ஒற்றை சிறகு
கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!
- ப்ரியன்.
கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
இதயத் தரையெங்கும்
சிதறிக்கிடக்கும்
ஞாபக மணிகளைக்
கொத்தித் தின்றபடியே
பறந்து பயணிக்கிறது
காலப் பறவை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
உலக மாற்றங்களின் வேகங்கள் ஏதும் இன்னும் அதிகம் பாதிப்பை உண்டாக்காத கிராமம் சென்றபோது படம்பிடித்த ஆதிவாசி குழந்தையின் படமொன்று!
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
குறிச்சொல் புகைப்படங்கள்
சமீபத்தில் ஒக்கேனக்கல் சென்றபோது எடுத்த படங்கள் இவை.
கன்னடத்தில் 'ஒஹே' என்றால் புகை என்று பொருள்.தண்ணீர் விழுந்து புகை எழும்புவது தெரிகிறதா உங்களுக்கு?
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
குறிச்சொல் புகைப்படங்கள்
மொத்தம் எட்டு இடத்தில்
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறான்
பிரம்மன் உன்னில் என்கிறான்!
அடக் கடவுளே!
எனக்கே தெரியாத இடத்தில் ஒன்றா?
எப்படி கண்டுகொண்டான் இவன்!
*
காதல்
மயக்கத்திலிருக்கும்போது
என்னைவிட அவனுக்கு
ஒத்துப்பாடும் தோடையும்!
சீண்ட சீண்ட
சிணுங்கலுக்கு
என்னோடு போட்டிக்கு நிற்கும்
கொலுசையும்!
கழற்றி வீசியெறியவேண்டும் முதலில்!
*
அவனை முந்தானையாய்
சுமக்கும் தருணங்களைவிட
அற்புதமான தருணங்களிருப்பதாய்
தெரியவில்லை எனக்கு!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
மெல்ல மெல்ல
ஆடை விலக்குகிறாய்!
வேகமாய் நாணமெடுத்து
உடுத்திக் கொள்கிறேன் நான்!
*
வாங்கி வந்த
புடவை அழகாயிருக்கிறது
எப்படி தேர்ந்தெடுத்தாய் என்றேன்!
'என் தேவதைக்கான புடவை என்றேன்;
நான் நீ என எல்லா புடவைகளும் ஓடி வந்தன!
மீண்டுமொருமுறை ஆழுத்திச் சொன்னேன்
என் தேவதைக்கான புடவை என்று!
இதனை முன்னுக்குத் தள்ளி மற்றது எல்லாம்
மூக்கை உறிஞ்ச ஆரம்பித்துவிட்டன'
என்கிறாய்!
முகமெல்லாம் வெட்கம் வடிய
நெஞ்சோடு சாய்ந்துக் கட்டிக் கொள்கிறேன் நான்!
*
வரும்போது
மல்லிகை கேட்டிருந்தேன்!
மறந்தவனிடம்
பேச மறுத்து
'உம்'மென்றிருந்தவளிடம்!
சிரி!ஒரே ஒரு நிமிடம் சிரி
என கேட்டவனுக்காக
ஒப்புக்கு சிரித்து வைக்க
பிச்சைப் பாத்திரமாக கையை வைத்தவன்
மும்மரமாய் நூலெடுத்து
பூ கட்டுபவனாய்
இடம்பார்த்து அமர்கிறான்!
கடவுளே,
இவனிடமெப்படி கோபம் காட்ட துணிந்தேன்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 10 பின்னூட்டங்கள்
ஆர்வமாய்
தொலைக்காட்சி பார்த்திருக்கையில்
வா!வந்து
வந்தமர்ந்துக் கொள்ளென
மடியில் அமர்த்திக் கொள்கிறாய்!
போ!
இனியெங்கே தொலைக்காட்சி பார்ப்பது!
*
என்னைப் பற்றி
எழுதுவதில் அல்ல!
