மரணம்

சிதைக்கு நெருப்பூட்டும் போதே
இறந்தவனை பற்றிய நினைவுகள்
எரியூட்டப் படுகின்றன!

அடுத்தநாள் சேதி கேட்டு
சோகமாய் வந்தமரும்
நல்ல ஒரு சொந்ததிற்கு
கிடைக்கிறது
மலர் முகத்தோடு வரவேற்ப்பும்
நாளிதழும்;
சோகம் துடைக்கும்
முகமாய்!

அமெரிக்காவிலிருக்கும்
பையனோ பெண்ணோ
அவசர அவசரமாய்
அஸ்திக் கரைப்புக்கு
வந்து சேர்கிறார்கள்!

அடுத்த வருட திவசம்
காக்கைக்கு ஒரு பிடி சோறோடு நிற்குமா?
நாளிதழில் ஒரு பக்கக் கண்ணீரஞ்சலியா?
என்பதை நிர்ணயிக்கும்
அவன் விட்டுச் சென்ற
ஆஸ்தி!

மரணமும்
சடங்காகிப் போனது!
சடங்கும் இங்கு
விழாவாகிப் போனது!

- ப்ரியன்.

வாடகை வீடு

ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லால் அறைந்து
அவ்வாணியிலேயே
தொங்க விட்டுச்செல்கிறாய்
என்னை!

கொஞ்சம்
வேகமாக பாதம் பதித்தால்
விரிசல் காண்பதாய்
வாதம் செய்ய ஓடோடி
வருகிறாய்!

உன் செல்ல பிள்ளை
பிசாசுகளின்
காட்டுக் கத்தலில்
கழிக்கப்படுகின்றன
என் அமைதி!

மொட்டை மாடிக்கான
வழியைக் கூட
உன் வீட்டுக்குள்தான்
ஒளித்து வைத்திருக்கிறாய்!

யோசித்துப் பார்த்தால்,
வாடகை மட்டுமல்ல
என் சுதந்திரத்தின்
பெரும் பகுதியை
அடகு வைத்துத்தான்
குடிப்புகுந்திருக்கிறேன்!
எலி வங்குக்கு ஒப்பான
உன் வீட்டில்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 3

கொஞ்சம்
என்னைத் தனிமையில்
செல்ல விடு நிலவே
எனக்காக அவன்
கரையில்
காத்திருப்பான்!

- ப்ரியன்.

ரோசா மொழி
அறிவாயா நீ?
அறிந்தால்
ஒரு நாள் கவனித்துப் பார்
உன் கூந்தல் தங்கும்
ரோசாவின்
கர்வ பேச்சுக்களை!

- ப்ரியன்.

அவன் என் வீட்டு
கதவு தட்டினான்!
ஆசையாய் ஓடித் திறந்தேன்!
கண்வழி உயிர் புகுந்தது
சூரிய கதிர்!
அடச்சே!

- ப்ரியன்.

கண்மூடி நடக்கிறேன்
விழித்தால்
அவன் வந்த
கனவு கலையுமென!

- ப்ரியன்.

அதோ!
தட்டுகிறான்!
மேலேற்ற முயற்சிக்கிறான்!
ஊசி வைத்து குத்தவும்
தயாராகிவிட்டான்!
என்ன செய்தாலும்
இமை திறந்து
விடுதலை அறிவிப்பதாய் இல்லை!
கனவில் புகுந்து தூக்கம் தின்ற
அவனை!

- ப்ரியன்.

டேய் குண்டாய்ட்டே!
உன் நண்பர்களின்
கிண்டல் மொழி
பின் தின்பதெல்லாம்
என் உயிரல்லவா?

- ப்ரியன்.

நீ கோலம் போடுவதை
தூரமிருந்து ரசித்தவன்
முடித்தாய் என வெளியே வந்தேன்
எழுந்து ஓடிப் போனாய்!
பாவம் அந்த
கடைசிப் புள்ளி
என்ன பாவம் செய்தது?

- ப்ரியன்.

என்னைக் கண்டால்
விலகும் மாராப்பைத்
திட்டித்தீர்க்கிறாய்!
திட்டவேண்டியது மாராப்பையல்ல
என்னைக் கண்டால் விம்மும்
உன் மார்பைத் தான்!

- ப்ரியன்.

காய்ந்த துணிகளை
எடுக்க வந்தாய்
எல்லாத் துணிகளும்
ஓடிவந்து உன் தோள் ஏறின!
அழகு பவனி!

- ப்ரியன்.

உன் அப்பாவிற்கு
சலூனில் பேப்பர்
தேடி எடுத்துத் தந்தேன்!
அம்மாவிற்காக காய்கறிகாரனிடம்
சண்டைப் போட்டேன்!
தம்பியை கிரிக்கெட்
அணி தலைவனாக்கினேன்!
காரணத்தை அவர்கள்
அறியுமுன்!
நீ யோசித்து தெரிந்து கொள்!

- ப்ரியன்.

