மந்திரி வந்தார்

மந்திரி வந்தார்
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

போலீசு படைசூழ
தொண்டர்கள் துதி பாட
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

வாராத மழை வந்தது போல
கார்கள் ஈசல்
கூட்டத்துடன்
மந்திரி வந்தார்;

பன்னிகள் மேய்ந்து திரிந்த
எங்கள் சாலைகள்
பளிங்கு சாலைகளாக
மந்திரி வந்தார்;

பெருமாளை சேவிக்கும்
பக்தனைப் போல
கும்பிட்டபடி
மந்திரி வந்தார்;

பணிவுக்கு புது இலக்கணம்
வகுத்தவர் போல
பெரியவர்கள் கால் தொட்டு
சின்னவர்கள் கை தொட்டு
பாட்டிகள் கூச்சம் கூட்ட
புகைப்பட கலைஞர்கள் நடுவினில்
மந்திரி வந்தார்;

அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடும் எங்களுக்கு
வாரி வாரி
அம்பதும் நூறும் தர
எங்கள் மந்திரி வந்தார்;

தினம் தினம்
வாழ்க்கை கூத்தாடும் எங்களுக்கு
கரகாட்டமும் பொய்க்கால் ஆட்டமும்
ஓசியில காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

ஒரு கார் கண்டால்
புழுதி பறக்கும் ரோட்டில்
ஒரு கையில் டவுசர் பிடித்து
துரத்தி ஓடும் பிள்ளைகளுக்கு
கார் பவனி காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

அடுத்த மாசம்
எலெக்சன்னு டீக்கடை
ரேடியோவில கேட்டதை
நியாபக படுத்தி போக
எங்கள் மந்திரி வந்தார்;

எல்லாதுக்கும் மேல
நான் இன்னும் உசிரோடதான்
இருக்கேன்; - அதனால
உங்க வோட்டு
எனக்குத்தான் என
சொல்லிவிட்டு போக
எங்கள் மந்திரி வந்தார்;

- ப்ரியன்.

உயிர் பறிக்கிறது காதல்!

தொட்டுத் தொட்டு
நீ பேச
விட்டு விட்டு
என் உயிர் பறிக்கிறது
காதல்!

- ப்ரியன்.

பிதற்றல் கடிதம்

காதல் காய்ச்சல் கண்டவன்
காய்ச்சல் முற்றலில்
வரையும்
பிதற்றல் கடிதம்தான்
கவிதை நடை
எதிர்பார்த்து ஏமாந்துவிடாதே!

அன்பே எனத்தெரியாது!
ஆருயிரே என பிணற்ற தெரியாது!
என் சொத்தே
என் பல் சொத்தையே
என உனை நகைக்க
வைக்க தெரியாது!

ஆனாலும்,
என் உயிர்
மொத்தமே நீதானடி...

உனை கண்ட அந்த
நொடிக்கு பின்தான்
அறிந்தேன்
என்னுள்ளும்
இதயம் என்று
ஒன்றிருப்பது!

கண்டுகொண்ட கணம் மட்டும் தான்
அது எனக்கு சொந்தமாயிருந்தது!
அப்போதே அது - சொல்லாமல்
உன் பின்னால்
சென்றாகிவிட்டது!

உன்னிடம் எது பிடிக்கும் என
தனியாய் கேட்க்காதே!

உன் கொடியிடை
தொடும் முடி பிடிக்கும்!
யாழ் கொஞ்சும்
குரல் பிடிக்கும்!
காற்றுக்கு வலிக்குமென
மெல்ல மூச்சு விடும்
நாசி பிடிக்கும்!
உள் மிடறும் தண்ணீரை
வெளி காட்டும் கழுத்து பிடிக்கும்!
சென்சாரில் சிக்கும்
சில பாகங்கள் பிடிக்கும்!
பேணிப் பேணி நீ வளர்க்கும்
உன் செல்ல சின்ன
தொப்பையும் பிடிக்கும்!
மெல்ல மெல்ல அடி வைத்து
உன் அடி பூமியில்
வரையும் ஓவியங்கள்
இல்லை காவியங்கள் பிடிக்கும்!
சின்ன சின்ன குழந்தைகளுடன்
கொஞ்சி விளையாடும்
உன் சின்னபிள்ளைதனம்
பிடிக்கும்!

