நடு நிசி நாய்கள்

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அதுகளிடம் அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.

கடிதம் கை சேரும் கணம்

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!

- ப்ரியன்.

ஒரு சேரி வீட்டின் உறுப்பினர்கள்

காலையிலிருந்து வெந்த உடம்பை
எரியூட்ட டாஸ்மாக்கில்
மொத்தமாய் கூலி தொலைக்கும்
அப்பா!

சோற்றுக்கு கூட பணம் தாராதவனை
கெட்ட வார்த்தையில் கடிந்துக் கொண்டே
அவனுக்கும் சேர்த்து சோறு வடிக்கும்
அம்மா!

ஊரில் உள்ள சேறேல்லாம்
தந்து சேர்க்கும்
வீடோடு ஒட்டிக் கொண்ட
ஒரு தெருநாய்!

அப்புறம்,
வீட்டின் கூரை ஓட்டை
ஒவ்வொன்றிலும் ஒரு நிலவு
தேடும் சில பிள்ளைகள்!

- ப்ரியன்.

கனவும் அதில் வந்த கவிதை வரியும்

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!

அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!

அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!

இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்!

- ப்ரியன்.

* வீடு *

மொத்தம் எட்டு அறைகள்
பழைய சாமான்கள் போட்டுவைக்கும் அறையும்
நெல்மூட்டை அடுக்கிவைக்கும் அறையும்
அறை கணக்கில் அடக்கமில்லை!
அக்கா
வீட்டுக்கு வெளியே இருக்கும்போது
துணைக்கு அம்மாவும்
நீட்டிப் படுத்துறங்க
அகலமானதொரு திண்ணை!
வருடத்திற்கு ஒருமுறை
நான்கு ஏக்கரில் விளையும்
மிளகாய் காயவைக்க
வசதியான திடல்!
அக்காவிற்கும் அம்மாவிற்கும்
மல்லிகைப் பூ;
அவசர சமையலுக்கு முருங்கை தர
அளவாய் ஒரு தோட்டம்!
வெளியே போக மட்டும் காடு;
மற்றப்படி குளியல் அறை என்று ஒன்று தனியாக இருந்தது;
எங்கள் கிராமத்துவீட்டில்!
அவ்வீட்டை விற்றப் பணத்தில்
வாங்க முடிந்தது இங்கு
எட்டுக்கு எட்டில் இரண்டு அறையும்
பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பு அறையும்
இணைந்த குளியலறையும்!

- ப்ரியன்.