உன் முதல் வாசகி என்பதிலேயே
பெருமையெனக்கு!
*
விடுமுறை நாளொன்றில்
நண்பிகளுடன் சுற்றி அலைந்து
களைத்து திரும்புமிவளுக்கு
பிடித்த பட்சணத்தை தயாரித்து
சுட சுட பரிமாறுகிறாய் -
ஒரு தாயின் கரிசனத்தோடு
டேய்!உனதன்புக்கு இணையாய்
என்னடா தந்துவிடுவேன் உனக்கு!
வா!வந்து
எனை முழுதும் எடுத்துக் கொள்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
ஒரு பூனையின் சாமார்த்தியத்துடன்
சமையறை நுழைந்து
பின் அணைத்து
அவன் இதழ் புணர்ந்த
அதிர்வின்று மீளா பேதையிவள்,
ஒன்றுக்கு இரண்டுமுறை
உப்பிட்டுவிட்ட உணவை
உண்டபடியே
ருசிப்பதாய் சொல்கிறான்;
இதழ் இன்னமும்!
*
மாராப்புக்கு
பின்போட்டுக் கொள்ளும் சமயங்களில்;
பின்னாக எனைக் குத்திக் கொள்ளேன் என்று
என்றோ அவன் சொன்ன
ஒற்றைவரி மனம் கொத்தி நிற்க
முகமெல்லாம் வெட்கம் தொத்தி நிற்கும்!
*
மொத்தமாய்
முழுசாய்
எல்லாம் கிடைத்துவிட்டப் பின்னும்
ஆடை மாற்றும் சமயங்களிலும்
அறையிலிருக்க வேண்டுமென
அடம்பிடிக்கிறாய்!
ச்சீ!
அல்பமடா நீ!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
பொன்ஸ் பா.க.ச பதிவு போட்டு நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டார் என்றாலும் லேட்டாகவாவது ரிசல்ட் கொடுக்க வேண்டியது கடமையாகிறது.
கருத்துக்கணிப்பு முடிவு :
மொத்த வோட்டுக்கள் : 138
வேண்டும் : 109
வேண்டாம்! : 15
பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! : 14
இதில் வேண்டாம்! , பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா! என்ற இரு தேர்வுகளும் ஒரே பொருளை (தமிழில் - மீனிங்) தருவதால் அவற்றுக்கு இட்ட வாக்குகள் செல்லாத வோட்டுகளாக பா.க.சங்கத்தால் உறுதிப்படுத்தப் படுகிறது.
எனவே , செல்லும் வோட்டுகள் 109 இவை அனைத்தும் வேண்டும்! என்ற தேர்வுக்கே செல்லுகிறது.எனவே கருத்துக் கணிப்பில் 100% சதவீதம் வேண்டும்! என்ற தேர்வுக்கே!
வோட்டு போட்ட அனைத்து பா.க.ச அன்பர்களுக்கும் + கள்ளவொட்டு போட்ட மக்களுக்கும் நன்றிகள் :)
வணக்கம் நண்பர்களே,
இந்த வார நட்சத்திர பதிப்பாளர் 'பொன்ஸ்' பற்றிய கருத்துக் கணிப்பு.இந்த வலைப்பூவில் என் கவிதைகள்(??) விடுத்து பதியப்படும் இரண்டாவது பதிவு இது.
பாலாபாயை கலாய்க்க இந்த பதிவென்பதால் இந்த சிறப்பு.பொன்ஸ் நட்சத்திர அந்தஸ்து பெற்றவுடன் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு நினைவிருக்கலாம்.இல்லாவிட்டால் மீண்டும் இங்கே
/*நட்சத்திர வாரத்தில் ஒரு பா.க.ச பதிவு கட்டாயம் உண்டுதானே?*/
அதன் ஒரு முகமாக,இந்த கருத்துக் கணிப்பு(இன்னும் ஒண்ணு ஹி ஹி ஹி).நீங்கள் செய்ய வேண்டியது
நட்சத்திர பதிவில் பா.க.ச ஸ்பெஷல் பதிவு?
