நாணமெடுத்து உடுத்திக் கொள்கிறேன்!

மெல்ல மெல்ல
ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!

*

வாங்கி வந்த
புடவை அழகாயிருக்கிறது
எப்படி தேர்ந்தெடுத்தாய் என்றேன்!
'என் தேவதைக்கான புடவை என்றேன்;
நான் நீ என எல்லா புடவைகளும் ஓடி வந்தன!
மீண்டுமொருமுறை ஆழுத்திச் சொன்னேன்
என் தேவதைக்கான புடவை என்று!
இதனை முன்னுக்குத் தள்ளி மற்றது எல்லாம்
மூக்கை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டன'
என்கிறாய்!
முகமெல்லாம் வெட்கம் வடிய
நெஞ்சோடு சாய்ந்துக் கட்டிக் கொள்கிறேன் நான்!

*

வரும்போது
மல்லிகை கேட்டிருந்தேன்!
மறந்தவனிடம்
பேச மறுத்து
'உம்'மென்றிருந்தவளிடம்!
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!
கடவுளே,
இவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்!

- ப்ரியன்.

10 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தங்கள் கவிதைகள் "கசல்" கவிதையின் சாயலுடன் அமைந்திருக்கிறது. தொடர்ந்தும் முயற்சியுங்கள். முன்னேற வாழ்த்துக்கள்.
அன்புடன்
"வானம்பாடி" கலீஸ்

Anonymous said...

முதல் கவிதை அழகு, இரண்டாம் & மூன்றாவது கவிதைகளில் கற்பனை ஆனந்த தாண்டவமாடுகிறது.

(இத படிக்கிற பசங்க இனிமே எப்படியெல்லாம் காதலிய கவரலாம் என தெரிந்து கொள்ளலாம், ஆனா பொண்ணுங்க படிச்சா ஆபத்து தான் ‍ உங்களுக்கு இந்த மாதிரி ஒரு நல்ல சாக்கு சொல்ல கூட தெரியலையேன்னு சொல்லிடுவாங்க)

நல்லா இருந்தா சரி தான். வாழ்த்துக்கள் கவிஞரே

Raghavan alias Saravanan M said...

வித்தியாசமான முயற்சிகள்...

தொடரட்டும் ப்ரியன்...

வாழ்த்துக்கள்..

Anonymous said...

ஆஹா, உங்களுக்கு மட்டும் எப்படிங்க கற்பனை இப்படி கவிதையாய் கொட்டுது.

எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கோ.

நீங்கள் தபு சங்கரின் "தேவதைகளின் தேவதை" படிச்சி இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவரு கோவித்துக்கொள்ள போறாரு நீங்க போட்டிக்கு வந்துட்டீங்கன்னு.....

சேதுக்கரசி said...

ரொம்ப நல்லா இருக்கு.
நானும் வந்துட்டேன் :)
அங்கே இல்லைன்னாலும் இங்கே :))

நவீன் ப்ரகாஷ் said...

//ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!//

:)) அழகு ப்ரியன்

G.Ragavan said...

அருமை ப்ரியன். மூன்றாம் கவிதை மிகச் சிறப்பு. ரெண்டாவது முறை படித்ததும் புரிந்தது. முதல் முறை படித்துப் புரியாத பொழுதும் இரண்டாம் முறை படிக்க வைத்தது கவிதையின் வெற்றி.

தாரிணி said...

//ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!//

/'உம்'மென்றிருந்தவளிடம்!
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!/

அருமை! அருமை!! அருமை!!!

Anonymous said...

Very nice

Suryan said...

This is beautiful .......will come back.