யாரும் கேட்காத பாட்டு

அடுத்தப் பெட்டியில் இருக்கும் போதே
காட்டிக் கொடுத்துவிட்டது
அவனை
கட்டைக்குரலில் அந்த சோகப்பாட்டு!

முந்தைய நிமிடம் வரை சும்மா இருந்தவர்கள்
அவசர அவசரமாய் செய்திதாளில்
மூழ்கிப் போனார்கள்!

கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்!

ஒரு சிலர்,
முன்னங்காலில் முகம் புதைத்து
தற்காலிகமாய்
செத்தும் போனார்கள்!

இவன் நகர்ந்தால் போதுமென
அவசரமாய் அம்பது நூறு காசுகள்
இட்டனர் இன்னும் சிலர்!

தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்!

யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில்
அந்தப் பாட்டு
அழுதபடியே போனது
அது பாட்டிற்கு!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

ப்ரியன்... வார்த்தைகள் இல்லை , பல நாட்கள் கழித்து காதல் இல்லாத கவிதை ஒன்று... , மனதை மிகவும் தொட்டது.... நாம் அனைவரும் தினசரி வாழ்வில் ஒரு முறையாவது கடந்து வந்த சம்பவம் இருந்திருக்கும்.. அதிலும் அந்த கடைசி வரிகள் மனதை மிகவும் கணக்க வைத்தன....

இதே சம்பவத்தை, அந்த பாடகரின் வழியே சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை பண்ணி பார்கிறேன்...

ப்ரியன், நீங்கள் சென்னையில்தான் இருக்கீங்களா ? கோவைனுல நெனச்சேன்... முடிந்தால் சொல்லுங்கள், எங்காவது சந்திப்போம். :-)