1.வேண்டும்
2.வேண்டாம்
3.பாவம்!!!அவரை விட்டுடுங்கப்பா!
என்ற மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பது.'வேண்டும்' என எவ்வளவு முறை கள்ளவோட்டு போட்டாலும் கண்டுக் கொள்ளப்படமாட்டது ;).
வோட்டுப் பெட்டி இங்கே:
பதித்தவர் : ப்ரியன் @ 29 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வலைப்பூ
இந்தப்படம் ஏதோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டதல்ல.என் மாமா தோட்டத்தின் கிணற்றுமேட்டில் எடுக்கப்பட்ட படமே.இங்கே இருக்கும் மரங்கள் என்ன மரம் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம்.கையில் பிடித்துள்ள பழம் அம்மரத்தின் பழமே.
க்ளூ : குயில்களுக்கு மிகவும் பிடித்த பழம் இது.
பதித்தவர் : ப்ரியன் @ 23 பின்னூட்டங்கள்
குறிச்சொல் புகைப்படங்கள்
அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!
*
ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!
*
எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!
*
உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!
*
உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!
*
ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
நன்கு சாற்றி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்,
தூக்கமும்
கவிதையும் இல்லா
பின்னிரவு கழிகிறது
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்
மின்விசிறியின் சப்தத்தினோடு!
- ப்ரியன்
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!
*
உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!
*
உன் அலங்கார அறையை
முன் அநுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;
ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!
*
காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!
*
வலையோடு காத்திருக்கிறேன்
விண்மீனான உனைப்
பிடித்துவிடும் ஆசையோடு!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 7 பின்னூட்டங்கள்
மொட்டை மாடி
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;
சாக்கடையில் விழுந்து
பிரகாசித்துக் கொண்டிருந்தது
இரவெல்லாம் நிலவு
யாதுமொரு சலனமில்லாமல்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 6 பின்னூட்டங்கள்
ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!
தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!
மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!
இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!
- ப்ரியன்.
** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!
- ப்ரியன்.
** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
மழை பருகி
நாளான பூமியில்
வேர்வரை காய்ந்து நிற்கும்
மரமொன்றின்
உயிர் துளிர்க்கும்
நம்பிக்கையில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
- ப்ரியன்.
** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
தந்த
ஒற்றை முத்த சுவைக்கே
அசந்துப் போனால் எப்படி?
தந்து - பெற
இன்னும் மிச்சமிருக்குது
ஆகாயம்!
- ப்ரியன்.
* ஆகாயம் - மிகுதி எனக் கொள்க
** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
ஒடிந்த வலியினையும்
தீக்கோலிட்ட
புண்ணினது ரணத்தையும்
காற்றினூடே
சொல்லிச் சொல்லி
அழுகிறது
புல்லாங்குழல்
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 14 பின்னூட்டங்கள்
கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்
- ப்ரியன்.
இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்
பதித்தவர் : ப்ரியன் @ 20 பின்னூட்டங்கள்
வீரமணியைத் தொடர்ந்து
ரெடி செட் கோ... மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல
பினாயிலுக்கு ஸ்ட்ரா
பூங்காவில் கூட்டு சேர்ந்து கூத்தடித்த
முன்னாள் தலைமை ஆசிரியனுக்கு விடை கொடுத்து
நகருங்கால்,
தம்பி அழைத்தது அவ்வாசிரியனே
பாலாவை சுட்டி அவரிடம் மன்னிப்பு கோரியதாய்ச் சொல்லும்
பேசிய பேச்சுக்கெல்லாம் ஏட்டிக்கு போட்டி பேசினேன்
தவறாய் எண்ணி இருக்கலாம்.