மொத்தத்தில் சொல்ல போனால்
என்னை கொள்ளைக் கொண்டதனால்
காரணப்பெயர் கொண்ட - உன்
கொள்ளையழகு பிடிக்கும்!

இப்படியே சொல்லி
கிடந்தால் சீக்கிரத்தில் - எனக்கு
பைத்தியமும் பிடிக்கும்!

அதனாலே வரைகின்றேன்
இம்மடல்!
உனக்கும்
பைத்தியம் பிடிக்குமென்றால்
வா!
நம் கல்லூரி திடல்!

ஒற்றை மரத்தடியில்
காத்திருப்பேன்!
உயிரெல்லாம் சேர்த்து
பூத்திருப்பேன்!

வந்தால்,
உன் மடியில் விழும்
முதல் பூவாவேன்!
வராவிட்டால்?
என்னடி அம்மரத்தில்
ஒரு வேராவேன்!

- ப்ரியன்.

அவன்...அவள்...அவர்கள்...

முதல் சந்திப்பில்
இதயம் தொலைத்து
அவசர அவசரமாய்
தேடி எடுக்கையில்
மாற்றி எடுத்து
பரிதவித்த
அவனின்
அவளின்
அவர்களின்
டைரியிலிருந்து ;
அவர்கள் அறியாமல்
திருடப்பட்ட
சில குறிப்புகள்
இங்கு!

- ப்ரியன்.

வலைப்பூ : http://priyan4u.blogspot.com
மின்னஞ்சல்: mailtoviki@gmail.com

அவன்...அவள்...அவர்கள்
**********************

அவன்:
******
ஒரு அந்திப்பொழுதில்
கடல் ருசிக்கையில்
நீ,கடல் விளையாடும்
பிள்ளைகள் ரசித்திருந்தாய்!
கடல் சுகிக்க வந்தவன்
கடல்கன்னி ருசிக்க ஆரம்பித்தேன்!
கண்ட நீ வீசிய
அலட்சிய பார்வையில்
பிடித்துப் போனது உன்னை
எனக்கு!

அவள்:
******
உன் பார்வையில்
என் உயிர்
கசிய கண்டேன்.
அய்யயோ தவிர்த்தேன்
அதனால் இப்போது
தவிக்கின்றேன்!

அவன்:
******
உனையேதானே பார்த்துக்
கிடந்தேன்!
எந்நொடி எழுந்து போனாய்?
கடற்கரையை தவிக்கவிட்டு!
என்றாலும் என் மனதில்
உட்கார்ந்துகொண்டு!

அவள்:
******

உன் விழி சிமிட்ட
எடுத்துக்கொண்ட
அச்சமயத்தில்
எழுந்து ஓடிவந்தேன்!
நீ மட்டும்
சம்மணம் போட்டு
அமர்ந்து கிடக்கிறாய்
நெஞ்சினில்!

அவன்:
******
உனக்கும் என்போல்
இரசனைதான் போலும்
கடல் சுகிக்க வந்து
பிள்ளைகள் குறும்பு ரசித்து
எனை இன்று
தத்தளிக்க விட்டு போனாய்!
சுய அறிமுகம் செய்திருக்கலாம்!!

அவள்:
******
நல்லவன்தான் போலும்
கடல் சுகிக்க வந்து
எனை மட்டுமே பார்த்துகிடந்தான்
மற்றைப் பெண்கள் மேல் - உன்
கண்கள் மேயவில்லை!
நீ நல்லவன்தான் போலும்!
என்ன சார் பார்க்கின்றீர் என
பெயராவது கேட்டு தொலைத்திருக்கலாம்!!

அவன்:
******
உனக்காகத்தான்
இத்தனைக்காலம்
காத்திருந்ததா? - மனம்
கண்டவுடன்
உன்னை வந்து
கட்டிக்கொண்டதே?


அவள்:
******
உனக்காகத்தான்
காத்திருந்ததா?
என் பெண்மையுள்
மென்மையாய்
ஒற்றைப் பூ
பூக்கின்றதே!

அவன்:
******
இந்த ஊர்தானா நீ?
என்ன பேராய் இருக்கும்?
காதலே! - உலகின் வைத்தியமில்லா
பைத்தியமே
உந்தன்
விலாசம் மெல்ல மெல்ல
அறிகின்றேன்!
சீக்கிரம் வந்துவிடுவேன்!

அவள்:
******
நீ எந்த ஊரடா?
ஏது உந்தன் பேரடா?
போடா எதுவானால் என்ன?
காட்டிவிட்டாய் பைத்தியங்கள்
வசிக்கும் ஊருக்கான
வழி!

