அவன்...அவள்...அவர்கள்...

முதல் சந்திப்பில்
இதயம் தொலைத்து
அவசர அவசரமாய்
தேடி எடுக்கையில்
மாற்றி எடுத்து
பரிதவித்த
அவனின்
அவளின்
அவர்களின்
டைரியிலிருந்து ;
அவர்கள் அறியாமல்
திருடப்பட்ட
சில குறிப்புகள்
இங்கு!

- ப்ரியன்.

வலைப்பூ : http://priyan4u.blogspot.com
மின்னஞ்சல்: mailtoviki@gmail.com

அவன்...அவள்...அவர்கள்
**********************

அவன்:
******
ஒரு அந்திப்பொழுதில்
கடல் ருசிக்கையில்
நீ,கடல் விளையாடும்
பிள்ளைகள் ரசித்திருந்தாய்!
கடல் சுகிக்க வந்தவன்
கடல்கன்னி ருசிக்க ஆரம்பித்தேன்!
கண்ட நீ வீசிய
அலட்சிய பார்வையில்
பிடித்துப் போனது உன்னை
எனக்கு!

அவள்:
******
உன் பார்வையில்
என் உயிர்
கசிய கண்டேன்.
அய்யயோ தவிர்த்தேன்
அதனால் இப்போது
தவிக்கின்றேன்!

அவன்:
******
உனையேதானே பார்த்துக்
கிடந்தேன்!
எந்நொடி எழுந்து போனாய்?
கடற்கரையை தவிக்கவிட்டு!
என்றாலும் என் மனதில்
உட்கார்ந்துகொண்டு!

அவள்:
******

உன் விழி சிமிட்ட
எடுத்துக்கொண்ட
அச்சமயத்தில்
எழுந்து ஓடிவந்தேன்!
நீ மட்டும்
சம்மணம் போட்டு
அமர்ந்து கிடக்கிறாய்
நெஞ்சினில்!

அவன்:
******
உனக்கும் என்போல்
இரசனைதான் போலும்
கடல் சுகிக்க வந்து
பிள்ளைகள் குறும்பு ரசித்து
எனை இன்று
தத்தளிக்க விட்டு போனாய்!
சுய அறிமுகம் செய்திருக்கலாம்!!

அவள்:
******
நல்லவன்தான் போலும்
கடல் சுகிக்க வந்து
எனை மட்டுமே பார்த்துகிடந்தான்
மற்றைப் பெண்கள் மேல் - உன்
கண்கள் மேயவில்லை!
நீ நல்லவன்தான் போலும்!
என்ன சார் பார்க்கின்றீர் என
பெயராவது கேட்டு தொலைத்திருக்கலாம்!!

அவன்:
******
உனக்காகத்தான்
இத்தனைக்காலம்
காத்திருந்ததா? - மனம்
கண்டவுடன்
உன்னை வந்து
கட்டிக்கொண்டதே?


அவள்:
******
உனக்காகத்தான்
காத்திருந்ததா?
என் பெண்மையுள்
மென்மையாய்
ஒற்றைப் பூ
பூக்கின்றதே!

அவன்:
******
இந்த ஊர்தானா நீ?
என்ன பேராய் இருக்கும்?
காதலே! - உலகின் வைத்தியமில்லா
பைத்தியமே
உந்தன்
விலாசம் மெல்ல மெல்ல
அறிகின்றேன்!
சீக்கிரம் வந்துவிடுவேன்!

அவள்:
******
நீ எந்த ஊரடா?
ஏது உந்தன் பேரடா?
போடா எதுவானால் என்ன?
காட்டிவிட்டாய் பைத்தியங்கள்
வசிக்கும் ஊருக்கான
வழி!

அவன்:
******
ஐயோ!
கடவுளே!
ஏனய்யா அவளை
கண்முன் காட்டினீர்?
வெறும் ஆண்மகனாய்தானே இருந்தேன்
அவளைக் காணும் வரை!
கண் விபத்து நிகழ்ந்த சில நொடியில்
போய்விட்டாள் அவளின்
பெண்மையில் கொஞ்சம் என்னில் புகுத்தி!
பார்,
இங்கு நான்
அழுது கொண்டிருக்கிறேன்
பெண்மகளைப் போல!