(கண்ணன் , தலைமை ஆசிரியர் , குப்புசாமி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , சிங்.ஜெயக்குமார்,பாலபாரதி , நான் , அருள்குமார்)
வீரமணி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , அருள்குமார் ,பாலபாரதி)
பதித்தவர் : ப்ரியன் @ 24 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வலைப்பதிவர் சுற்றுலா
கரையாக
படர்ந்து கிடக்கிறேன்!
தொட்டு தவழ்ந்து
சிலிர்ப்பூட்டியபடி
நகர்கிறார் நீ நதியாக!
*
பட்டுப்போன
பூக்களாக
என் கவிவரிகள்!
உன் வாசிப்பில் மயங்கி
பூரித்து பூக்கிறது
புதுப் பூவாய்!
*
உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!
*
நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!
*
இதயத்தின் நான்கு
அறை சுவர்களிலும்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன் பு(ன்ன)கைப்படத்தினை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 6 பின்னூட்டங்கள்
நானும் நீயும்
தூரமாயிருக்கும் போது
சுடுகின்ற
அதே மவுனம்!
அருகருகே இருக்கையில்
அழகாய் இடையில்
வந்தமர்ந்துக் கொள்கிறது!
*
என் கவிதை புத்தகத்தில்
கண் தெரியாதவள் போல்
வருடி நீ படித்த
அக்கவிதைதான்
பூப்படைந்த கவிதை!
*
உனைப் பார்க்கப் போகும்
அந்நொடியில்தான்
அடைப்பட்டிருக்கிறது
எந்தன் உயிர்!
*
உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!
*
உன் நினைவுகளை
அடுக்கி அடுக்கி வைத்ததில்
என் இதயம் ஆனது
பெரிய காதல் நூலகம்!
*
காதல் கடவுளிடம் கேட்டுவைத்தேன்
அவனுக்கே தெரியவில்லையாம் - இப்போது
உன் வாசலில் காத்து கிடக்கிறோம்
சாளரம் திறந்து சொல்லிவிட்டுப் போ
காதல் என்ன நிறம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 25 பின்னூட்டங்கள்
மனதுடன் இணைந்த
காதலியை காண தடை
அம்முதல்நாளின் பரிதவிப்பு;
நண்பர்களின் துணையுடன்
காதலியுடனான திருட்டத்தன
சந்திப்புகளின் தித்திப்பு;
போராட்டங்கள்
ஏக்கங்களின் முடிவில்
காதலியுடன் கைக்கோர்க்க
அனுமதி
ஆகா பரவசம்.
இங்கே காதலி = ப்ளாக்
பரிதவிப்பு - தித்திப்பு - பரவச அனுபவத்துடன் முடிந்திருக்கிறது ப்ளாக் தடை.
(இன்றைக்கு (ஜூலை 21) மதியம் 2.00 மணி அளவிலிருந்து எல்லா ப்ளாக்குகளும் சென்னையில் படிக்க கிடைக்கிறது என் ISP -> BSNL)
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வலைப்பூ
நவீன் அண்ணாச்சி கூப்பிட்டாரு
வெற்றி அண்ணன் இழுத்துப் பார்த்தாரு
குமரன் அண்ணாத்தேயும் கொடஞ்சு கொடஞ்சு கேட்டாரு
ம் மசிவோமா நாம
இந்த அந்த ன்னு தள்ளித் தள்ளி
ஆறப் போட்டாச்சு ஆறு பதிவை
வேற ஒண்ணுமில்லை மக்களே
வழக்கம் போலதான்
வேலை மேலதான்
பழி!
இதோ என் 'ஆறு' பதிவு;படிச்சுட்டு ஒரு ஆறு பின்னூட்டமாவது வரணும் ஆமா!
*
ஆற்றிலிருந்து
தோண்டப்படுகிறது மணல்
அக்குழியிலேயே அவ்வாற்றை
சமாதியாக்க!