அவன்:
******
ஐயோ!
கடவுளே!
ஏனய்யா அவளை
கண்முன் காட்டினீர்?
வெறும் ஆண்மகனாய்தானே இருந்தேன்
அவளைக் காணும் வரை!
கண் விபத்து நிகழ்ந்த சில நொடியில்
போய்விட்டாள் அவளின்
பெண்மையில் கொஞ்சம் என்னில் புகுத்தி!
பார்,
இங்கு நான்
அழுது கொண்டிருக்கிறேன்
பெண்மகளைப் போல!

அவள்:
******
ஏன் கடவுளே
அவனை என்முன்
அழைத்து வந்தாய்?
பார்,
இந்த தாள் முழுவதும்
எழுதியதை
தொட்டுத் தொட்டு
மையின் தரம்
பரிசோதித்து பார்க்கிறது
என் கண்ண்¢ர் துளிகள்!

அவன்:
******
இனி உன்னைப் பற்றி
நினைந்து வருந்தபோவதில்லை!

"ஒன்றை நீ விரும்புவதானால்
அதை அதன் வழி விட்டுவிடு
உன்னுடையதானால் உன்னிடம்
திரும்ப வரும்!
இல்லையானால் இல்லை!"

அவள்:
******
அடேய்!
என்ன காரணம் கொண்டும்
உன்னைப் பற்றி
என் மனம் ஒரு போதும்
இனி நினையாது!

"If you love something, let it go,
If it comes back to you, It's yours
but if it doesn't, it never was"

காதல்:
******
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது!

கடவுள்:
*******
என் கணக்கு வழக்கை
மாற்றியெழுதிய கயவன் நீ!
அவர்கள் இன்னும் சிலநாள்
கழித்தே சந்தித்திருக்க வேண்டும்!
அதன் பின்னே - அவர்களைப் பற்றி
அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்!

காதல்:
******
அதனாலென்ன?

கடவுள்:
*******
முந்திக் கெடுத்த
முந்திரிக் கொட்டையே...
உன்னால் என் கணக்குவழக்குகள்
பாழானதுகளே!
அதனால்,அவர்களுக்கு
தரப்போகிறேன் ஒரு மிகப்பெரிய
தண்டனை!

காதல்:
******
ஐய்யகோ!
நான் செய்த பிழைக்கு - என்
பிள்ளைகளுக்கு தண்டனையா?
அடாது!
எனக்கே தாருங்கள்


கடவுள்:
*******
உனை தண்டித்தலும்
அவர்களை தண்டித்தலும்
ஒன்றுதான்!


அவன்:
******
அலுவலகத்தில் முதல்நாள்
ஆயிரம் கனவுகள்!
கேட்டு கேட்டு
வழிகண்டு
பயிற்சி அறை
நுழையும் கணம்
இரு விழிகள் எனைப்
பார்த்திருந்தன - அவை
சத்தியமாய்
உன் விழிகள்!

அவள்:
******
என் கண்மணிகளே
எப்படி கண்டீர்கள்?
வரப்போவது அவனென்று
அக்கணம் தானே
வாசல் பக்கம் பார்த்தீர்கள்!

அவன்:
******
முகமெல்லாம் மத்தாப்பு
உயிரெல்லாம் பூப்பு
அந்த அறையில்
யாரும் அறியாமல்
மெல்ல பறக்கத் தொடங்கினேன்
நான்!


அவள்:
******
கண்ணும் கண்ணும்
நோக்கியதில்!
என் உயிரெல்லாம்
உறிஞ்சப்பட்டது
பஞ்சாகப் பறக்கிறேன்
நானே நான்!


அவன்:
******
இரு நொடிக்கு
ஒன்று என
கணக்கு வைத்து
கண்கள் எடுத்தன
உனை ஆயிரமாயிரம்
புகைப்படங்கள்
அதில் ஓவ்வொன்றிலும்
காணக்கண்டேன்
உந்தன் உயிர்துளிகள்!

அவள்:
******
தெரியாத உன்
பெயரை ஆயிரமாயிரம்முறை
எழுத்தாணிக் கொண்டு
கீறி கீறி இதயம் முழுதும்
எழுதி செல்கிறது
மனம்!
உன் வழியே!

