Showing posts with label பிப்ரவரி. Show all posts
Showing posts with label பிப்ரவரி. Show all posts

மற்றொரு மாலையில்... - 11

கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!

விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!

என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!

அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.

அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;

என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட

அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.

அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க

கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!

மற்றொரு மாலையில்... - 10

உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!



நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...

மற்றொரு மாலையில்... - 09

காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!


பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

'படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!'
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
'இந்தா கோவில் பிரசாதம்'
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!

மற்றொரு மாலையில்... - 08

தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!

இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!

கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!

புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!

அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!

காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.

'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!

- உயிர் இன்னும் உருகும்.

மற்றொரு மாலையில்... - 07

தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!


பரிட்சைக்கு முந்தைய
கடைசி பள்ளி வேலை
நாளது;

படிக்க கொடுக்கும்
படிப்பு விடுமுறையை
களிக்க கணக்குப் போடும்
கூட்டம் ஒன்று!
விடுமுறையை தொடரும்
பரிட்சை பற்றிய
பயத்தில் பதறும்
கூட்டம் மற்றொன்று!

இவ்விரு வேறு
கூட்டத்தினிடையில்
பிரிவை எண்ணி
நடுநடுங்கி இருந்தன
இரு கூடுகள்!

கடைசியாய் பயந்தகிடந்த
அந்நிமிடம் வந்தேவிட்டது
அவ்வகுப்பறையில்
நம் கடைசி மணித்துளிகள்!

கையில் கிடைத்த
கூர்மை பொருள் கொண்டு
நீயே சாட்சியென
மேசையிடம் சொல்லியபடி
மேசையின் உள்பக்கம்
ஒரு பைத்தியமாய்
கிழிக்கிறேன்
இருவர் பெயரையும்!

வெட்டி தொங்கவிடப்பட்ட
தண்டவாள கட்டையில்
பள்ளி முடிந்தற்கான
அடையாளமாய்
நீண்ட மணி அடிக்கப்படுகிறது!
அது
ஏனோ உயிருக்கு
மணியடிப்பதாய் தோன்றுகிறது!

காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

தலைக்குனிந்து
நகர்ந்தவள்!
தூரமாய் சென்று
நின்று வகுப்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பக்கமாய் நான் வந்ததும்
'நல்லா படி!'
'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;
நீ சொன்ன
அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல
தைரியம் இல்லாதவன்
'ம்!' என்றபடி நகர்கிறேன்;
ஒரு குளத்தளவு நீரை
கண்ணில் தேக்கிக்கொண்டு.

- உயிர் இன்னும் உருகும்...

இதுகாரும் உருகிய உயிர் காண :

06.,05.,04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 06

ஒரு மரத்தடியில்
வசந்தத்தில் உனக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்!
காத்திருந்து நாட்கள் பல
கடந்த இக்காலத்தில்
காய்ந்த இலைகளை
பொழியத் தொடங்கிவிட்டன
மரங்கள் மழையாக!


கரையோரம் துள்ளும்
தங்க மீனாய்
ஆற்றின் ஓரம்
தோழியர் படைசூழ
தண்ணீருக்கு அடியிலும்
மேலுமென கழித்திருப்பாய்
வாரயிறுதி நாட்களை!

உனை இருநாள்
காணாமல் போனால்
இருண்டிடும் கண்களென
மனம் பகர
கால் முந்த
எத்தோச்சையாய் வருவதாய்
சமாதானம் சொல்லி
கடந்து நான்
அழகு கடத்திப் போகும்
அந்நாட்களில்
ஒரு புன்முருவல் பகிர்வோடு
முடிந்துபோகும்
நம் பேச்சு!

தொட்டுக் கொள்ள
உப்பும் மிளகாயும்
தின்றபின் சுவைக்கூட்ட
ஆற்று தண்ணியுமென
தோழியர்களுடன் நீ
குழுமியிருந்த நாளொன்றில்!

வழமைப் போல்
கண் பேசி
கடந்தவனை
இழுத்து நிறுத்தினாய்
'நெல்லிக்காய் சாப்பிடுகிறாயா?' எனும்
கேள்விக் கொக்கியால்!

அழகு
களவாட வந்தவன்
கண்கயிற்றாய் கட்டுண்டு
சொன்னேன்
'ம்!' அதுவே
ம் அவ்வளவே பதில்!
அதுவே முதலில் உன்னிடம்
பேசிய சொல்லும் கூட!
ஒற்றை எழுத்தானாலும்
ஓராயிரம் முறை
உயிர் சிலிர்த்திட
அதுவே போதுமானதாயிற்று!

இருந்த ஒற்றை
நெல்லிக்காயினை
ஓரக்கடி கடித்து தந்தாய்!

நெல்லிக்காய் தின்று
தண்ணீர் குடித்தால்
தொண்டைக்குழி இனிக்குமென்பது
அதுவரை கண்ட அனுபவம்!
ஆனால்
கடித்த பாகத்தின் ஓரம் ஒட்டிய
உன் எச்சில் திவலைகளை குடித்து
உயிரெல்லாம் இனித்தது
அன்று கொண்ட புது அனுபவம்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 07

இதுகாரும் உருகிய உயிர் காண :

05.,04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 05

உன் மெளனம்
மொழியும் மொழியின்
வீரியத்திற்கு முன்
என் கவிதைகள் எல்லாம்
ஏதுமற்ற சூன்யம்!


தமிழ் வகுப்பில்
காமத்துப் பாலிலும்
அகத்திணை பாடல்களிலும்
தலைவன் நானென
தலைவி நீயென
கனவெல்லாம்
தீண்டி உறவாடி
பேசித்திரிந்த நாளது!

பதிலுக்கு
முறைவைத்து
மருதாணியால் சிவந்த
உன் நகம்
வேதியியல் ஆய்வகத்தில்
தீண்டி வைக்க!

காப்பர் சல்பேட்டின் நீலமும்
காப்பர் குளோரைடின் பச்சையும்
பொட்டாசியம் குரோமேட்டின் மஞ்சளும்
பொட்டாசியம் டை குரோமேட்டின் ஆரஞ்சுமென
கலந்து இதய
வானமெங்கும் வண்ணமாய் வெடித்து சிதற!

ஸ்பரிச மயக்கத்தில்
அமிலம் மாற்றி ஊற்றிட
கையிருந்த கூம்பு
வெடித்து சிதறி
கண்ணாடி பூக்களை தூவியது!

எழுந்த புகையில்
கைப்பற்றி நடனமாடியிருந்தோம்
இருவரும்!

உள்ளங்கையளவு தண்ணீர்
முகத்தில் அருவியென தெளிக்க
கண்விழித்து பார்க்கையில்
சுற்றி வகுப்பு நண்பர்களின் முகமெல்லாம்
கவலை மேகம் சூழ
கிடந்திருந்தேன் தரையினில்!