*
வெள்ளி ஒட்டியாணமாய்
ஆறு ஓடிய
எம் ஊரின் தெருவெல்லாம்
தண்ணீருக்காய்
பிளாஸ்டிக் குடங்களின்
தவங்கள் இன்று!
*
கால் நனைத்து
மனம் சில்லிடவைத்த
ஆற்றை இன்று கடக்கையில்
தட்டிவிழ வைக்கிறது - பல் இளிக்கும்
அதன் விலா எலும்புகள்!
*
ஊருக்கே தண்ணீர் கொடுத்த ஆற்றுக்கு
நாக்கு வறண்டு கிடக்கிறது
ஒரு குவளை தண்ணீர் தர யாருமில்லை;
தண்ணீரும் இல்லை!
*
கிராமத்துக்கு செல்லுகையில் எல்லாம்
ஏதாவதொரு மாற்றம் கண்ணில் படும்
ஆனாலும்,
பளேரென இதயத்திலேயே அறையும்
ஆற்றின் ஆழம்!
*
முந்நாட்களில்
தொப்பென குதிக்கையில்
கால் சல சலக்க நடக்கையில்
தவம் கலைந்த
அவசரத்தில் பறந்த கொக்குகள்;
வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்
பேர பிள்ளைகளுக்கு
பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்
என்னைப் போலவே!
*
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 7 பின்னூட்டங்கள்
மும்பையில் மூன்று வருடங்களுக்கு முன் "இந்தியா கேட்"டில் குண்டுவெடித்தப் பொழுது நான் மும்பையில் இருந்தேன்.அக்கணம்,அச்செய்தியை தொலைக்காட்சியில் கண்ட கணம் எழுதியது...இன்றும் மும்பையில் குண்டுவெடித்து இக்கவிதையோடு ஒத்துவருவது மனதினை என்னவோ செய்கிறது.இறைவா!இறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தா!இனி இது போலொரு கொடுமை நிகழாமல் காத்திடு!
மும்பையில் குண்டுவெடிப்பு
ஐம்பது பேர் பலி
அவசரம் காட்டும் சேனல்கள்!
இல்லையில்லை பலி எண்ணிக்கை
வெறும் நாற்பத்தொன்பதே
மறுக்கும் அரசாங்கம்!
ஊரிலிருந்து உறவுகளின்
உயிர்களை விசாரிக்கும்
தொலைப்பேசி அழைப்புகள்!
அண்டை நாட்டை அவசர அவசரமாய்
நினைவிற்கு கொணரும்
அமைச்சர்கள்!
அடுத்த ஆபரேசனுக்கு
ஆனந்தமாய் ஆயுத்தமாகும்
தீவிரவாதிகள்!
தேர்தலில் ஆதாயம்
பெறமுடியுமா ஆராயும்
எதிர்க்கட்சிகள்!
என்று,
இங்கு யாருக்குத்தான்
கவலை!
என்னைப் போன்ற
இறந்துப் போனவர்களின்
சின்னச் சின்ன
சிதறிய கனவுகளைப் பற்றி!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!
உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!
சட்டென நனைந்தது நெஞ்சம்!
இந்த பாடல் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் மாதவனும் சிம்ரனும் காதலிக்கும் "ப்ளாஷ் பேக்" (தமிழில்??) கில் வரும் காதல் பாடல்.என்னமாய் கரைந்திருக்கிறார் வைரமுத்து பாருங்கள்,அதே போல ஏ.ஆர்.ரஹ்மானும்.மணியும்,ஏ.ஆர்.ஆர் - உம் , வைரமுத்துவும் சேர்ந்தால் சொல்லவா வேண்டும் :) இந்த பாடல் குறுந்தகட்டிலோ ,கேசட்டிலோ வரவில்லை.MP3 கோப்பு வேண்டுவேர் இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.(கேட்டதும் கூகிள் உதவியுடன் தேடி MP3 அனுப்பிய நண்பர் ப்ரேம்க்கு நன்றி)
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் பாடல்
என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!
