நடு நிசி நாய்கள்

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அதுகளிடம் அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.

4 பின்னூட்டங்கள்:

ILA(a)இளா said...

ரசிக்க முடிகிறது உமது கவிதை நடை. கருப்பு ப்லொக் வெச்சுகிட்டு இப்படி கவிதை எழுதினா, மத்தியானதில் கூட படிக்க பயமாய் இருக்கும்

ப்ரியன் said...
This comment has been removed by a blog administrator.
ப்ரியன் said...

நன்றி விவசாயி(உண்மையான பெயர் என்னவோ?)...பயமா இருக்கா? என்னப்பா இன்னிக்கே 2 பேர் இப்பிடி சொல்லிட்டீங்கள் கண்டிப்பா நிறம் மாறனும் போல

davidwilliams1970 said...

I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog