அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - காட்சிக்கவிதை
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு : அருவி
நடுவர்: நிலா என்றழைக்கப்படும் நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு : அருவி
அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;
கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;
சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;
எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;
வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்
கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ மதியம் 12:30 1 பின்னூட்டங்கள்
இனிய அன்பர்களே,
அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.
அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான
ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்
இதோ இதோ வந்துவிட்டது....
மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்
நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,
பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,
எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்
என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு
அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.
அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.
அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,
66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு
கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.
அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,
யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,
தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று
ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.
எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு
அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.
அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி
பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.
அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்
வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.
அன்புடன் சுடரோட்டம்
- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் தித்திப்பு யுத்தம்
- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது
அன்புடன் பட்டிமன்றம்
- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் கவிதைப் போட்டிகள்
- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :)
அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக
கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று
தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.
துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்
மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி
சேதுக்கரசி செய்து வருகிறார்.
முடிவுகளை அறிந்துக்கொள்ள : அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் படியுங்கள்
பதித்தவர் : ப்ரியன் @ மதியம் 12:21 0 பின்னூட்டங்கள்
கைகள்
உதிர்ந்து தொலைய
மென்மையான இறக்கைகள்
முளைக்கின்றன பக்கமாய்!
மெல்ல மெல்ல
அசைவு பழகி
சிறு குஞ்சென
தத்தி
தவறி விழுந்து
பின் மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
எட்டா உயரம்
கடந்திடும் வேகத்தோடு!
காடுகள்
வயல்கள்
நதிகள் , நகரங்கள்
கடந்து மறைகின்றன
காலடியில் சடுதியில்!
அசைவின் வேகத்தில்
சிறகொன்று
உதிர்ந்து நழுவ
காற்று காதோரம் வந்து
கிசுகிசுக்கிறது
கிச்சுகிச்சு மூட்டுவதை
நிறுத்தென!
தூரம்
காலம் மறந்து
திரிகிறேன்
கரிய வானெங்கும்
பறத்தலின்
சுகம் சுகித்து பருகி!
சிறகுகளில் வலியில்லை
பறத்தல் சலிக்கவில்லை
ஆனாலும்
விழி வழி
செவி வழி
சிறகேறி உலகம் அமர
பாரம் தாங்காமல்
தரையிறங்குகிறேன்;
அறுபட்டு எங்கோ
விழுந்து தொலைகிறது சிறகு!
அதோடு சேர்த்து
பறத்தல் சுகம் பேசிய
இக்கவிதையும் முடிகிறது
அவசரமாய் இத்தோடு!
என்றாலும்
என்றாவது ஒரு நாளில்
பறவையாகும் பாக்கியம்
கிடைத்தால் எழுதுகிறேன்
மிச்சத்தை!
- ப்ரியன்
பதித்தவர் : ப்ரியன் @ மாலை 5:56 2 பின்னூட்டங்கள்
கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!
விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!
என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!
அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.
அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;
என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட
அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.
அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க
கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!
பதித்தவர் : ப்ரியன் @ மாலை 5:58 2 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...