*
உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!
*
எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!
*
இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!
*
எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!
*
கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 14 பின்னூட்டங்கள்
'வால்'நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி
நிலவிலிருந்து கைப்பிடிஅன்புடன்,
மண் கொண்டுவந்தமைக்கே
கும்மாளமிடுவோர் மத்தியில்!
அமைதியாய் ஒரு நிலவையே
தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்
இவன் இன்று!
*
இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!
*
தமிழன்னையின் கழுத்தில்
கைக்கட்டி கவிபடித்த
பிள்ளையின்
கழுத்தோடு கைகள் பூட்டி
காதல் மொழி
பேசக்காத்திருக்கிறாள் தோழி!
*
அதனாலேயே
இனி
ஞானியின் கவி கூடும்
எனக் காத்திருக்கிறோம்
ரசிகவின் ரசிகர்கள்
நாங்கள்!
*
அன்புடனின்
'வால்'நட்சத்திரத்தை
வாழ்த்தும் பெரும் அன்பு
நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்
வாழ்த்தி நிற்கிறேன் - நானும்
ஓர் சின்ன மின்மினியாய்!
*
என்றென்றும் முழு நிலவாக
'ஜஹான்' ஒளி வலம் வரட்டும்
ஞானியின் வாழ்வில்!
நிலவொளி மழையில்
நனைந்து நனைந்து
இன்னும் ஞானம் கூடட்டும் 'ஞானி'க்கு!
*
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடி கவிதையை நான் முதல் முதலில் வாசித்தது வாரமலரில் என்று நியூரான்கள் சொல்கின்றன.அப்போதுதான் நான் கவிதைகள் வாசிக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன்.வாசித்ததும் எனக்கு மனதில் தோன்றியது 'அட!'.அதற்கப்புறம்,எழுதியவர் பெயர் மறந்துவிட்டாலும் மனதுக்குள் நாற்காலிப் போட்டு அமர்ந்துவிட்டது அக்கவிதை.
நல்லதொரு பணியில் அமர்ந்தப் பிறகுதான் கவிதைகள் என்ற தவம் உடைந்த தினங்களில்,அடிக்கடி நண்பர்கள் வாயிலாக மின்னஞ்சல் தட்டி நிற்கும் எழுதியவர் பெயரில்லாமல் நிலவு நண்பன் ஞானியின் கவிதைகளும்,நிலா ரசிகனின் கவிதைகளும்.அட!யார்ரா இவுங்க என கவனிக்க ஆரம்பித்ததில்தான் ஒருநாள் தேடு பொறி வலையில் தமிழ் வலைபூக்கள் சிக்கின.அதன் பிறகே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வமும்,இணையத்தில் கவிதைகள் பதியும் ஆசையும் வந்தது அதை தொடர்ந்து கொஞ்சம் எழுதவும் தொடங்கினேன்.அதைத் தொடர்ந்து தமிழ்மணமும் உங்களின் அறிமுகமும்.இந்த வகையில் என்னை எழுத வைத்தது;உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தியவர் ரசிகவ் என்றால் மிகையல்ல.
நான் மிக ரசித்த "நீ எனக்கு வேண்டாமடி" ,"தூக்கம் விற்ற காசுகள்" இரண்டையும் எழுதியவரை தேடி நான் கண்டுக் கொண்ட இடம் அன்புடன்.
அன்புடன் குழுமத்தில் இணைந்த புதிதில் என்னை ஊக்கமூட்டி இன்னும் அதிகம் எழுத தூண்டியது ரசிகவின் கிண்டல் பதில் கவிதைகள்.பதில் கவிதைகள் எழுதுவதில் ரசிகவ்க்கு நிகர் ரசிகவே!ரசிகவின் கவிதைகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் அன்புடனில் உண்டென்றால் அந்த எண்ணிக்கைக்கு குறையாத ரசிகர் பட்டாளம் மற்றவர் கவிதைகளுக்கு அவர் இடும் மறுமொழி நக்கல் கவிதைகளுக்கும் உண்டு!
