கைம்பெண்

குங்குமம் தவிர்த்து
ஒட்டுப் பொட்டைத்
தேடும் நேரம்!

மனதுக்குப் பிடித்த
மல்லிகைத் தவிர்த்து
வாசம் குறைந்த மற்றப்பூ
நாடும் நேரம்!

பேருந்தில் முட்டி மோதி
அங்கம் யார்மேலும் படாமல்
செளகரியமாய் ஓரிடம்
கண்டு நிற்கையில்
யவனோ ஒருவன்
கம்பளிப்பூச்சிப் பார்வையில்
மார்பகம் தீண்டப்படும் நேரம்!

மாதாமாதம் விலகி நிற்கும்
முன் இருநாள்
பின் மூன்றுநாள்
பெண்மை பொங்கி
கொல்லும் நேரம்!

ஆசிரியர் அப்பாகிட்டே
கையெழுத்து வாங்கிட்டுவரச் சொன்னாங்க!
அறியாப் பிள்ளைகள்
மதிப்பெண் பதிவேட்டை
நீட்டும் நேரம்!

இவைத் தவிர்த்து
எப்போதாவது
வருகிறது உந்தன்
ஞாபகம்!

என்றாலும் இன்னும்
சில காலம்
உயிருடன் இருந்திருக்கலாம்
நீ!

- ப்ரியன்

1 பின்னூட்டங்கள்:

பத்ம ப்ரியா said...

Excellent .. it is a real poem..good keep it up viki