அவன்:
******
உந்தன் அறிமுகப்படலத்தில்
உச்சரித்தாய் திருநாமம்
"ப்ரியா"
கை எனக்கும் அறியாமல்
காகிதத்தில் எழுதியது
"ப்ரியனின் ப்ரியா"!

அவள்:
******
வணக்கம்!
இவன் "ப்ரியன்"
சொல்ல நீ,கேட்டு
மனம் எனை ஊமையாக்கி
சப்தமாய் உள்ளுள்
உச்சரித்துப் பார்த்தது
இல்லை உந்தன் பெயர்
"ப்ரியா ப்ரியன்"!

அவன்:
******
நீயும் நானும்
தனியே பேசியிருக்க
மெளனமாய் ஒட்டு
கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்
அவனைப் பிடித்து தனியே
விசாரித்ததில்
சிரித்து மழுப்பி
ஓடிப்போனான்
பதில்யேதும் பகராமல்!

அவள்:
******
நீ சொன்ன அதே அவன்
நேராய் என் வாசல்கதவு
தட்டினான்!
"காதல்" என் பேரென்றான்...
மறுபேச்சு ஏதுமில்லாமல்
ஓடி ஏறி அமர்ந்துகொண்டான்
என்னுள்
என் அநுமதியில்லாமல்!


அவன்:
******
பிறந்த நாள்,மாதம் சொல்லியவளை
கட்டாயப்படுத்தி
வருடம் கேட்டேன்!
கணக்குப் பார்த்து
மனம் பெருசாய் சுவாசித்தது!

அவள்:
******
உன் மனம்விட்ட
பெருமூச்சில் என் துப்பட்டா
பறந்துவிட பார்த்தது!
பெருமூச்சின் காரணம்
தெளிந்த மனம்
சன்னமாய் சிரித்து வைத்தது!

அவன்:
******
மறைத்து வைத்தல்
பாவமென்று!
மென்று மென்று துப்பினேன்
வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால்
"யுகம்யுகமாய்
எரியும் சூரியனாய்
என்னை எரித்து கொண்டிருக்கிறது
உன் நினைவு" - என்றேன்
பதிலேதும் இல்லாமல்
எழுந்து போனாய்!
எந்தன் உயிரை கத்தரித்து
போனாய்!

அவள்:
******
ஏனடா!
இவ்வளவு தாமதம்?
இங்கு நான் எரிந்து எரிந்து
தீர்ந்தே விடும்
நிலையிலிருக்கிறேன்!

அவன்:
******
உனக்கு விருப்பமில்லை
போலும்!
முகம் தெரியா இரவில்
உந்தன் முகம் மறந்து
அழுதால் மனம் ஆறும்
கடற்கரையில் அழுதால்
உப்பளவாவது விஞ்சும்!

அவள்:
******
எனை விட்டால்
அவனுக்கு அழ மடி?
இருக்கிறதே
கடல் மடி!

அவர்கள்:
********
அலைத்தொடும் தூரத்திலிருந்து
ஒரு அடி தள்ளியிருந்தவனை
ஒரு பூங்கை கோர்த்தது
தோள் சாய்ந்தது!
பார்க்காமல்,பேசாமல்
உன் வாசம் நுகராமல்
உணர்ந்தேன் "ப்ரியா".

நீ !பார்வையால்
"ப்ரியா" வென விழித்த நொடி
தலை மேலும் கீழும்
காற்றை வெட்டி சொன்னது!
ஆமாம்! நானும்தான்!

இருவரும் கண்ணீர்துடைத்து
மேல் வானம் பார்க்க!
தாயலையை தவிக்கவிட்டு
நம் அடி வந்து
நனைத்துவிட்டுப் போனது
குறும்பு குட்டி அலையொன்று!

காதல்:
******
ஹா!ஹா!ஹா!ஹா!
தண்டனை என்று
ஒன்றும் தராமல் விட்டீர்!

கடவுள்:
*******
தந்தேன் காதலே!
அறியாமல் விட்டாய் நீ!
சில நாள் கழித்து
சேர வேண்டியவர்களை
முன்னமே சேர்த்து வைத்தேன்!
காதலைவிட பெரிய
தண்டனை இல்லை
இருவருக்கும்!

- ப்ரியன்.

பார்வை

உன் பார்வை
என் விழியில்
செய்த நுண்ணிய;
மிக நுண்ணிய
ஓட்டையின் வழியே
முழுதாய் உள் புக்கு
என்னை
நிரப்பிவிடப் பார்க்கிறது
காதல் கடல்!