காதல் கவிதைகளை தருவதில் ரசிகவ் மிஞ்ச யாரும் இல்லை,அன்புடனில் 'அன்புடனின் தபூ சங்கர்' என்று ஒரு பெயரும் உண்டு அவருக்கு.ஞானிக்கு பிடித்து 'ஜர்னலிசம்' என பலதடவைச் சொல்லி கேட்டிருக்கிறேன்.கல்லூரி காலத்தில் பகுதிநேரமாக அதனாலேயே அவரது சமூகப் பார்வை கொஞ்சம் விரிந்தே இருக்கும்,அதன் வெளிப்பாடுதான் - அவரின் மன விதைதான் 'விதைகளாய்' வலைப்பூவாய் விதைக்கப்பட்டிருக்கிறது.
கவிதை , சமூக சிந்தனை இப்படி என்றால் ரசிகவ்வின் குறும்புக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை அவரின் நக்கல்,நையாண்டி,கேலி எல்லாமே மற்றவரை புண்படுத்தாமல் ரசிக்க சிரிக்க வைப்பனவாய் இருக்கும்.அவர் இப்போது கைப்பிடிக்கப் போகும் பெண்ணிடம் கூட அவர் 'பூரி' சேட்டை செய்திருக்கிறார்.அதனாலேயே அவருக்கு 'வால்' என்ற செல்லப் பெயரும் உண்டு அன்புடனில்.
'பூரிச் சேட்டை' யை ரசிகவ் வலைப்பூவில் இட்டமாதிரி தெரியவில்லை அன்புடன் குழுமத்தில் படிக்க : பூரிச் சேட்டை
ரசிகவ் எழுதிய கவிதைகள் பல பிடிக்குமென்றாலும்,சமீபத்தில் நான் ரசித்த அவரின் சில கவிதைகளை இங்கே தருகிறேன்
* பயம் *
முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் ...
அனிச்சை செயலாய்
மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!
- ரசிகவ் ஞானியார்.
* ஆறுதல் *
"ஏலே நொண்டி"
சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!
அட..
அங்கே ஓர்
இதய நொண்டி
- ரசிகவ் ஞானியார்.
* ஒருநாள் அத்தனையும் மீறப்படும் *
வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!
கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!
வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!
நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!
வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!
உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!
சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?
நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..
நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!
புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்
காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்
- ரசிகவ் ஞானியார்
பதித்தவர் : ப்ரியன் @ 16 பின்னூட்டங்கள்
வெளிச்சத்தை எனதாக்க
சிறைப் பிடித்து
அடைத்துவைத்தேன்
மின்மினியை;
சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் :)
என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.
:) மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு :)
காதல் 01
டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!
காதல் 02
"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை!
காதல் 03
சத்தியமாய்,
இன்றைய தேதிவரை
அன்றைய நாள்தான்
இனியநாள் எனக்கு!
காதல் 04
பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
"புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு"
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?
காதல் 05
என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!
காதல் 06
எப்படி இருப்பாள்? எப்படி இருப்பாள்? -
நண்பர்களின் தொடர் கேள்விக்கு
எப்படி இருக்கவேண்டுமென்று
கனவு கண்டேனோ
அப்படி இருப்பாள் எனச்
சொல்லி தப்பிவந்த நாளில்,
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்
இடம் கிடைத்தும் வேண்டாமென்று
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி
வருத்தப்பட்டாள் உன் அம்மா
குதூகலப்பட்டது என் ஆன்மா!
காதல் 07
எப்படி உணர்ந்தேனா?
உன்னுடன் முதல்நாள்
கல்லூரி வரும்போது
எப்படி உணர்ந்தேனா?
