யாரும் கேட்காத பாட்டு

அடுத்தப் பெட்டியில் இருக்கும் போதே
காட்டிக் கொடுத்துவிட்டது
அவனை
கட்டைக்குரலில் அந்த சோகப்பாட்டு!

முந்தைய நிமிடம் வரை சும்மா இருந்தவர்கள்
அவசர அவசரமாய் செய்திதாளில்
மூழ்கிப் போனார்கள்!

கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்!

ஒரு சிலர்,
முன்னங்காலில் முகம் புதைத்து
தற்காலிகமாய்
செத்தும் போனார்கள்!

இவன் நகர்ந்தால் போதுமென
அவசரமாய் அம்பது நூறு காசுகள்
இட்டனர் இன்னும் சிலர்!

தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்!

யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில்
அந்தப் பாட்டு
அழுதபடியே போனது
அது பாட்டிற்கு!

- ப்ரியன்.

வேப்பம் பூக்கள்

தென்றலுக்குக் கூட
ஏராளமான பூக்களை
அள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!

என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!

- ப்ரியன்.

* காதல் பேரானந்தம் *

கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!

- ப்ரியன்.

இரயில்

என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!

- ப்ரியன்.

நிலவைப் பிரசவித்தவள்

உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!

- ப்ரியன்.