அமிலம் அரித்த எரிச்சல்களை
அதை தொடர்ந்த
முதலுதவி மருந்துகளின் இரணங்களை தாண்டி
உணர்வின் அங்குலம் அங்குலமாய்
விஸ்வரூபம் எடுத்து
உயிர் எல்லாம்
பொழிந்து குளிரூட்டுகிறது
உன் விழியோரம் திரண்டிருந்த
இரு விழி கண்ணீர் துளிகள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 06

இதுகாரும் உருகிய உயிர் காண :

04.,03.,02.,01

மற்றொரு மாலையில்... - 04

தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!


காற்று குடித்து
உப்பிய சக்கர வயிறை
முள் கிழித்து
சப்பையாக்கிட
மிதிவண்டியை தள்ளியபடி
பயணிக்கிறாய் பள்ளி நோக்கி!

தாமதாமாய் புறப்பட்டு
கால இடைவெளியை
வேகத்தினால் நிரப்பிட
பறந்து முன்னேறி வந்தவன்
மிதிவண்டி தள்ளிவரும்
தாவணி மயிலைக் கண்டு
மிதிவண்டி மிதிப்பது விடுத்து
இறங்கி தள்ளி வருகிறேன்
துணைக்காய்!

பெரும் மெளனத்தோடு நகரும்
பிரயணத்தில்
அவ்வப்போது
பரிமாறிக் கொள்கிறோம்!
பட்டாம்பூச்சிகள் இமையானதென
சந்தேகம் கொள்ளுமளவு
படபடக்கும்
விழிகளோடு!

பார்வைகள் தொட்டு புணரும்
கணம் சட்டென
தலை தாழ்த்தி
நாணம் தரையெங்கும்
சொட்டச் சொட்ட
நடை பயிலுகிறோம்!

கட்டி கதைப்பேசியபடி
பின் தொடர்கின்றன - நம்
மிதிவண்டியின் சக்கர தடங்கள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 05

இதுகாரும் உருகிய உயிர் காண :

03.,02.,01

மற்றொரு மாலையில்... - 03

இசையின் குறிப்பாய்
பேசத் துவங்குகிறாய்!
எங்கோ!தூரத்தில்
இசைகிறது புல்லாங்குழல்
ஒத்தாக!


திருத்திய தேர்வுத்தாள்கள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
மதிப்பெண் வாரியாய்;

மரம் தங்கி
குளுமை குடித்த காற்று
கள்ளமாய் வகுப்பறை நுழைந்து
நுனி தொட்டு
செல்லமாய் வருடிச் செல்ல
ஸ்பரிசத்தின் கூச்சத்தில்
சிலுசிலுத்து
படபடத்து
அடங்குகின்றன தேர்வுத்தாள்கள்!

உனக்கடுத்தாய் என் பெயரோ
எனது அடுத்தாய் உனதையோ
அல்லது இருபெயரையும்
சேர்த்தோ அழைக்க
ஆசிரியரிடம்
தாள் வாங்கி
திரும்பும் பொழுது
எதிர் எதிர் திசையில்
பயணிக்கும் அதிவேக இரயில்களாய்
கண்கள் நான்கும்
முட்டிக் தொட்டுக் கொள்ளும்!

அக்கணம்,
சூழ்நிலையெங்கும் இருள் கவிந்து
மின்னல் வெட்டி
மழை தன் ஆடை களைகிறது

அம்மணமான மழை
கண்ட வெட்கத்தில்
புன்னகை மொட்டொன்று
இதயத்தினுள்
மெல்ல அவழ்ந்து பூக்கிறது!
முகம் மலர்கிறது!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 04

இதுகாரும் உருகிய உயிர் காண :

02.,01

மற்றொரு மாலையில்... - 02

2.

சாபமென்றால்
வதைப்பட நான்
வதைக்க நீ!

வரமென்றால்
பக்தனாய் நான்
அருள்பாளிக்கும் அம்மனாய் நீ!

சொல்,
என் காதல்
வரமா?சாபமா?!



எப்போதோ
யாரோ
ஊர்பிள்ளைகள் மீதான
இரக்க்கத்தில் தந்த
இறக்கமான நிலமது!

மரங்களே வேலியாய்
தன்னிறமே என்னவென்று மறந்த
ஓடுகள் வேயப்பட்ட கட்டிடங்கள் பலதும்
அங்கொன்றும் இங்கொன்றும்
புது கட்டிடங்களுமாய்
எழுந்து நிற்கும் பள்ளிக்கூடம்!

சூரியன் சுட்டெரிக்கப் போகிறேன்
என்ற எச்சரிக்கை விடுத்து
ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில்
பவனி கிளம்பிய காலை வேளையில்

விடுமுறை கழிந்து
பள்ளி புகுகிறாய்!
நேற்று
புத்தம் புதிதாய் பூத்த பக்கங்களை
தாவணி தவழவிட்டு!

இதுநாள் உனை
காணா சோகத்தில்
சருகாயிருந்த மரங்கள்
மெல்ல உயிர் பெருகின்றன
வறண்ட காற்றாய் நுழைந்து
உன் உயிர்வருடி
தென்றலாகி திரும்பும் காற்றை சுவாசித்து!
மொட்டுகள்
பூக்க துவங்குகின்றன
அவசரமாய்
வசந்தத்தின் முதல்நாள் வந்ததென்று!

இவையாவும் கண்டும் காணாமல்
தாழ்வான அந்நிலத்தில்
தயவுதாட்சணம் ஏதொன்றொன்றும்
அறியா தேவதையாய்
அழகையெல்லாம்
அள்ளி தெளித்து;
முன்னேறுகிறாய்
பன்னிரெண்டாம் வகுப்பு 'அ' பிரிவு நோக்கி
காற்றுடன் உறவாடி வரும்
தாவணி முந்தானையால்
அனைவரையும் தூக்கிலிட்டபடி!

பூ மாறி பூ மாறி
தேன் ருசிக்கும் பட்டாம்பூச்சிகளாய்
உனை மொய்த்து நகர்கின்றன
அனைவரின் பார்வைகள்!

இடது சடையின் ஓரமாய்
ஓரிடம் பார்த்து
ஓர் பூவாய் ஒய்யாரமாய்
அமர்கிறது என்னுடையது மட்டும்!

தரைக்கு கண் பார்க்கவிட்டு
நகர்ந்தவள்
நான் பார்க்கமட்டுமே என
நாணம் கரைந்தொழுகும்
ஓர் ஓரப்பார்வை வீசி கடந்துச் செல்கிறாய்!

விழி நுழைந்து
உயிர் தேடிப் புறப்படும்
அப்பார்வை பிடித்து
இதயத்தின் ஆழத்தில்
அழுத்தி பத்திரப்படுத்துகிறேன்
மழைத்துளி சேர்த்து
முத்து பிரசவிக்கும்
கடலாகிடும் ஆசையோடு!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 03

இதுகாரும் உருகிய உயிர் காண :

01

மற்றொரு மாலையில்... - 01

கண்களை இறுக மூடுகிறேன்
மெல்ல
இருள் படரத் தொடங்குகிறது!
ஒன்று இரண்டு
எனத் தொடங்கி
பின்
ஆயிரமாயிரம் பிரதிகளாய்
விழியெங்கும் விரவி
நிரைகிறாய்!



ஆகாய சிலேட்டில்
சில ஆயிரம் பெளர்ணமிகள்
சில நூறு சூரியன்கள்
வரைந்து
எச்சில் தொட்டு அழித்து
காலக் குழந்தை விளையாடி
முடித்த ஒரு மாலை பொழுதில்

எதிர்பாரா திசையிலிருந்து
எதிர்பாரா கணத்தில்
தலை கலைக்கும்
காற்றின் வேகமாய்
கவனம் கலைக்கிறது
வழியனுப்ப வந்தவர்களுடன்
கலகலக்கும்
ஒரு குரல்!

அதே பூ முகம்
அதே உயிர் பறிக்கும் கண்கள்!

மெல்ல
இதயத்தின் 'தடக் தடக்'
ஓசையோடு ஒத்து
ஓடத் தொடங்குறது
வேகமாய் இரயிலும்!

நாளிதழில் முகம் புதைத்திருந்தவனை
மென்மையாக அதே குரல்
தட்டி எழுப்புகிறது.

'இந்த பெட்டியை கொஞ்சம்
இப்படி நகர்த்தி தருகிறீர்களா?'

நாளிதழ் நகர - என்
முகம் பார்த்ததும்
அவளும் ஒரு கணம்
மூர்ச்சையாகித்தான் போனாள்!

இரயிலோடு போட்டியிட்டு
பின்னால் நகர்ந்துக் கொண்டிருந்த
மரங்கள் வெறித்து வெறுத்து
கவனம் திருப்பிய நிமிடம்!

அதற்காகவே காத்திருந்தவளாய்
அதிரம் குவித்து
'நீங்க?'

'ப்ரியன்'

'நான் ப்ரியா' நினைவிருக்கிறதா?

'ம்!'

மறக்கக் கூடியதா?
அவள் நினைவுகள்!

மறந்தால்!நிலைக்ககூடியதா?
எந்தன் உயிர்!!

இனி உருகும் உயிர் காண : மற்றொரு மாலையில்... - 02

கையசைத்து நகர்ந்தது இரயில்!

யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் :)

என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.

:) மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு :)


காதல் 01

டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!

காதல் 02

"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை!

காதல் 03

சத்தியமாய்,
இன்றைய தேதிவரை
அன்றைய நாள்தான்
இனியநாள் எனக்கு!

காதல் 04

பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
"புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு"
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?

காதல் 05

என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!

காதல் 06

எப்படி இருப்பாள்? எப்படி இருப்பாள்? -
நண்பர்களின் தொடர் கேள்விக்கு
எப்படி இருக்கவேண்டுமென்று
கனவு கண்டேனோ
அப்படி இருப்பாள் எனச்
சொல்லி தப்பிவந்த நாளில்,
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்
இடம் கிடைத்தும் வேண்டாமென்று
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி
வருத்தப்பட்டாள் உன் அம்மா
குதூகலப்பட்டது என் ஆன்மா!

காதல் 07

எப்படி உணர்ந்தேனா?
உன்னுடன் முதல்நாள்
கல்லூரி வரும்போது
எப்படி உணர்ந்தேனா?
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!

காதல் 08

நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!

காதல் 09

நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!
தனிமை துணையாய் போனது!
மொட்டைமாடி இரவு
கையில் புகை
நண்பர்களுடன் அரட்டை! - என்றிருந்த
அடையாளம்
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!

காதல் 10

கல்லுரிச் செல்லும்
காளையர்களின் கனமான
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
உன்னுடனான பேருந்து
பயணத்திற்கு!

காதல் 11

தனியே உனை அனுப்பவாதா? - உன் அப்பா
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல
பூவானது பின் இருக்கை!

காதல் 12

தினம் தினம்
அலுங்காமல் குலுங்காமல்
தேரில் உலாவரும்
அம்மனைப் போல்தான்
அழைத்துச் செல்வேன்!
நீயும் வழிதோரும் காணும்
பிள்ளைகளுக்கு எல்லாம்
புன்னகை வரம் அளித்துக்
கொண்டே வருவாய்!
இவன் மனம் மட்டும் குண்டு
குழி தேடித் தேடி குதித்து
தரிக் கெட்டு ஓடிவரும்!

காதல் 13

கடைசிவரை யாரென
கண்டறிய இயலவில்லை
நம்முடன்
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்
"பஞ்சர்" ஆக்கிய
களவானி யாரென்று!

காதல் 14

பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்
நீதான் கோலம் போடுவாய்!

போக வர பார்த்திருக்கிறேன்
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி
வழிந்து கொண்டிருக்கும்
என்வீட்டு கோலம்
உன்வீட்டு கோலத்திடம்!

காதல் 15

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
புடவைக் கட்டிக்கொண்டு
வந்த அந்நாளில்
நிலவில் முட்டி நின்று
அம்மாவிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டதை!

காதல் 16

காதலர் தினமன்று
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு
நீ கொடுத்த பதிலடியில்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி ஒளிந்துக் கொண்டது
என் தைரியம்
தற்காலிகமாய்
என் காதலும்!

காதல் 17

அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!

காதல் 18

ஒரு மழைநாளில்
அம்மாவீற்கு முடியாமல்போக
நீ செய்த உதவி கண்டு
அம்மா சொன்னாள்
"இவளைப் போல்
ஒரு மருமகள் வேண்டும்"
இவளே மருமகளாய் வேண்டும்
உனக்கு!
பாவமாய் வேண்டியது இதயம்!

காதல் 19

உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்
காற்றிலாடும்
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!

"கூந்தலில் தொங்கிக் கொண்டு
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!"

கேட்டவள்,கொஞ்சம் முறைத்து
சடசடவென
சிரிப்பூ தூவினாய்!

அடடா!கவிஞனே!
இன்னும் சொல்லேன்!
என நீ கேட்க
முதன்முதலாய்
வெட்கம் கற்றேன்!

காதல் 20

கவிதையாய் நான் சொன்ன காதல்
உனக்குப் புறிந்ததோ?
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?
எண்ணி மயங்கிகிடந்த நாளில்
மொட்டைமாடி இரவில்
"விக்கி" எனக்கொரு கவிதை வேண்டும்
என் 'கவி'தைக்கு இல்லா கவிதையா?
சொல்ல வந்த கணம்!
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்
என் காதலனுக்கு தர...
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;
இன்றைக்கும்,
அதோ!அங்கு வானெங்கும்
நட்சத்திரங்களாய்
சிதறிக் கிடப்பவை
இதயம் சிதறிய சில்லுகள்!

காதல் 21

அவளோ?இவளோ!
என் காதலி என
பார்வை வீச வேண்டிய வயசடி!
அவனோ?இல்லை இவனோ?
உன் காதலன் என
நீ பேசும் ஆணிடமெல்லாம்
பொறாமை பார்வை வீச வைத்தாயே
கொடுமையடி கொடுமை!

