கையெழுத்து

கையெழுத்து

உந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
எந்தன் கையெழுத்தில்
கொஞ்சம்!
கலந்து எழுதும்
எதுவுமே
கவிதை!

முதல் பூ

முதல் பூ

எதைக் கொண்டுப்
பெறுவேன்
உனக்கான
முதல் பூவை!

கனவு

கனவு

வனாந்திரத்தில்
வனாந்திரமாய்
அலைந்தேன்!

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
திரியும் பாம்புகளைத் தவிர
வேறு ஜீவராசிகள் இல்லை
துணைக்கு!

சுற்றிச் சுற்றி வந்தாலும்
ஏதோ ஒன்று கொண்டு
சேர்க்கிறது
துவங்கிய இடத்திலேயே!

குழம்பிப் போய்
மேல் பார்க்கையில்
வானவில் வர்ணத்தில்
ஏதோ ஓர் பூ!

பெயர் தெரியா அப்பூவை
பறிக்க முற்படுகையில்;
பூ அலைகிறது
காற்றில் அசையும்
அருகம்புல் நுனி போல!

வெறி கொண்டவனாய்
எட்டிக் குதித்ததில்
கீழேயிருந்த
புதைக்குழியில்
விழுந்து தொலைகிறேன்!

பகுதி குழியேறி
வெளி குதித்துவிட
எத்தனிக்கையில்
கால் இடறி
குழியில் இடுகின்றனர்
மீண்டும் மீண்டும்
யாரோ!

கட்ட கடைசியில்
கால் பிடித்தவனை
எட்டி உதைத்து,
கைக்கெட்டிய வேரைப்
பிடித்து
வெளிப் பார்க்கையில்!

மெல்ல மெல்ல
இருளின் கண் மை
துடைத்து;
கண்ணாடி வழியே
படுக்கையறை நுழைகிறது
சூரியன்!!

பொட்டு

பொட்டு

தொடங்கிய கவிதையை
முடிக்கத் தெரியவில்லை!

நீ வீசியெறிந்த ஒற்றைப்
பொட்டைத் தா!

அழகான முற்றுப்புள்ளி
வைத்து விடுகிறேன்!

நிறம் மாறும் பூக்கள்

நிறம் மாறும் பூக்கள்

என் கண்களையும் மீறி
"வாசல் கடத்தல்"
நிகழ்தல் சாத்தியம் உனக்கு
சில நாட்கள்!

அவ்வநேக நாட்கள்
நீ உடுத்திய நிறம்
பந்தயத்தில் தோற்றிருக்கிறாள்;
தங்கை!

பாவம் அவளுக்கு எப்படித்
தெரியும்?
நீ கடந்த கணம்
ஜன்னலோரப் பூக்கள்
எனக்கான
ஒருத்துளி களவாடி
கொஞ்சமாய் நிறம் மாறியிருப்பது!


நீ வருவாயென

நீ வருவாயென

தினமொரு கவிதை
தருவாய்!

இன்று ஏன்
இன்னும் காணோம்!

'மெயிலும்' நண்பர்களுக்கு
என்ன பதில் உரைப்பது?

அதையாவது வந்து
சொல்லிவிட்டுப் போ!

பூப்படைதல்

பூப்படைதல்

அம்மாங்க பேசிட்டு
இருக்கோம்ல
குட்டிய கூட்டிடு போய் விளையாடு!

இதில்தான் உண்டானது உனக்கும்
எனக்குமான பந்தம்!

பொம்மைகளுடன் விளையாடுவதை விட
என் கைப் பிடித்து நடப்பது சுகம் உனக்கு!

எனக்கும் அப்படியே! - ஓர் வித்தியாசம்!
கைப்பிடித்து நீ தத்தி தத்தி
வழி நடத்துதல் சுகம்!