- ப்ரியன்.

மரம் கனவு

மேடானப் அப்பகுதியில்
ஒற்றை மரம்
துணையில்லாமல்!

பறவைகளின் பட்சிகளின்
குரல்களுக்கு மட்டும்
குறைவில்லாமல்!

ஒரு
நட்டநடு நிசியில்
நன்றாக உலகம் உறங்க
திடீரென தானே வேர்களை
பூமியிலிருந்து வெட்டி
மேலே பறக்கத் தொடங்குறது
மரம்!

திடுக்கிட்டுப் பார்க்கிறேன்
கொஞ்ச நேரம்
பேயரைந்தவன் போல்
பேச்சுவராமல்!

பறவைகளின் கதி
என்னவாகுமோ?
நித்திரையிலிருக்கும் பறவைகளை
எழுப்ப கத்தி கத்தி
வார்த்தை தொலைக்கிறேன்
சப்தம் மட்டும் வந்தபாடில்லை!

கை தூக்கி
மரம் பறக்கிறது
பட்சிகளுக்கு சைகை
காட்டுகையில்;
எந்திரிங்க அலுவலகத்துக்கு
நேரமாயிடும் மனைவின்
குயில் குரல் கேட்டு
விழித்தெழுகிறேன்!

சுற்றும் முற்றும்
பார்த்ததும் முடிவாகிறது
கண்டது கனவென்பது!

என்றாலும்,
பறக்கும் மரம்
பறவைகளின் கதி
நினைத்து தொலைக்கும்
மனது;
அடுத்த கனவு காணும் வரை!

- ப்ரியன்.

நீயும்???

நாம் சந்தித்த அந்நொடி

என் கண்கள்
உந்தன் கண்களை
காதலிக்கத் தொடங்கியது!

என் சுவாசம் - காற்றில்
உந்தன் மூச்சைப்
பிரித்தறிய கற்றுக்கொண்டது!

என் இதயம்
உனக்கும் சேர்த்து துடிக்க
பழகிக் கொண்டது!

இதை கண்ட
நான் கண்டு கொண்டேன்
நம் சந்திப்பிற்க்கு முன்னமே
நான் உன்னை காதலித்ததை!

நீயும்???

- ப்ரியன்.

சின்ன வயது நாங்கள்!

முன்னொன்று
பின்னொன்று
அதை தாங்க
தாங்கு சக்கரம்
மற்றிரண்டு!
இதுவெல்லாம் போதாதென்று
என்கால்கள் வேறு
அந்த பக்கம்
இந்த பக்கம் சாயும்
மிதிவண்டியின்
சமநிலை காக்க!

தத்தக்கா பித்தக்கா
நடையில்
தங்கை வந்து
தொற்றிக் கொள்ள
சத்தம் போட்டு
ஊரை கூட்டி
ஓட ஆரம்பிப்போம்
இரண்டு சக்கர
குட்டி மிதிவண்டியும்
ஓட்டுவதாய் சொல்லி
ஓடும் நானும்!

அண்ணா வேகம்
இன்னும் வேகம்
சொல்லி சொல்லி சிரிக்கும்
தங்கத்தின் சிரிப்பொலி
மயக்கத்தில்
தலை தெரிக்க ஓடும்
என்காலுடன் சேர்த்து
ஆறுகால் மிதிவண்டி குதிரை!

சந்தோசமாக ஓடும்வண்டி
குப்பற சாயும்
வழி கிடக்கும்
ஒற்றை கல் தட்டி!

அம்ம்ம்ம்ம்ம்மா என்றபடி
தங்கை சாய
அவளை தாங்க நான் சாய
மிதிவண்டி கிடக்கும் அடிபட்டு
சப்தம் கேட்டு வந்த அன்னை
கையில் சிராய்ப்பு
முட்டியில் அடி!
சொல்லி
எடுப்பாள் தடி
வேகமாய் ஓட்டிய எனை தண்டிக்க
தடி எனை தாக்க வரும் முன்
அம்மா வலிக்கல அம்மா
வலி பொருத்து
கண்வழி நீர் வழிய
தங்கை!

இன்னொருமுறை இப்பிடி பண்ணுனே
பிச்சுடுவேன்
நூறாவதுமுறை சொல்லி
தங்கை காயத்திற்கு
மருந்து தர செல்வாள்
அருமை அம்மா!