காதல் 22

நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;

உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!

காதல் 23

அவன் அப்படிச் சொன்னான்
இப்படி சொன்னான்
என காதலன் புராணம்
நீ பாடி சிலாகித்திருக்க
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்
மனதின்
மூலையில் குத்தவைத்து
அழுது கொண்டிருக்கும்
என் காதல்!

காதல் 24

அறிமுகப்படுத்தியதில்லை;
தூரமிருந்தும் அடையாளம்
காட்டியதில்லை;
உன் காதலனின்
பெயரும்கூட அறிய தந்ததில்லை;
ஆனாலும்
உன்னை விடுத்துப் பார்த்தால்
நான் மட்டுமே அறிவேன்
உன் காதலனை
உன்னுள் இருக்கும் காதலை;
இருக்கட்டும்
அவன் வரம் பெறவதற்கென்றே
பிறந்த ஆடவன்;
நான் சாபம் வாங்கவே
வந்த முடவன்!

காதல் 25

மொட்டைமாடியில் அமர்ந்து
கல்லூரி
கடைசி வருடத்தின்
கடைசி தேர்வுக்காக
படித்துக் கொண்டிருக்கையில்;
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை
அனுமதி இல்லாமல்
எடுத்துப் பார்த்தவள்
கவிதைகள் எல்லாம்
உன்னைக் குறித்து இருக்க
பட்டென முடி
சட்டென பறந்து போனாய்;
ஆற்றி முடியாமல்
அழுது கொண்டே இருந்தது
அம்மா நீ
சொல்லாமல் போனாதாய்
கவிதை!

காதல் 26

அடுத்தடுத்த நாட்கள்
பேசாது நீயிருக்க
ஊமையாகிப் போனது
நான்!
ஊனமாகிப் போனது
மனது!

காதல் 27

கல்லூரி கடைசிநாளில்
எல்லோரும்
கலந்திருக்க
பிரிவு் கவலையில்
கரைந்திருக்க!
என் கண்களும்
அழுது கிடந்தன
நீ பேசாததால்
இறந்துப் போன - எந்தன்
இதயத்திற்காக!

காதல் 28

விடுமுறைக்கு ஊருக்கு பயணம்
வழியனுப்ப வலிய எனை
அனுப்பும் உன் அப்பா!
பாதையெங்கும் மெளன
முட்களுடன் பயணம்!

குடிக்க தண்ணீரும்
படிக்க சில புத்தகங்களும்
வாங்கி வந்தவனுக்கு
நன்றிகூட இல்லாதா நீ!

கைப் பையை கூட
என்னிடம் தராமால்
அந்நியமாய் நீ!
முதன்முதலாய்
உன் அண்மை வேண்டா
நிமிடங்கள் அவை!

மெல்ல மெல்ல
இரயில் நகர ஆரம்பிக்க
போ!போ!
மனம் சொல்ல
போய் ஏறிக் கொள்
என கடைசியாய் என் மெளனமும்
கலந்த வினாடியில்!

'உன்னை விட்டுப் போவேனோ?
என் உயிரை தனியே விட்டு போவேனோ?'
என நீ கட்டியணைக்க
கூவி அழைத்து
கையசைத்து நகர்ந்தது
இரயில்!

நிமிர்ந்து பார்த்தவள்
நீ தான்டா இத்துணை நாட்களாய்
நான் சொல்லிச் சொல்லி
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து
அப்போதும் 'பெயர்' சொல்லாமலே
சொல்ல

அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!

- ப்ரியன்.

மடலாடலுக்கு : mailtoviki@gmail.com

காதல் கவித்தொடர்

முன்னுரை

வணக்கம் நண்பர்களே!

நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்!

விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி!

முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்...தமிழ் கொண்ட வெற்றி!

உண்மையில் "விக்கி","வித்யா","சின்னி","அம்மா","அப்பா" அப்புறம் "கலை" தவிர மற்றவை கற்பனையே! ம்.ப்ரியாவும்...மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலையைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை...அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்...இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் "மெயிலி" கேட்டபடி உண்மை சம்பவமொன்றுமில்லை!

நன்றி சொல்லவேண்டிய நேரம்!உயிர் கொடுத்து வளர்க்கும் தாய்க்கும்!எல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்க! எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும்!கன்னடம் பேசும் எனையும் ஒரு பொருட்டாய் மதித்து என்னிடம் தங்கி நிற்கும் என் தமிழுக்கும்!தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப
நெங்சங்களுக்கும்!இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்...முகம் கூட தெரியாமல் "மெயிலி" உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்!கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை "ப்ரியா"விற்கும்!ஐயோ கோபிக்காதே காதலே...தமிழும் நானும் தடுமாறி பாதைதெரியாமல்
முழித்த நேரமெல்லாம்...கைப்பிடித்து வழி காட்டி அழைத்து வந்த குழந்தை "காதல்" உணர்ச்சிக்கும்...

இது சமர்ப்பணம்!

சிலருக்கு பிடித்திருக்கலாம்! - மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! - மன்னிக்க!

மீண்டும் இம்சிக்கவோ! மகிழ்விக்கவோ!
கட்டாயம் வருவேன்...இப்போதைக்கு விடைக்கொடுங்கள்!

திட்டோ?பாராட்டோ?

mailtoviki@gmail.com அனுப்புங்கள்!

நன்றி!

ப்ரியமுடன்
("ப்ரியாவுடன்"னு போட வேண்டிக்கோங்க!)
ப்ரியன்...


மொட்டு

காதல் - 1

16.7.2001 திங்கட்கிழமை
"விழியீர்ப்பு விசைகள்"
வாசித்துக் கொண்டிருக்கையில்தான்
நுழைந்தாய் எதிர்வீட்டுத்
தோழியின் புதுத்தோழியாய்!

காதல் - 2

டேய் இது "ப்ரியா"
அடுத்த வீட்டில் புதுசா
குடிவந்திருக்காங்க - தோழி...

அறிமுகத்தில்
"வணக்கம்" சொல்லி நீ
கைக்குவிக்கையில்

எதோ உள்ளுடைந்து
அலறியது;

இவள் இவள்
இவளேதானென்று!!!

காதல் - 3

அம்மா குங்குமம்
இட்டு - மகாலட்சுமியாய் இரு
வாழ்த்தினார்கள்
வழக்கமானதுதானென்றாலும்
மருமகளை வாழ்த்தியதாய்
பட்டது எனக்கு!

என்றும் மலரா
குறிஞ்சிப் பூ!
எங்கள் வீட்டு ரோஜா!!
உந்தன் கூந்தலில்
தங்கையின் தயவு!

நாய்க்குட்டியும் கூட
உன் காலடியில் அடிபடாமல்
சுற்ற கற்றுக்கொண்டது!

நான் மட்டுமே
தள்ளி நின்று
ரசித்தேன்!
தோழியின் கேலிப்
பார்வையினுடே!

கண்டிப்பாக அன்று
திருஷ்டி கழித்திருப்பார்கள்
உன் வீட்டில்!!