அவள்:
******
ஏன் கடவுளே
அவனை என்முன்
அழைத்து வந்தாய்?
பார்,
இந்த தாள் முழுவதும்
எழுதியதை
தொட்டுத் தொட்டு
மையின் தரம்
பரிசோதித்து பார்க்கிறது
என் கண்ண்¢ர் துளிகள்!

அவன்:
******
இனி உன்னைப் பற்றி
நினைந்து வருந்தபோவதில்லை!

"ஒன்றை நீ விரும்புவதானால்
அதை அதன் வழி விட்டுவிடு
உன்னுடையதானால் உன்னிடம்
திரும்ப வரும்!
இல்லையானால் இல்லை!"

அவள்:
******
அடேய்!
என்ன காரணம் கொண்டும்
உன்னைப் பற்றி
என் மனம் ஒரு போதும்
இனி நினையாது!

"If you love something, let it go,
If it comes back to you, It's yours
but if it doesn't, it never was"

காதல்:
******
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது!

கடவுள்:
*******
என் கணக்கு வழக்கை
மாற்றியெழுதிய கயவன் நீ!
அவர்கள் இன்னும் சிலநாள்
கழித்தே சந்தித்திருக்க வேண்டும்!
அதன் பின்னே - அவர்களைப் பற்றி
அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்!

காதல்:
******
அதனாலென்ன?

கடவுள்:
*******
முந்திக் கெடுத்த
முந்திரிக் கொட்டையே...
உன்னால் என் கணக்குவழக்குகள்
பாழானதுகளே!
அதனால்,அவர்களுக்கு
தரப்போகிறேன் ஒரு மிகப்பெரிய
தண்டனை!

காதல்:
******
ஐய்யகோ!
நான் செய்த பிழைக்கு - என்
பிள்ளைகளுக்கு தண்டனையா?
அடாது!
எனக்கே தாருங்கள்


கடவுள்:
*******
உனை தண்டித்தலும்
அவர்களை தண்டித்தலும்
ஒன்றுதான்!


அவன்:
******
அலுவலகத்தில் முதல்நாள்
ஆயிரம் கனவுகள்!
கேட்டு கேட்டு
வழிகண்டு
பயிற்சி அறை
நுழையும் கணம்
இரு விழிகள் எனைப்
பார்த்திருந்தன - அவை
சத்தியமாய்
உன் விழிகள்!

அவள்:
******
என் கண்மணிகளே
எப்படி கண்டீர்கள்?
வரப்போவது அவனென்று
அக்கணம் தானே
வாசல் பக்கம் பார்த்தீர்கள்!

அவன்:
******
முகமெல்லாம் மத்தாப்பு
உயிரெல்லாம் பூப்பு
அந்த அறையில்
யாரும் அறியாமல்
மெல்ல பறக்கத் தொடங்கினேன்
நான்!


அவள்:
******
கண்ணும் கண்ணும்
நோக்கியதில்!
என் உயிரெல்லாம்
உறிஞ்சப்பட்டது
பஞ்சாகப் பறக்கிறேன்
நானே நான்!


அவன்:
******
இரு நொடிக்கு
ஒன்று என
கணக்கு வைத்து
கண்கள் எடுத்தன
உனை ஆயிரமாயிரம்
புகைப்படங்கள்
அதில் ஓவ்வொன்றிலும்
காணக்கண்டேன்
உந்தன் உயிர்துளிகள்!

அவள்:
******
தெரியாத உன்
பெயரை ஆயிரமாயிரம்முறை
எழுத்தாணிக் கொண்டு
கீறி கீறி இதயம் முழுதும்
எழுதி செல்கிறது
மனம்!
உன் வழியே!

அவன்:
******
உந்தன் அறிமுகப்படலத்தில்
உச்சரித்தாய் திருநாமம்
"ப்ரியா"
கை எனக்கும் அறியாமல்
காகிதத்தில் எழுதியது
"ப்ரியனின் ப்ரியா"!