மருந்து வரும் முன்
காயம் தடவி
வலிக்குதா என கேட்டகையில்
ம்ம்ம்...இன்னொரு ரவுண்ட்
அழைச்சிட்டு போண்ணா
மழலையில் வந்த வலி காணாமல்
போகும் இருவரின் ரணம்!

ஆரவாரமாய்
தொடங்கும் அடுத்த ஆட்டம்
விழுந்து விழுந்து எழுந்தாலும்
அது எங்களுக்கு கொண்டாட்டம்!
எங்களின் பாசம் கண்ட
அம்மாவின் கண்ணில் தெரியும்
சந்தோசம்!

இப்போதும்
நானும் தங்கையும் சேர்ந்து
நடக்கையில்
எங்காவது எப்போதாவது
கண்ணில் தட்டுபடும்
எங்கள்
சின்ன வயது நாங்கள்!

- ப்ரியன்.

தூக்கமில்லா இரவு

மொட்டை மாடி;
முதல் தள அறை - அடுத்து
கீழ் தளம்
மாறி மாறி எங்கு படுத்தாலும்
தூக்கம்,வாடா வா
வந்து பிடி பார்க்கலாம் என
கண்ணாமூச்சி காட்ட!

கணிப்பொறி தட்டி வெறுத்து!

தொலைக்காட்சிப் பெட்டியில்
நூற்று இருபத்து எட்டு
சேனல்களும் தாண்டி!

எங்கோ குரைக்கும்
நாயின் ஓசைக்கு
காரணம் தேடி!

மதியம் தூங்கி தொலைத்ததின்
தாக்கம் என்ற
ஒன்றரை பருமன் மூளையின்
புத்திசாலிதனத்தை மெச்சி!

பிடிக்காத;
புரியாத
புத்தகத்தை
படித்து முடித்து!

மணி இரண்டு
நாளை கலந்துரையாடல் வேறு!
தூங்குடா என்ற
மனதின்
கட்டளை காப்பாற்ற முடியாமல்
தவித்து!

சரி,இது ஒன்றுதான்
பாக்கி என
"தூக்கமில்லா இரவு"
தலைப்பிட்டு எழுத
தொடங்குகையில்
எங்கிருந்தோ பறந்து வந்து
விமானம் போல் மெல்ல
என் மேல் இறங்கி
மயக்கத்தில் ஆழ்த்தும்
உறக்கம்!

- ப்ரியன்.

உன் பலம்

நீ!
நதிமூலத்தின்
முதல்துளி போல்
பரிசுத்தமானவன்!

நீ!
காடு கடையும்
வெள்ளம் போல்
வேகமானவன்!

நீ!
மலை தொங்கும்
அருவி போல்
பலமானவன்!

நீ!
சமவெளி தங்கும்
ஆறு போல்
வியஸ்திரமானவன்!

நீ!
ஆறு சேர்க்கும்
மண் போல்
சத்தானவன்!

நீ!
கடல் புகும்
நதி போல்
அமைதியானவன்!

நீ!
நதி சேர்த்துக் கொண்ட
கடல் போல்
ஆழமானவன்!

நீ!
கட்டியிழுக்க
காத்திருக்கின்றன
ஆயிரம் இமயங்கள்!

நீ!
உடைத்துப் போட
பார்த்திருக்கின்றன
திசைகள்!

நீ!
பறித்து விளையாடவே
படைக்கப் பட்டிருக்கின்றன
விண்மீன்கள்!

நீ!
நடக்கும் நடையில்
பொடிபடவே பரவிக் கிடக்கின்றன
தடைகள்!

உன்னை
உன்னையேதான் தர கேட்டான்
விவேகானந்தன்
ஒற்றை நூற்றாண்டுக்கு முன்!

நீ!
தோல்வி கண்டு
துவண்டு போனால்
அதுவே ஆகும்
உனக்கு சாக்காடு!

நீ!
தோல்வி முதல் படியாக்கி
ஏறி மிதித்து
வெற்றி தொட்டு பறித்தால்
உலகம் உருவாக்கிக் கொடுக்கும்
உனக்கொரு பூக்காடு!

வா,
உன் பலம் கொண்டு
தோல்விகளுக்கு எதிராய்
ஒரு வழக்காடு!

- ப்ரியன்.

முத்து

என் விழியில்
பத்திரமாய் விழுந்து
முத்தாய் முளைத்த
ஒற்றை மழைத்துளி
நீ!