காதல் - 4

நீ வந்து சென்ற
கணத்தில் டைரி
சுமந்தன இரு கவிவரிகள்!

கொஞ்சம் தள்ளி
நின்று ரசித்தேன்
அவையிரண்டும் நீ
விட்டுப் போன
உன்னிரு கருவிழிகள்!

காதல் - 5

உனக்கு பிடித்த
சுஜாதாவும் வைரமுத்துவும்
என்னிடத்தில் இருந்ததில்
செளகரியம்
அடிக்கடி வந்துபோனாய்!

காதல் - 6

தோழியும் நானும்
பேசிக் கொண்டிருக்கையில்
சத்தமிடாமல் இடையில் வந்தமர்ந்தாய்!
ஒரு உலகப் போர்
தொடங்கியது நெஞ்சில்!

காதல் - 7

அம்மாவின் அழைப்பிற்கு
தோழி நகர்ந்துவிட!

வானம் பார்த்தும்
பூமி கண்டும்
அமர்ந்திருந்த நம்மை
புன்னகைத்த படியே
மெதுவாய் கடந்தது
கடிகாரம்!

மெதுவாக நீதான்
அரம்பித்தாய்!
"கவிதை எழுதுவிங்களாமே"
'கலை' சொன்னா...

மேலன்னதில் ஒட்டிய
நா விழ மறுத்ததில்
என் புன்னகையால் கழுவப்படுவதற்காகவே
அமைந்ததாய் ஆனது அந்நிமிடம்!!

காதல் - 8

அடுத்த நாளே என்
பழைய கவிதைகளைத்
தேடித் தேடி
புதிதாய்
புனைப் பெயர்
எழுதித் தந்ததாய்,
ஞாபகம்!

காதல் - 9

அடுத்த நாள்!
கவிதைகளைக் கைசேர்த்தவள்!
விமர்சனம் ஏதும் சொல்லாமல்

காதல் கவிதை
எழுதுவீங்களா?

கேட்டபோது
'ம்' என்ற வார்த்தை
மட்டுமே துப்ப முடிந்தது!
இப்போது அதை மட்டுமே
எழுதி தொலைக்கிறேன்
என்பதை மனதில் சுமந்துகொண்டு!

சிரமப்பட்டு உச்சரித்தாய்
எனக்காக ஒன்று வேண்டும் நாளை!

'கண்டிப்பாக'
என்னை அடக்கிவிட்டு
உற்சாகமாய் துள்ளிக்குதித்து
உரக்கச் சொன்னது
உள்ளிருந்த கவிதை!

காதல் - 10

வெளியே போய்வந்தவன்
வீட்டையேப் புரட்டிப் போட்டேன்!
கவிதைக் குறிப்புகளைக்
காணோமென்று!
அம்மா மெதுவாகச்
சொன்னாள்;
நீ வந்துச் சென்றாயென்று!

நீ எடுத்துச் சென்றிருக்க மாட்டாய்!
எனக்குத் தெரியும்!
பழகிய நாய்க் குட்டியென
அவைதாம் உன் பின்னால்
ஓடி வந்திருக்கும்!

காதல் - 11

நன்றி கெட்டதுகள்!!
காகிதம் போட்டும்
மசி ஆகாரமிட்டும்
வளர்த்தவனைவிட்டு!

நேற்று வந்தவளுடனா
ஓடிவிட்டீர்?!
மறுபடியும் காலெடுத்து
வையும் காலொடித்து விடுகிறேன்!

உரக்கமாய் உலறியவனை
அம்மா சிரித்தவாறே
தலையில் அடித்துக் கொண்டு
"வித்யா இவனுக்கு முற்றிவிட்டது"
தங்கையிடம் சொல்வதாய் என்னிடம்
சொல்லியவாறு நகரலானார்!

உள்ளே உறங்கப்போன தங்கைகூட
குரலுக்கு ஒர் கணம்
எட்டி சிரித்து விட்டுப் போனாள்!

ஆகா,இவர்களுக்கு புரிந்து விட்டது!!!

உனக்கும் கவிதைகளின்
உலறல் புரிந்துபட வேண்டும்!!
ஏக்கம் ஒருபுறம்!!

புரிந்துபடுமோ??பயம்
ஒருபுறம்!!

உன் உணர்ச்சி காண
கவிதை தாங்கி நின்ற ஓர்
காகிதமாயிருந்திருக்கலாம்
அன்று மட்டும்! - தவமொருபுறம்!!அழகான அவஸ்த்தை
இரவு முழுவதும்!!

காதல் - 12

பத்திரமாய் கைச் சேர்த்தாய்!
ஆயிரம் முறை மன்னிப்புக் கோரினாய்!
அற்புதமென்றாய்!
யாரவளென்றாய்!

பாவிகளா?இதை கூட சொல்லாமல்
இந்நேரம் என்னடா செய்தீர்கள்;
அவள் வீட்டில்! கடிந்து கொண்டேன்
கவிதைகளிடம்!

ஒருவேளை உன்வாசிப்பை
தாலாட்டு என உறங்கி
போனதுகளோ??

மனம் முழுவதும்
குழப்பரேகைகள்!
உன் முகம் மட்டும்
பாலில் துடைத்த
நிலவென தெளிவு!

சொல்லுடா சொல்லுடா!
அவள் நீதானென்று
சொல்லிவிடுடா!
உன் மனம் கதறிய வார்தைகள்
அன்று கடைசி வரைஎனக்கு கேட்கவே இல்லை!

காதல் - 13

சில நாள்
செலவில்...
புனைப்பெயரின் விளக்கம்
கேட்டாய்!!

புரியவில்லையா?
என் மனம் வினவியதும்;
என் பெயர்தானே??
உன் மனம் முணுமுணுத்ததும்;

கேட்டுவிட்ட
தோழியின்,அம்மாவின்
நமட்டுச் சிரிப்பு!!

இன்னமும் கண்களில்!!

காதல் - 14

தங்கையிடம் காட்டிய
புதுப்பாசம்!

தாயிடம் பகிர்ந்துகொண்ட
புதுநேசம்!

அப்பாவிற்கு காட்டிக்கொடுத்திருக்கும்
நான் காதலிலிருப்பதை!

என்னடா?ஆள் புதுசா இருக்கே?
ஏதாவது காதல் கீதலா??
அப்பா கேட்ட போது...

அது வந்துப்பா...
ஒண்ணுமில்லையே!
தட்டுத் தடுமாறி
மழுப்புகையில்!

"சீக்கிரம் சொல்லிடுடா இல்லாட்டி
உன் அம்மா மாதிரி
ஒருத்திகிட்டே தான் கடைசிலே
மாட்டிக்குவே!"

சொல்லிய அப்பாவிற்கும்
அம்மாவிற்கும் மெலிதாய்
செல்லச் சண்டை துவங்கிய கணம்;

எத்தோச்சையாக வந்து
ஓடிப்போனதாகச் சொன்னது
உன் ஓட்டத்துக்கு
ஈடுகொடுக்காமல்
பின்தங்கிப் போன கூந்தல் வாசனை!