நீ பள்ளி சேர்ந்த புதிதில்
பள்ளி பேருந்தை விட்டு
கைக்கோர்த்து நடந்தே
வீடு சேர்ந்தோம்!
அன்னைகள் குச்சியுடன்
காத்திருப்பார்கள்!அறியாமலே!

அத்துணை அடி வாங்கியும்
ஒருவரை ஒருவர் பார்த்ததும்
சிரித்துக் கோண்டோம்!

அண்ணாவென அழைத்து வந்தவள்,
பெயர் சொல்லி விளிக்கலானாய்!
அதிலும் சுகம் கண்டது மனது!

ஓர் நாள் அவசரமாய் வீட்டிற்கு
போக வேண்டுமென்றாய்!
எதுக்கு?
தலையில் தட்டியவாறே!
"உன்னிடம் சொல்ல முடியாது!"

நீயா பேசியது?!
கை நீட்டியும் கைப்பற்றவில்லை நீ!
கோவமோ?
என்றும் அதிகம் பேசுபவள்!
வாயே திறக்கவில்லை!
பயந்துதான் போனேன்!

அம்மாவிடம் ஏதோ குசுகுசுவென்றாய்!
அம்மாவின் முகத்தில் ஆனந்தம்!
உன் முகத்தில் என்ன உணர்ச்சி அது!
பிடிக்க இயலவில்லை!

"அக்கா அவள் அத்தை வர நேரமாகும்
நீங்களே இனிப்பு கொடுங்கள்!" - உன் அம்மா என் அம்மாவிடம்...
உன் முகத்தில்
ஆனந்த தாண்டவம்!

உண்மையில் ஒன்றுமே புரியவில்லை
எனக்கு!அம்மா வந்து நீ பூப்படைந்தது
சொல்லும் வரை!

அடுத்த பதினைந்து நாட்கள்
பள்ளி காணவில்லை நீ!
உன்னிடம் பேசுவதாய்!
காற்றுடன் பேசி நடந்தேன்!

நீ பள்ளி திரும்பும் முதல் நாள்...
உன்னிடமும் என்னிடமும்
இனி பழக வேண்டிய விதம்! - அறிவுரை!

முக்கியமாய் நானும் நீயும்
கைக்கோர்த்தல் ஆகாதாம்!

நீயும் சொற்படி
விலகியே வந்தாய்!

பத்தடிக்கு ஒரு தரம்
சில நடை அகலம் குறைத்தாய்!
மெல்லமெல்ல அருகில் வந்து
கையோடு கை சேர்த்தாய்!

அந்நிமிஷத்தில்
பூப்படைந்தேன் நான்!

தூக்கம் விழித்தல்

தூக்கம் விழித்தல்

நிலவும் கூட
உறங்கிப் போன பின்னிரவில்
உறக்கம் கலைந்தது!

என்ன செய்யலாம்?
யோசிக்க இடம் கொடுக்கவில்லை...
உன் அழகு!

விளக்கை எறிய விட்டு
விழியை உன்மேல்
விட்டேன்...

காற்றில் தூரிகையிடும்
ஒற்றை நெற்றி முடி!

மூடிய இமை வழியும்
ஒளி வழங்கும் உன்னிருகருவிழிகள்!

பூக்களுக்கு நிறமி வழங்கத்
துடிக்கும் உதடுகள்!

ரசித்துக்கொண்டெ வந்தவன்
'சென்சாரில்' அடிக்கடி சிக்கும்
பாகத்தில் முட்டி நின்ற கணம்
விழித்துக் கொண்டாய்!

புருவம் தூக்கி
'என்ன இது' வாசித்தாய்!
புன்முறுவலினூடே! - கவிதை...

எத்துணை அழகு
என் மனைவி!
மொழிந்தேன்!

ச்ச்சீய்!சிணுங்கிக் கொண்டே
அணைத்து
கழுத்துப் பிரதேசத்தில் முத்தமிட்டாய்!

இதற்காகவே அடிக்கடி
தூக்கம் விழிக்கலாம்!