அவள்:
******
வணக்கம்!
இவன் "ப்ரியன்"
சொல்ல நீ,கேட்டு
மனம் எனை ஊமையாக்கி
சப்தமாய் உள்ளுள்
உச்சரித்துப் பார்த்தது
இல்லை உந்தன் பெயர்
"ப்ரியா ப்ரியன்"!

அவன்:
******
நீயும் நானும்
தனியே பேசியிருக்க
மெளனமாய் ஒட்டு
கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்
அவனைப் பிடித்து தனியே
விசாரித்ததில்
சிரித்து மழுப்பி
ஓடிப்போனான்
பதில்யேதும் பகராமல்!

அவள்:
******
நீ சொன்ன அதே அவன்
நேராய் என் வாசல்கதவு
தட்டினான்!
"காதல்" என் பேரென்றான்...
மறுபேச்சு ஏதுமில்லாமல்
ஓடி ஏறி அமர்ந்துகொண்டான்
என்னுள்
என் அநுமதியில்லாமல்!


அவன்:
******
பிறந்த நாள்,மாதம் சொல்லியவளை
கட்டாயப்படுத்தி
வருடம் கேட்டேன்!
கணக்குப் பார்த்து
மனம் பெருசாய் சுவாசித்தது!

அவள்:
******
உன் மனம்விட்ட
பெருமூச்சில் என் துப்பட்டா
பறந்துவிட பார்த்தது!
பெருமூச்சின் காரணம்
தெளிந்த மனம்
சன்னமாய் சிரித்து வைத்தது!

அவன்:
******
மறைத்து வைத்தல்
பாவமென்று!
மென்று மென்று துப்பினேன்
வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால்
"யுகம்யுகமாய்
எரியும் சூரியனாய்
என்னை எரித்து கொண்டிருக்கிறது
உன் நினைவு" - என்றேன்
பதிலேதும் இல்லாமல்
எழுந்து போனாய்!
எந்தன் உயிரை கத்தரித்து
போனாய்!

அவள்:
******
ஏனடா!
இவ்வளவு தாமதம்?
இங்கு நான் எரிந்து எரிந்து
தீர்ந்தே விடும்
நிலையிலிருக்கிறேன்!

அவன்:
******
உனக்கு விருப்பமில்லை
போலும்!
முகம் தெரியா இரவில்
உந்தன் முகம் மறந்து
அழுதால் மனம் ஆறும்
கடற்கரையில் அழுதால்
உப்பளவாவது விஞ்சும்!

அவள்:
******
எனை விட்டால்
அவனுக்கு அழ மடி?
இருக்கிறதே
கடல் மடி!

அவர்கள்:
********
அலைத்தொடும் தூரத்திலிருந்து
ஒரு அடி தள்ளியிருந்தவனை
ஒரு பூங்கை கோர்த்தது
தோள் சாய்ந்தது!
பார்க்காமல்,பேசாமல்
உன் வாசம் நுகராமல்
உணர்ந்தேன் "ப்ரியா".

நீ !பார்வையால்
"ப்ரியா" வென விழித்த நொடி
தலை மேலும் கீழும்
காற்றை வெட்டி சொன்னது!
ஆமாம்! நானும்தான்!

இருவரும் கண்ணீர்துடைத்து
மேல் வானம் பார்க்க!
தாயலையை தவிக்கவிட்டு
நம் அடி வந்து
நனைத்துவிட்டுப் போனது
குறும்பு குட்டி அலையொன்று!

காதல்:
******
ஹா!ஹா!ஹா!ஹா!
தண்டனை என்று
ஒன்றும் தராமல் விட்டீர்!

கடவுள்:
*******
தந்தேன் காதலே!
அறியாமல் விட்டாய் நீ!
சில நாள் கழித்து
சேர வேண்டியவர்களை
முன்னமே சேர்த்து வைத்தேன்!
காதலைவிட பெரிய
தண்டனை இல்லை
இருவருக்கும்!

- ப்ரியன்.

7 பின்னூட்டங்கள்:

சுதர்சன்.கோபால் said...