காதல் - 15

"ப்ரியா"வைக் காதலிக்கிறாயா?

இது நண்பியின் முறை!

"ம்" என்றது மனம்!

இல்லை என இப்படியும்
அப்படியும் ஆட்டும்
தலை மட்டும்!

தெரியவில்லை குளறியது
நா மட்டும்!

கண்டிப்பா அதுதான்!

அவகிட்டே சொல்லிடுட்டா??
கேட்டபடியே நகர்ந்த தோழியை
வேண்டாம் வேண்டாம்
முணங்கியபடி துரத்தியது
சத்தம் மட்டும்!!

முன்னேறிய துவேசியை
விட்டுவிடு விட்டுவிடு
பின்னுக்கு இழுத்தது உள்ளம்!

வரவேற்பறை வரை முன்னேறியவள்!
நீயே சொல்லிவிடு
நாளை!
திரும்பி வந்தவளை...
திட்டிக் கொண்டு
எழுந்தவனுக்கு...

கடைசி வரைத் தெரியாது!
வரவேற்பறையில் நீயும்
உன் நாணமும் சம்மணமிட்டு
என் தவிப்பை ரசித்து
கொண்டிருந்தது!

காதல் - 16

"பரதேசி" இப்படித்தான்
இதே வார்த்தைதான்
உபயோகித்தாள் தோழி!

ஏன்டா நேற்று
சொல்லவில்லை!
என்றும் தவறாமல் தரும்
கவிதை கூட தரவில்லை?

ஏன்டா?கேட்டவளிடம்
பயமாயிடுத்து! "கலை"...

பயதைத் தூக்கி
குப்பையிலே போடு! - உன்
காதலைத் தூக்கிகைப்பையிலே போடு!

தைரியம் தானா வரும்!
நானும் ப்ரியாவும்
நாளை கடற்கரைப்
போறோம்!
நீயும் வர்றே!
சொல்றே!
மறுத்துட்டா??
மறுக்க மாட்டா...நான் கியாரண்டி!
சொல்லிய படியே
நகரும் தோழியை
நான் மட்டுமல்ல
நட்பும் ஒழிந்திருந்து
என்னை பொறாமையாகப் பார்த்தது!

அவள் கொடுத்துப்போன
தைரியத்தில்
என்னைப் போலவே
இரவெல்லாம் கண்விழித்து
காத்திருந்தது என்னறை
மின்விளக்கு...
நாளை
நான் காணப்போகும்
முதல்காதல் பகலுக்காக!

பூ

காதல் - 17

உயிர்க்காதல் சுமந்த
பேனா துப்பிய
வார்த்தைகள் காகிதத்தில்!
துப்பாத பல காவியங்கள்
மனதில்!
மறைத்து வைத்த
ஒற்றை ரோஜாவுடன்! - நான்

தோழியுடன்
துணைக்கு நீயுமோர்
ரோஜாவாய்!

வாருங்களேன் கால் நனைத்து
திரும்புவோம்! - அழைக்கும் தோழி
"இல்லை நாங்கள் வரவில்லை"
எனக்கும் சேர்த்து பதில்!

முகம் நோக்கி என் உணர்ச்சி படித்து
மண் நோக்க அலையாகும் - கண்!

இருவரின் படபடப்பை
புதுக்கவிதையென அலை நோக்கிப்
புறப்பட்டது நட்பு!

ஏதேதோப் பேசிக்கொண்டோம்
நம் காதலை தவிர!

ஏதோ குருட்டு தைரியத்தில்
ரோஜா எடுத்து நீட்ட இருந்தவனை
ஒரு நிமிடம் திடுக்கிடவைத்தது
உன் குரல்!

"விக்கி இதைப்பாரேன்"

"என்னிதயத்தில் நீ காதல் பூ
நான் சூட்டிக் கொள்ளவா?
இல்லை சாமிக்கு அனுப்பவா?"

மணலில் எழுதியிருந்தாய்!
"அருமை ப்ரியா!!"
சொல்ல வந்தவன்
வார்த்தைத் தொண்டையில்
சிக்கி விக்கித்துப் போனேன்...

அது என்ன வலது ஓரத்தில்
மணி மணியாய் இருவார்த்தைகள்
இல்லையில்லை ஒருவார்த்தை
"ப்ரியாப்ரியன்" ?
புரிந்த கணம்
உண்மையில்
புதிதாய்ப் பிறந்தேன்
நான்!!

காதல் - 18

வார்த்தைகள் குண்டுகளாய்
உருண்டு விளையாடின
தொண்டைக்குழிகளில்!

நம்மை கண்டு
கிண்டல் பேசி
நகர்ந்தன நண்டுத்
துணைகள் இரண்டு!

நீயென்ன புது மொழி?
மெளனத்திடம் மெல்லியதாய்
விசாரித்துக் கொண்டிருந்தது தமிழ்!

ஒருவரை ஒருவர்
மாறி மாறி
அவசரஅவசரமாய்
தின்றுவிட முயன்றதில்
துளிர்க்கும் கண்கள்!

இப்படித்தான் இவற்றைத்
துணைக் கொண்டுதான்
அமர்ந்திருந்தோம்;
தோழி வந்து நம் தோள்
குலுக்கும்வரை!

காதல் - 19

தோழி வாங்கிவந்த
"ஐஸ்கிரீம்"
உருகிப் போவது கூட
தெரியாமல்
ஒருவரை ஒருவர்
விழுங்கி கொண்டிருந்தோம்!

தோழியை சாட்சியாக
வைத்துக்கொண்டே!

"நேரமாகுது...போகலாம்" - சொல்
தோழி இதழ் உதிக்கும் முன்
"நாங்கள் பின் வருகிறோம்
நீ போ!" சொல்லும் எனை
நீங்களாப் பேசியது? - எனப்
பார்த்தாய்...

அடி...........
ஆளப் பாரு!
மிரட்டி எழவைத்த
தோழியை கோபத்தோடு
பின் தொடர்கிறேன்
நான்!

மார்பின் குருக்கே
கைக் கட்டி
ஓரக்கண்ணால்
எனைப் பார்த்து
சிரித்துக் கொண்டே
தோழியுடன் சம்பாஷணை
செய்தபடி நீ!

கொண்டுவந்த ரோஜாவை
கடல்
ரசிக்கவிட்டு வந்தேன்!

கொஞ்ச தூரம் கடந்து திரும்பி
பார்த்தேன்!
அதுபாட்டிற்கு யாருக்கோ
வரவேற்பு
தந்துகொண்டிருந்தது!

அட,துணைக்கு மூச்சிரைக்க
ஓடிக்கொண்டிருப்பது;
உன்
கூந்தல்
உதிர்ந்த
ஒற்றை மல்லிகை!

காதல் - 20

நாளைக் காலைப்
பார்க்கலாம்!

கையசைத்துப் போனாய்!

உன் வாசத்தை மட்டும்
என் துணைக்கு
விட்டு!

