அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-


எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி

படம் : 01



படம் : 02



படம் : 03



படம் : 04




படம் : 05



படம் : 06



படம் : 07



படம் : 08



படம் : 09



படம் : 10

மற்றொரு மாலையில்... - 10

உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!



நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...

மற்றொரு மாலையில்... - 09

காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!


பரிட்சை அறை வெளியே
முதல் தேர்விற்கு முந்தைய
பதட்டமான அந்நொடிகள்!

எங்கெங்கோ தேடி
சலிப்படைந்த
கண்கள் தரை தொட்டு
எழும்பிய சமயம்
முகமெல்லாம் புன்னகையாய்
நின்றிருந்தாய் எதிரில்!

'படிச்சிட்டியா?
நல்லா எழுது;
வாழ்த்துக்கள்!'
அவசரமாய் உதிர்ந்த வார்த்தைகள்
இறக்கை விரித்து காற்றில்
பறக்க தொடங்கியிருந்தன;
பக்கத்தில் நானும்
ஒரு காற்றாடியாய் மாறி
நானும் பறந்திருந்தேன்;
எனக்கே ஆச்சர்யம்தான்
மேலே பேசியதெல்லாம்
நான்தானா என்பதில்
எனக்கே பெரும் ஆச்சரியம்தான்!

உனக்கேற்பட்ட ஆச்சரியம்
இன்று சொல்லியா முடியும்!

உனக்கு பேசக்கூட வருமா?
அதிலும் என்னிடம் என்பதாய்
ஒரு பார்வை
மேலாய் படரவிட்டு
'இந்தா கோவில் பிரசாதம்'
கைவிரித்து நீ தர
கண்மூடி தொட்டு நெற்றியில் நான் பூச
கையிருந்த எழுதுகோல் தவறி
மண்ணில் விழுந்தது!

குனிந்து எடுத்து
நல்லா எழுது
என்று உன் தேர்வறை நோக்கி நடந்தாய்!
எனக்கு ஏனோ
மரவெட்டியும் வனதேவதையும்
மனத்திரையில் வந்துப்போனார்கள்!

எனக்கே சொல்லாமல்
வேண்டுமென்றே
எழுதுகோலை தரையில் விட்டது
அந்த உயிர் சாத்தானின் வேலை
என்பது வெகுநாள் தெரியாமலே இருந்தது!

நீ எழுதுகோல் தொட்டுக் கொடுத்த
நினைப்பில்
அன்றைய தேர்வு நன்றாகவே முடிந்தது;
அடுத்தடுத்த தேர்வுகளும்
அவ்வாறே!

விழி படபடக்கும் சப்தம்

காதலர் தின வாழ்த்துக்கள்


*

உன்
கோபங்களை
தாபங்களை
மன்னித்துவிடுகிறேன்
முத்தத்தால் நீ முடிப்பதானால்!

*

புல்லாங்குழல்
அழுவதாகவே இருக்கின்றது;
நீ வரும் நாட்களில் மட்டுமே
அது இசையாய் வழிகிறது!

*

மலர் பறிக்கையில்
மேல் விழுந்து சிலிர்ப்பூட்டும்
பனித்துளியாய் உன் நினைவு!

*

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!

*

என் பார்வைக்கெதிரே
தளிர் இலையொன்று
பழுத்து வர்ணம் மாறி
உதிர்கிறது!
நீ வருகிறாய்
உதிர்ந்திட்ட அவ்விலை
மீளவும் மரம் பொருந்தி
பச்சையாக தொடங்குகிறது!

*

சில முடிகள் வெளுத்துவிட்டன
தேகம் பலவீனமடைந்து விட்டது
தோல்கள் சுருக்கம் கண்டுவிட்டன
என்றாலும் என்ன
இப்போதும்
காதலின் குழந்தைகள் நாம்!

*

காதல் பாதையில்
விழி மூடியபடி
பயணிக்கிறேன்;
வழிகாட்டியபடி
துணைவருகிறது
உந்தன் விழியின் ஒளி!

*

உன்னைவிட்டு பிரிந்து
நடக்கும் தருணங்களில்
என் சவத்தை
நானே சுமந்து தொடர்கிறேன்!

*

மரணம் ஒத்த
தூக்கமதிலும்
கேட்டபடியே இருக்கிறது
உந்தன் விழி படபடக்கும் சப்தம்!

*

கொஞ்சினால் மிஞ்சும்
மிஞ்சினால் கொஞ்சும்
காதலும் குழந்தைதான்!

- ப்ரியன்.

பெரியதாக்கி பார்க்க படம் மேல் சொடுக்கவும்

மற்றொரு மாலையில்... - 08

தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!

இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!

கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!

புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!

அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!

காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.

'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!

- உயிர் இன்னும் உருகும்.