"கணக்குப் பார்த்து
மனம் பெருசாய் சுவாசித்தது!"
நிறய வாட்டி நானும் இந்த மாதிரி நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கேன்.

கொஞ்சம் நீ.....ளமான கவிதைன்னாலும் ஒரு நல்ல முயற்சி.

அப்புறம் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போரீங்க ப்ரியன்??
இன்னுமா நீங்க "மயிலிறகே,மயிலிறகே"(அ..ஆ..) கேக்கல??

காதலைத் தவிர மற்ற உணர்வு சார்ந்த கவிதைகளையும் பதியுங்களேன்.

siragugal said...

Hi priyan,

nalla poem but konjam neelaaaaamaanaaaaa poooooooeeeeeeem

But that last punch line - love itself is a great punishment for lovers - is superb.

Cut shot your poems and made them crisp and try another fields also.
M. padmapriya

யாத்திரீகன் said...

பார்த்தீங்களா ப்ரியன், நான் முன்ன சொன்னதது நியாபகம் இருக்கா ;-)

துடிப்புகள் said...

ரசித்த வரிகள்:

//"ஒன்றை நீ விரும்புவதானால்
அதை அதன் வழி விட்டுவிடு
உன்னுடையதானால் உன்னிடம்
திரும்ப வரும்!
இல்லையானால் இல்லை!"//

//தெரியாத உன்
பெயரை ஆயிரமாயிரம்முறை
எழுத்தாணிக் கொண்டு
கீறி கீறி இதயம் முழுதும்
எழுதி செல்கிறது
மனம்!
உன் வழியே!//

//"யுகம்யுகமாய்
எரியும் சூரியனாய்
என்னை எரித்து கொண்டிருக்கிறது
உன் நினைவு"//

//தாயலையை தவிக்கவிட்டு
நம் அடி வந்து
நனைத்துவிட்டுப் போனது
குறும்பு குட்டி அலையொன்று!//

நல்ல முயற்சி...
(ஒரு சின்ன சந்தேகம்... எனக்கு தெரிந்து கோவையில் கடல் கிடையாதே! ஒருவேளை சுனாமிக்குப் பிறகு அங்கும் கடல் உருவாகி விட்டதோ!?)

ப்ரியன் said...
This comment has been removed by a blog administrator.
ப்ரியன் said...

#சுதர்சன் கோபால்#

கல்யாண சாப்பாடா இப்போதானுங்க எனக்கு 24 ஆகுது... :)

#காதலைத் தவிர மற்ற உணர்வு சார்ந்த கவிதைகளையும் பதியுங்களேன்.#

நட்பு பற்றி எழுததான் சுதர்சன் ஆரம்பித்தேன் காதல் நடுவுல வந்து இழுத்துட்டு வந்துடுச்சு இங்கே :(

#சிறகுகள்#

#Cut shot your poems and made them crisp and try another fields also#

கண்டிப்பாக முயல்கிறேன் பத்மா...


செந்தில் / Senthil#பார்த்தீங்களா ப்ரியன், நான் முன்ன சொன்னதது நியாபகம் இருக்கா ;-)#

இதையா சொல்கிறீர் செந்தில்

#enna ப்ரியன்,
kuti kavidhaigal-la mungiyaacha, adhaan முத்து eduthachula, inni konjam ungal kavidhai thodar ondrai aarambikalamay !!! #

முகில்#நல்ல முயற்சி...
(ஒரு சின்ன சந்தேகம்... எனக்கு தெரிந்து கோவையில் கடல் கிடையாதே! ஒருவேளை சுனாமிக்குப் பிறகு அங்கும் கடல் உருவாகி விட்டதோ!?)#

எனக்கு பிடித்த வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி முகில்...

கோவையில் கடல் இல்லை என்ற கவலை எனக்கு சின்ன வயது முதல் உண்டு...ஆனால் நான் பிழைக்க வந்த சென்னையில் கடல் உண்டே முகில் :) இப்போது குப்பை கொட்டுவது சீர்மிகு சென்னையில் தான் :)

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள்

Chandravathanaa said...

நன்றாயிருந்தன.