காதல் - 21

காலணி கழற்றி
உள் நுழைகையில்!

"என்ன அய்யா முகம்
தெளிவாய்ட்டு இருக்கு?"

கத்திவிட்டு
பிடிகொடுக்காமல்
ஓடிப்போனது
தங்கைப் பிசாசு!

"அகதின் அழகு முகத்தில்
தெரியும்" - பழமொழி
இது கண்டிப்பாக
அம்மா!

"என்னடா இதெல்லாம்?"
அட,சின்னி!!!
"சின்னி எப்போ வந்தே?"
தூக்கி கரகம் ஆடினேன்...
தாய்வழிப் பாட்டி...

என்னடா...என்ன நடக்குது?
கேட்ட கணம் நிறுத்தி
சின்னி மடியில்
தலைச் சாய்த்து
வானம் பார்த்து சொல்லியது
இதுதான்!

"ஒரு அகல்விளக்கு
இந்த இருண்ட வானத்திற்கு
வெளிச்சம் தர இசைந்துள்ளது...!"

காதல் - 22

தனிமையில் நான்!
வானம் ருசிக்க
மொட்டை மாடி!
ரோஜா மெத்தை;
எனக்கே எனக்கான
ஒற்றை நிலவு!
நான் பெயரிட
காத்திருக்கும் சில
மின்மினிப் பூச்சிகள்!
என் வேண்டுதல்கள் இவை!
அனைத்தும் அருகே!
தூக்கம் மட்டும்
துரத்தித் துரத்தி எட்டா தூரத்தில்!

தூணை துணைக்கு கட்டி
உன் வீட்டை எட்டிப்
பார்க்கிறேன்!

ஐயோ!!
யாரது உன் வீட்டு
சுவரேறிக் குதிப்பது!
இங்கும் அங்கும் பார்த்து
அவன் நெருங்குவது உன் அறை அல்லவா!!

ஆ!!இது என்ன அறையிலிருந்து
வெளிப்பட்டு உள்ளிழுத்து
ஒற்றை முத்தம் தந்து
புன்னகையினுடன் கையணைத்து
வழி அனுப்புவது
உண்மையில் நீதானா??

ஏதோ கெட்ட வார்த்தை
வாய்வரை வந்து வெளித்துப்ப
சக்தி அற்றவனாய் நான்!

வந்தவன் அடுத்து வந்தது
நேரே என் மொட்டை மாடிக்கு!

ஏதோ எதிர்பார்த்தான் என்னிடம்
ஒன்றும் பேசாமல் நான் நின்றிட!
படுக்கையில் விழுந்து உறங்கிப் போனான்...
இதழ் மயக்கம் போலும்!

இவன் யார்?இவன் என்ன உறவு..??
இவனிடமா கேட்பது??இல்லையில்லை...
உன்னிடம்தான் கேட்கவேண்டும்...

நள்ளிரவு!
சுவரேறிக்குதித்து!
ரோஜா முள் கிழித்தல் பொறுத்து
உன் வீட்டு பப்பியிடம் கடி பட்டு
உன்னறை சேர்கிறேன்!

அவனுக்கு காத்திருந்தது
போலத்தான் காத்திருந்தாய்! - எனக்கும்
அதே புன்னகை!
அதே காதல்!!
அதே மோகம்!!!
அதே தாபம்!!!!
கோபத்தோடு நான் வாய்திறவும் முன்...

என் தோளில்

கைவைத்து
கட்டிய படி நீ பகன்றாய்

"காதல்" வந்தான்

கண்டாயா??

காதல் - 23

கூந்தல் சுகந்தம் சுவாசித்து
வானம் பார்த்து
நிலவுக்கும் உனக்கும்
ஆறுவித்தியாசங்கள் கண்டறிய
முயலுகையில் சிணுங்கினாய்!

யாராவது பார்த்தால்
தப்பாகிப் போகும்!

யாராவது பார்ப்பதா?
அடி அசடே...
உலகமே நம்மைத்தான்
பார்த்து கிடக்கிறது!

நிலவை பார்!
பொறாமையில் கொஞ்சம்
கருமை!

தென்றல்
நம்மை புரளிப்
பேசியதில் கொஞ்சம்
உஷ்ணம்!

ஆரம்பித்த கணம்
ஆரம்பிச்சுட்டியா?
போடா போய் தூங்கு!
விரட்டிவிட்டாய்!

திரும்புதலுக்கே காத்திருந்தது போல்
விழித்து பாதியிரவில்
கதைக்க ஆரம்பித்தான்!
"காதல்!"

கேட்டுக் கொண்டே படுத்துகிடந்தேன்...
உனக்கு தாலாட்டு பாடிய மீதி
வரியை காட்ட ஓடி வந்தது தென்றல்!

கண் அயர்கையில்
மெல்ல என்னுள் நுழைந்து
எனைப் பார்த்து
மெலிதாய் புன்னகைத்து வைத்தான்
"காதல்!"

காதல் - 24

உன் மூச்சுகாற்றில்
பூவிதழ் வெடிக்கும்
சப்தத்தில் விடிகின்றன
என் கிழக்குகள்!

உன் வீட்டைக் கடக்கையில்
கோலச்சங்கிலியில்
கட்டுண்டுத் தவிக்கின்றன
என் கால்கள்!

"ப்ரியா ப்ரியா"
என விளிக்கும்
என் எல்லா
"system.out.println"கள்!

முன்னைவிட அழகாக
எழுதுகிறேன்...
சொல்லும்
என் கவிதைகள்!

இவையெல்லாம்
சொல்ல ஆரம்பித்தேன்;
"உளற ஆரம்பித்துவிட்டாய்
நிறுத்தியாக வேண்டும்"
"எப்படி" - நான்
"இப்படி" என்ற படி
முத்தமொன்று தந்தாய்
மூர்ச்சையாகி நின்றது
பேச்சும் காற்றும்!!

"இனி அடிக்கடி
உண்மை
உலறுவேன்!"

"உதைபடுவாய்"
குட்டிச் சொன்னாய்!

"ஆ!வலிக்குதடி"
மெளனம் காத்தாய்;
"வலி நிறுத்த ஒர் முத்தம் தாயேன்!"
பிச்சை தட்டு ஏந்தாதது ஒன்றே குறை!

"ஆசை தோசை"

நம் காதலை கேட்டுச் சிரித்து
இன்னும் கேட்க;
கால்வலி தணிக்க
நிழலுடன் சேர்ந்து
அப்படியே அமர்ந்துகொண்டது
அங்கிருந்த மரம்!

காய்

காதல் - 25

நேற்றுவரை
என்னுயிர் வளர்த்தவள்தானே நீ!

முன் வராமல்
பேச்சு தராமல்
உயிர் சுருங்க
காரணமானாய்!

தேடித்தேடிப் பார்த்தேன்
தவிப்பே மிஞ்சியது!
தக்கக் காரணம் கிட்டவில்லை!
உன் தவிர்த்தலுக்கு!

காலை நடையில்
பேச்சு தரும்
உன்னப்பா கூட
கண்டுகொள்வதில்லை!