*****************

என் உயிர்விதையை
உன் கடலுள்
பத்திரப்படுத்தி நீ
சமைத்த முத்து
நம் குழந்தை!

*****************

என்னுள் விழுந்த
உன் அழகை
மொத்தமாய் சொல்லமுடியாமல்
குட்டி குட்டியாய் சொல்லி
நான் படைத்த முத்துக்கள்
என் கவிதைகள்!

ஊடல்

உந்தன் கோபங்களும்
அது தொடரும் பேசாமையும்
இரணம் எனக்கு!
என்றாலும்,
பின் வரும்
சரணடைதல் பிடிக்கும்;
அதற்காகவே வேண்டுமாகிறது
உன் கோபங்களும்,பேசாமையும்
சில நேரங்களில்!

- ப்ரியன்.

சுய ஆறுதல் மொழி

கவிதைக் குறிப்பு
தொலைந்த
முதல்நிமிட மனபாரம்
தொடர்ந்து
மெதுவாகத் தோன்றும்
அக்கவிதை எனக்கு
விதிக்கப் பட்டதல்ல என்ற
சுய ஆறுதல் மொழி...

- ப்ரியன்.

காமத்துப்பால்

குறள் கூறும்
காமத்துப்பாலில்
முதல் அடி நீ
இரண்டாம் அடி நான்!

- ப்ரியன்.

நாட்குறிப்பு

என் நாட்குறிப்பை
நான் அறியாமல்
ரகசியமாய் திறந்து
அவள் நினைவை
பத்திரமாய் எழுதிவைக்கும்
காதல்!

- ப்ரியன்.

என் உலகம்

நீ என் உலகம் என்றேன்
நான்!
ம்...ஹ¤ம் நீ மட்டுமே
என் உலகம் என்று
திணர வைக்கிறாய் நீ!

- ப்ரியன்.

கிசு கிசு

உன் பெயரை நானும்
என் பெயரை நீயும்
ஒரே மரத்தில்
ரகசியமாய்
செதுக்கி வைத்ததில்
ஊர் முழுக்க
"கிசு கிசு" ஆகிப் போனது
நம் காதல்!

- ப்ரியன்.

வெட்கம்

கொஞ்சம் பொறு என
ரோஜாவை எடுத்து நீட்ட;
உன்னைவிட அழகாய்
வெட்கத்தில்
சிவக்கத் தெரியவில்லை
ரோஜாவிற்கு!

- ப்ரியன்.

என்னைத் தேடல்

என்னை நான்
தொலைத்துவிட்டேன்
அது உன்னிடம்தான்
இருக்கவேண்டும்
கொஞ்சம் தேடிப்பார்த்துச்
சொல்லேன்!

- ப்ரியன்.

மெளனம்

முதல் சந்திப்பில்
மெளனத்தையே பதிலாக
தந்தாய்...
ஆனாலும் உன் மனதில்
எழுந்த வார்த்தைகள்
கேட்கத்தான்
செய்தது எனக்கு !

- ப்ரியன்.

வராதே

"என் அருகே வராதே"
என்கிறாய்!
உன்னையே கட்டிக்கொண்டு
திரியும் இவன் காதலை
என்ன செய்வாய்?

- ப்ரியன்.

கலைடாஸ்கோப்

கலைடாஸ்கோப் பற்றிய
என் சின்னவயது சந்தேகத்திற்கு;
கண்ணாடி வளையல்
அணிந்த
அவளின் கைகளை
அப்படியும் இப்படியும்
திருப்பிக் காட்டி
இப்போது புரிய வைக்கப்
பார்க்கிறது காதல்!

- ப்ரியன்.

ஊஞ்சல் ஆடுகிறது காதல்!

அவளின் இதயத்தில்
ஒருமுனைக் கட்டி
எந்தன் நெஞ்சத்தில்
மறுமுனைக் கட்டி
பத்திரமாய்
சுகமாய்
ஊஞ்சல் ஆடுகிறது
காதல்!

- ப்ரியன்.

அழிச்சாட்டம் செய்கிறது என் காதல் குழந்தை

அதோப் பார்
நீதான் வந்து தொட்டுத்
தூக்க வேண்டுமென்று
உருண்டு பிறண்டு
கைகால் உதைத்து
கத்தி அழிச்சாட்டம் செய்கிறது
என் காதல் குழந்தை!

- ப்ரியன்.