முதலில் பேச ஆரம்பித்தது
அந்த கடிகாரம் தான்!
அப்புறம்!
புத்தகம்
தலையணை
பேனா
நீ என்னறை வந்து போனதும்
எல்லாமே பேச ஆரம்பித்து விட்டன!
கூச்சல் தாளவில்லை எனக்கு!
கொஞ்சம் வந்து
அதட்டிவிட்டுப் போனால் சுகம்!

- ப்ரியன்.

என் குறிப்பேடு படித்து
ஆ! கவிதை என்றாய்!
பேனா கத்தியது!
"அவள் பேச்சு - ஆஹா கவிதை!
நீயும்தான் எழுதுறியே
சகிக்கலே!"

- ப்ரியன்.

வாசித்து கவிதை
என்றாய்!
காண்பாயோ!
அது என் உயிரில்
விழுந்த உன்
கண் விதை!

- ப்ரியன்.

உன்னைக் காணாத
நாட்களும் சாதாரணமாகவே
கழிகின்றன!
ஆனால்,
கடிகார முட்கள்
மட்டும் ஒடிக்கப்படுகின்றன!

- ப்ரியன்.

கடல்நீரை குடிநீராக்க
என்னென்னவோ செய்கிறது
அரசாங்கம்!
வா,உன் பங்குக்கு
கால் நனைத்துவிட்டுப் போ
அலையில்!

- ப்ரியன்.

சிக்கிமுக்கி கல்
உரசினால் தீ!
கண்ணும் கண்ணும் உரசினால்
காதல்!

- ப்ரியன்.

கோவில்,
எனை கண்டதும்
தலை குனிந்து
வெட்கத்துடன்
ஓடிப் போனாய்!
முறைத்துத் தொலைக்கிறான்
கடவுள்!

- ப்ரியன்.

வளையல்களை
உடைத்தெறிய வேணும்!
புரண்டும் படுக்கும்போது
எழும் ஒலியில்
உசாராகி ஓடி ஒளிகிறான்!

- ப்ரியன்.

அந்த சபையில்
ஆரபாட்டமாய் ஆரம்பிக்கிறான்
பேச்சை
எந்தன் இதயம்!
முன் வரிசையில்
உந்தன் இதயம்
வந்தமர
பேச்சு முட்டி நிற்கிறான் அவனே!

- ப்ரியன்.

என்னைப் பெருமைக்
கிடைத்துவிடக் கூடும்
என் கவிதைகளுக்கு
உன் பாதங்களுக்கு ஒரு
பூப்பாதை
ஆவதைவிட!

- ப்ரியன்.

உந்தன் கூந்தல்
உதிர் பூவொன்றை
டைரியில் சேகரித்தேன்!
பல நாள் கழித்து
இன்று திறந்துப் பார்த்தேன்
உன் வாசம்
என் வாசம்
அதன் வாசம் கொஞ்சம்
கலந்து அருமையான
கவிதை ஒன்று
எழுதிப்பார்த்திருந்தது அது!

- ப்ரியன்.

எல்லா காதலர்களும்
கவிஞர்கல்ல!
ஆனால்,
எல்லா கவிஞர்களும்
காதலர்கள்!

- ப்ரியன்.

நீ
வாராததால் ஏமாந்து
அழும் காதலை
கொஞ்சம் தொட்டிலில்
இட்டு ஆட்டிவிட்டுப் போ!

- ப்ரியன்.

உன் வீட்டுன் வாசலில்
தொடங்கும்
என் உயிருக்கான
வாசல்!

- ப்ரியன்.

என்னச் சொல்லி
தேற்றுவது
நீ வராததால்
ஏமாந்து அழும்
என் காதலை!

- ப்ரியன்.

என்னைக் காதலிப்பதால்
உனக்கு என்ன மிச்சம்
என என்னை கேள்வி கேட்பவளே!
காதலே மிச்சம்தானே அடி
எனக்கு!

- ப்ரியன்.

காதலி!

இல்லையென்றால்,
உந்தன் உயிரும்
எந்தன் உயிரும்
எவ்விடத்தில்
முடிச்சிடப்பட்டிருக்கிறதென
பார்த்து பிரி!

- ப்ரியன்.

என் இதயத்தையும்
உன் இதயத்தையும்
விளையாடவிட்டு
அமர்ந்து
வேடிக்கைப் பார்க்கிறாள்
அம்மா காதல்!

- ப்ரியன்.

வாராதே என்கிறாய்
தள்ளிப் போ என்கிறாய்
நீ எவ்வளவுதான்
உன்னை விட்டு என்னை விலகச் சொன்னாலும்
உன்னையே கட்டிக் கொண்டு அழுகிறது
பாழாய்ப் போன
என் காதல் மனசு!

- ப்ரியன்.

தூக்கிப் போடு!
உதைத்துப் பார்!
உனக்கான பந்துதான்
என் இதயம்!
ஆனால்,
கொஞ்சம் மெதுவாக
அது ஒன்றும்
பூப்பந்து அல்ல
கண்ணாடிப் பந்து!

- ப்ரியன்.