கண்டால் செல்லக்கடி கடிப்பதாய்
பலமாய் கடித்து கால்சுற்றும்
உன் 'பப்பி' கூட
பாராமுகம் காட்டியது!

இன்று பேசுவாய்;
நாளை விலகும்
உன் கோபமேகம்;
மனதிடம் சமாதானம்
சொல்லித் திரிந்தேன்!

அழைப்பு கலையிடமிருந்து
சொன்ன செல்பேசி தடவி
காதில்வைத்த நொடி
'ப்ரியாவுக்கு கலியாணம்
முடிவு செய்திருக்கிறார்கள்'
சேதி சொன்னாள்!
'ப்ரியா ஒத்துகிட்டாளா?'
'இது என்ன கேள்வி?'
அவள் இஷ்டம்தானே எல்லாம் வீட்டில்
ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருக்கலாம்!
தோழியும் மெலிதாய் மறுமுனையில்
அழுததாய் தெரிந்தது!!

"படீர்" ஏதோ வெடித்தது!
இதயமா? - இல்லை
இதயத்திலொரு எரிமலையா?
இனி எதுவாயிருந்தால்தான் என்ன??

காதல் - 26

ஒன்றும் பேசாமல்
செல்பேசி அணைத்து,
பொய்சொல்லி
பகுதி நாள்
பணிவிடுப்பு பெற்று!
முதன்முதலில் காதல் வரைந்த
மண்ணில் முன்னங்கால்
புதைத்து கடல்வெறித்து;
மெளனமாய் அழுது!
அவளுக்கு அது சுகமென்றால்
அதுவே நடக்கட்டும்
மனம் செதுக்கி!
"நன்றாக இருக்கட்டும்"
முடிவாய் கண்ணீர் துடைத்து!
வீடுத்திரும்புகையில்
மணி 9.30!

அழைப்பு மணி அழுத்த இடம் தராமல்
கால் சப்தம் கேட்டே தாள் விலக
கதவின் பின் புன்னகையுடன் நீ!
உன்வீட்டார் எல்லாம்
என்ன இந்நேரம் இவ்வீட்டில்?

என்வீடுதானா?
கேள்விக்குறியுடன் நெற்றி சுருங்குகையில்
"வாங்க மாப்பிள்ளை" - உன் அப்பா
குரல் கேட்டு! - ஐயோ என்
பின்னால் உன் அவரா?
அவசரமாய் திரும்பி
அட இவன் உன் அத்தைமகனல்லவா?
இவன் ஊருக்கு உன்
அப்பா சென்றுவந்தலிருந்தல்லவா
எல்லாம் மாறியது!

"வாங்க" சம்பிரதமாய்
அழைத்து துணிமாற்றி வர
என்னறை நுழைகையில்
என்னைக் கண்டசோகத்தில்
சத்தமாய் ஒப்பாரி வைத்து
மூக்குசிந்தி அழத்துவங்கின
என் கவிதைகள்!

கனி

காதல் - 27

உன்னருகில் மட்டும்
இடமிருக்க தயங்கி சுவரில்
சாய்ந்து நின்றபடி கவனித்தேன்!

"மாப்பிள்ளை எப்போ கலியாணம் வைக்கலாம்"?

கலியாணம் பேசும் நேரமாயிது??

முந்தி வந்தது உன் குரல்
நாளையே கூட நல்ல நாள்!

"இருமா"?மாப்பிள்ளை சொல்லட்டும்...
உன்னப்பா குரல்கேட்டு
அத்தை மகன் நான் முகம்பார்க்க!

எல்லோரும் எனைப்பார்க்க...
ஏதோ புரிந்தும் புரியாதவனாய்
நிற்க!

அட பைத்தியமே உன்னைத்தான்
என்றபடி தலையில் குட்டி
தர தரவென தங்கை இழுத்து
உன்னருகில் அமரவைத்தாள்;
மெல்ல மெல்ல விடியதுவங்கியது
இதுவரை இருண்டருந்த மனம்!

பக்கத்தில் ஒளி வடிவில்
ஒளிர்ந்து கொண்டிருந்தது உன் முகம்!!

கலியாணம் பேசலாம் இந்நேரத்திலும்!!

காதல் - 28

திருமண அரங்கம்.
மேடையில்!மெதுவாய்
உன்பக்கம் சாய்ந்து
வெகுநாளாய் மனமரித்த
கேள்வியை கேட்டேன்;
"ஏனப்படி அன்று
அதிர்ச்சி தந்தீர் எல்லோரும்?"

"நீதானே சொன்னாய்...
எதிர்ப்பில்லாமல்
சுவாரசியமாயில்லை காதல்"

புருவம் தூக்கி சொன்னாய்...

அட!எத்துணை அழகாய்
காதலிக்கிறாய் நீயும்!!

சொன்ன சமயம்
ப்ரியமான ப்ரியா
பக்கத்தில்
தம்பி வாழ்க்கை இனி
"இனிமை 24x7"
கண்ணடித்து நகர்ந்தாள்
தோழி!!

உனக்கும் சேர்த்து நான்
அதிகமாய் வெட்கப் பட
இடம் பொருள் பாராமல்
சத்தமாய் சிரித்து தொலைத்தது
"காதல்"!!

சுபம்

முடிவுரை

வகுப்பு நடக்கையில் ஏதாவது கிறுக்கி தருவேன்...அதை கவிதை என மதித்து படித்து...புன்னகை பதிலை தந்த என் முதல் வாசகனுக்கும்!

நல்லதா காப்பி அடிக்கிறாய் என உற்சாகப்படுத்திய என் நண்ப உள்ளங்களுக்கும்!

எவனுக்கு புரியுது?? என்று "மெயிலி" அடுத்தநாள் அவனுக்கு அனுப்பாமல் விட ஏனடா இன்று ஒன்றும் காணோம் என பதில் "மெயிலி"ய நண்பனுக்கும்!

இப்பிடியே போனால் சுவாரசியம் இருக்காது!பிரித்து விடு!அதுவும் பெண் துரோகம் செய்வதாய் முடி!என்ற எனதருமை நண்ப வட்டங்களுக்கும்!

எனக்காகவே தமிழை தத்தி தத்தி படிக்கும் சில நண்பர்களுக்கும்!

:) ;) இப்படியே தன் மனமுணர்த்திய தோழிக்கும்!

"பிரிக்காதே!

நல்லாயிருக்கு!

இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்!

யப்பா ஒரு வழியா முடித்துவிட்டாய்!இனி சில நாள் நிம்மதி!"மெயில் பாக்ஸ்" நிரம்பாது!"

இதுவும் நண்பர்களே!!

சில முகமறியா நண்பர்களும்!அடக்கம்!!

சத்தியமாய் எனை ஆக்கியது!ஊக்கியது எல்லாம் நட்பே!
என்றும் எனை நேசிக்கும் நட்பிற்கே என் நன்றிகள்!

கால வெள்ளத்தில்,
மீண்டும் சந்திப்போம்!

- ப்ரியன்