதினை என்னவோ செய்கிறது.இறைவா!இறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தா!இனி இது போலொரு கொடுமை நிகழாமல் காத்திடு!

மும்பையில் குண்டுவெடிப்பு
ஐம்பது பேர் பலி
அவசரம் காட்டும் சேனல்கள்!

இல்லையில்லை பலி எண்ணிக்கை
வெறும் நாற்பத்தொன்பதே
மறுக்கும் அரசாங்கம்!

ஊரிலிருந்து உறவுகளின்
உயிர்களை விசாரிக்கும்
தொலைப்பேசி அழைப்புகள்!

அண்டை நாட்டை அவசர அவசரமாய்
நினைவிற்கு கொணரும்
அமைச்சர்கள்!

அடுத்த ஆபரேசனுக்கு
ஆனந்தமாய் ஆயுத்தமாகும்
தீவிரவாதிகள்!

தேர்தலில் ஆதாயம்
பெறமுடியுமா ஆராயும்
எதிர்க்கட்சிகள்!

என்று,
இங்கு யாருக்குத்தான்
கவலை!
என்னைப் போன்ற
இறந்துப் போனவர்களின்
சின்னச் சின்ன
சிதறிய கனவுகளைப் பற்றி!

- ப்ரியன்.

சட்டென நனைந்தது நெஞ்சம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

இந்த பாடல் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் மாதவனும் சிம்ரனும் காதலிக்கும் "ப்ளாஷ் பேக்" (தமிழில்??) கில் வரும் காதல் பாடல்.என்னமாய் கரைந்திருக்கிறார் வைரமுத்து பாருங்கள்,அதே போல ஏ.ஆர்.ரஹ்மானும்.மணியும்,ஏ.ஆர்.ஆர் - உம் , வைரமுத்துவும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் :) இந்த பாடல் குறுந்தகட்டிலோ ,கேசட்டிலோ வரவில்லை.MP3 கோப்பு வேண்டுவேர் இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.(கேட்டதும் கூகிள் உதவியுடன் தேடி MP3 அனுப்பிய நண்பர் ப்ரேம்க்கு நன்றி)

பெரு விருட்சமாய்

என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!

*

உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!

*

எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!

*

இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!

*

எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!

*

கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!

- ப்ரியன்.