மற்றொரு மாலையில்... - 04

தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!


காற்று குடித்து
உப்பிய சக்கர வயிறை
முள் கிழித்து
சப்பையாக்கிட
மிதிவண்டியை தள்ளியபடி
பயணிக்கிறாய் பள்ளி நோக்கி!

தாமதாமாய் புறப்பட்டு
கால இடைவெளியை
வேகத்தினால் நிரப்பிட
பறந்து முன்னேறி வந்தவன்
மிதிவண்டி தள்ளிவரும்
தாவணி மயிலைக் கண்டு
மிதிவண்டி மிதிப்பது விடுத்து
இறங்கி தள்ளி வருகிறேன்
துணைக்காய்!

பெரும் மெளனத்தோடு நகரும்
பிரயணத்தில்
அவ்வப்போது
பரிமாறிக் கொள்கிறோம்!
பட்டாம்பூச்சிகள் இமையானதென
சந்தேகம் கொள்ளுமளவு
படபடக்கும்
விழிகளோடு!

பார்வைகள் தொட்டு புணரும்
கணம் சட்டென
தலை தாழ்த்தி
நாணம் தரையெங்கும்
சொட்டச் சொட்ட
நடை பயிலுகிறோம்!

கட்டி கதைப்பேசியபடி
பின் தொடர்கின்றன - நம்
மிதிவண்டியின் சக்கர தடங்கள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 05

இதுகாரும் உருகிய உயிர் காண :

03.,02.,01

3 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

ப்ரியன்,
மிக எளிமையான இனிய கவிதை !

நவீன் ப்ரகாஷ் said...

//பார்வைகள் தொட்டு புணரும்
கணம் சட்டென
தலை தாழ்த்தி
நாணம் தரையெங்கும்
சொட்டச் சொட்ட
நடை பயிலுகிறோம்!//

:)) அழகு! அழகு ! :))

அருட்பெருங்கோ said...

இங்கே ஆரம்பிச்சாச்சா?

நல்லது நல்லது...