ஒரு சேரி வீட்டின் உறுப்பினர்கள்

காலையிலிருந்து வெந்த உடம்பை
எரியூட்ட டாஸ்மாக்கில்
மொத்தமாய் கூலி தொலைக்கும்
அப்பா!

சோற்றுக்கு கூட பணம் தாராதவனை
கெட்ட வார்த்தையில் கடிந்துக் கொண்டே
அவனுக்கும் சேர்த்து சோறு வடிக்கும்
அம்மா!

ஊரில் உள்ள சேறேல்லாம்
தந்து சேர்க்கும்
வீடோடு ஒட்டிக் கொண்ட
ஒரு தெருநாய்!

அப்புறம்,
வீட்டின் கூரை ஓட்டை
ஒவ்வொன்றிலும் ஒரு நிலவு
தேடும் சில பிள்ளைகள்!

- ப்ரியன்.

கனவும் அதில் வந்த கவிதை வரியும்

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!

அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!

அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!

இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்!

- ப்ரியன்.

* வீடு *

மொத்தம் எட்டு அறைகள்
பழைய சாமான்கள் போட்டுவைக்கும் அறையும்
நெல்மூட்டை அடுக்கிவைக்கும் அறையும்
அறை கணக்கில் அடக்கமில்லை!
அக்கா
வீட்டுக்கு வெளியே இருக்கும்போது
துணைக்கு அம்மாவும்
நீட்டிப் படுத்துறங்க
அகலமானதொரு திண்ணை!
வருடத்திற்கு ஒருமுறை
நான்கு ஏக்கரில் விளையும்
மிளகாய் காயவைக்க
வசதியான திடல்!
அக்காவிற்கும் அம்மாவிற்கும்
மல்லிகைப் பூ;
அவசர சமையலுக்கு முருங்கை தர
அளவாய் ஒரு தோட்டம்!
வெளியே போக மட்டும் காடு;
மற்றப்படி குளியல் அறை என்று ஒன்று தனியாக இருந்தது;
எங்கள் கிராமத்துவீட்டில்!
அவ்வீட்டை விற்றப் பணத்தில்
வாங்க முடிந்தது இங்கு
எட்டுக்கு எட்டில் இரண்டு அறையும்
பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பு அறையும்
இணைந்த குளியலறையும்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 5

நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது!

- ப்ரியன்.

உனை ரசித்து ரசித்து
அழகு ரசித்து சலிக்க
ஆயுள் பல ஆகும்!
பேசாமல் உண்டுவிடு என்னை;
இரத்ததோடு ரத்தமாய்
உள்சுற்றி
அழகு ரசிக்கிறேன்!

- ப்ரியன்.

உன் கண்ணொளி
தீபத்தில்
சுடராக உயிர்வாழும்
என் உயிர்!

- ப்ரியன்.

உன்னுள்
இறங்கிவிட்டப் பிறகு!
நான்,
சுவாசமானால் என்ன?
உயிரேதான் ஆனால் என்ன?

- ப்ரியன்.

கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!

- ப்ரியன்.

தினம் தினம்
தொலைக்காட்சியில்
வானிலை வாசிக்கும் பெண்,
எனக்கு மட்டும் சொல்கிறாள்
உனைக் காணும் நாட்களெல்லாம்
மழைநாட்களாம் எனக்கு!

- ப்ரியன்.

தொட்டால்
தட்டிவிடுகிறாய்!
தள்ளிச் சென்றால்
கை கோர்க்காமைக்கு
கோபிக்கிறாய்!
கடினம்தான்
உனை காதலிப்பதும்!

- ப்ரியன்.

பூ வாங்கி தர
அழகாய் இடம் தருகிறாய்
கொண்டையில்!
கொக்கரித்து ஆடுகிறது
என் காதல்
அதே கொண்டையில்!

- ப்ரியன்.

கிளை தங்கிவரும்
தென்றல்
நான் உயிர் வளர்க்க!
உந்தன் கூந்தல்
கலைத்துவரும் காற்று
நான் உயிர் பிறக்க!

- ப்ரியன்.

எந்தத் தேனீ
விட்டுச் சென்றது
உன் இதழ் முழுதும்
இத்தனை தேன் துளிகள்!

- ப்ரியன்.

நம்மை மறந்து
நாம் நின்றிருந்த
அம்முதல் சந்திப்பில்
மனம் கொத்திப் பறந்த
அப்பறவையின்
பெயர் என்னவாயிருக்கும்!

- ப்ரியன்.

மழைநாளில்
நனைந்து நீ நடந்தாய்!
இத்துணைநாள்
காளான் முளைத்த
தரையெங்கும்
தாழம்பூக்கள்!

- ப்ரியன்.

நீ மையணிவது
கண்ணழகிற்கு மட்டுமல்ல!
என் பேனாவிற்கும்
சேர்த்துத்தான்!

- ப்ரியன்.

இமை படப்படக்கும்
வேகத்தில்
அவ்விமை தூரிகை கொண்டு
வரையப்படுகின்றன
உன் உயிரோவியம்
என் நெஞ்சம் முழுவதும்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 4

உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!

- ப்ரியன்.

ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!

- ப்ரியன்.

உன்னைப் பூவென
மயங்கி சுற்றித் திரியும்
வண்டுகளுக்கு சொல்லிவிட்டாயா
உன் இதழ் தேன்
நான் உண்ண மட்டுமென?

- ப்ரியன்.

கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!

- ப்ரியன்.

உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!

- ப்ரியன்.

வெட்கத்தோடு என்னை தழுவுகிறாய்!
அதை கண்ட வெட்கத்தில்
வாசல்கண்ணை படாரென
சாத்துகிறது காற்று!

- ப்ரியன்.

தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!

- ப்ரியன்.

அழகுக்கு விளக்கம் கேட்ட
குழந்தைக்கு
உன்னைக் காட்டினேன்!
வெட்கத்தோது மாரில் முகம் புதைத்தாய்
அடடா!பேரழகு!

- ப்ரியன்.

ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!

- ப்ரியன்.

நம் இருவர் புகைப்படமெடுத்து
கருப்பு வெள்ளை மையில்
வயதான நம்மை வரைந்திருந்தாய்
கவனித்தாயா?
எல்லாம் மாறியிருந்தது
நம் காதலை தவிர!

- ப்ரியன்.

கோபம் மறந்த
அக்கணத்தில் கண்மூடி
புன்னகைத்தாய்!
ஒரு பட்டாம்பூச்சியின்
சிறகசைப்போடு என்னை வந்து
கட்டிக் கொண்டது காதல்!

- ப்ரியன்.

நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!

- ப்ரியன்.

என்னை அதிகமாய்
கனவு காண செய்தவர்களுக்கு
என் தண்டனை

தமிழுக்கு - என் கவிதை

உனக்கு - என் காதல்!

- ப்ரியன்.

நீ கண்மேய்ந்த இடத்திலிருந்த
என் எழுத்துக்கள்
பிரசவமாயிருந்தன
கவிதைகளாய்!

- ப்ரியன்.

குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை!

- ப்ரியன்.

தலைகுளித்து வெளிவந்தாய்
தொலைவானத்து நட்சத்திரங்களாய்
கூந்தல் ஏறி அமர்ந்திருந்தன
நீர் துளிகள்!

- ப்ரியன்.

நீ கண்மூடிச்
சொல்லும்
"அர்சுனா ! அர்சுனா !"
அழகிற்காகவே
அடிக்கடி சாட்டைச் சுழற்றுகிறானாம்
கிருஷ்ணன்!

- ப்ரியன்.