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!
காதல் 08
நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!
காதல் 09
நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!
தனிமை துணையாய் போனது!
மொட்டைமாடி இரவு
கையில் புகை
நண்பர்களுடன் அரட்டை! - என்றிருந்த
அடையாளம்
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!
காதல் 10
கல்லுரிச் செல்லும்
காளையர்களின் கனமான
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
உன்னுடனான பேருந்து
பயணத்திற்கு!
காதல் 11
தனியே உனை அனுப்பவாதா? - உன் அப்பா
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல
பூவானது பின் இருக்கை!
காதல் 12
தினம் தினம்
அலுங்காமல் குலுங்காமல்
தேரில் உலாவரும்
அம்மனைப் போல்தான்
அழைத்துச் செல்வேன்!
நீயும் வழிதோரும் காணும்
பிள்ளைகளுக்கு எல்லாம்
புன்னகை வரம் அளித்துக்
கொண்டே வருவாய்!
இவன் மனம் மட்டும் குண்டு
குழி தேடித் தேடி குதித்து
தரிக் கெட்டு ஓடிவரும்!
காதல் 13
கடைசிவரை யாரென
கண்டறிய இயலவில்லை
நம்முடன்
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்
"பஞ்சர்" ஆக்கிய
களவானி யாரென்று!
காதல் 14
பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்
நீதான் கோலம் போடுவாய்!
போக வர பார்த்திருக்கிறேன்
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி
வழிந்து கொண்டிருக்கும்
என்வீட்டு கோலம்
உன்வீட்டு கோலத்திடம்!
காதல் 15
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
புடவைக் கட்டிக்கொண்டு
வந்த அந்நாளில்
நிலவில் முட்டி நின்று
அம்மாவிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டதை!
காதல் 16
காதலர் தினமன்று
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு
நீ கொடுத்த பதிலடியில்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி ஒளிந்துக் கொண்டது
என் தைரியம்
தற்காலிகமாய்
என் காதலும்!
காதல் 17
அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!
காதல் 18
ஒரு மழைநாளில்
அம்மாவீற்கு முடியாமல்போக
நீ செய்த உதவி கண்டு
அம்மா சொன்னாள்
"இவளைப் போல்
ஒரு மருமகள் வேண்டும்"
இவளே மருமகளாய் வேண்டும்
உனக்கு!
பாவமாய் வேண்டியது இதயம்!
காதல் 19
உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்
காற்றிலாடும்
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!
"கூந்தலில் தொங்கிக் கொண்டு
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!"
கேட்டவள்,கொஞ்சம் முறைத்து
சடசடவென
சிரிப்பூ தூவினாய்!
அடடா!கவிஞனே!
இன்னும் சொல்லேன்!
என நீ கேட்க
முதன்முதலாய்
வெட்கம் கற்றேன்!
காதல் 20
கவிதையாய் நான் சொன்ன காதல்
உனக்குப் புறிந்ததோ?
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?
எண்ணி மயங்கிகிடந்த நாளில்
மொட்டைமாடி இரவில்
"விக்கி" எனக்கொரு கவிதை வேண்டும்
என் 'கவி'தைக்கு இல்லா கவிதையா?
சொல்ல வந்த கணம்!
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்
என் காதலனுக்கு தர...
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;
இன்றைக்கும்,
அதோ!அங்கு வானெங்கும்
நட்சத்திரங்களாய்
சிதறிக் கிடப்பவை
இதயம் சிதறிய சில்லுகள்!
காதல் 21
அவளோ?இவளோ!
என் காதலி என
பார்வை வீச வேண்டிய வயசடி!
அவனோ?இல்லை இவனோ?
உன் காதலன் என
நீ பேசும் ஆணிடமெல்லாம்
பொறாமை பார்வை வீச வைத்தாயே
கொடுமையடி கொடுமை!
காதல் 22
நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;
உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!
காதல் 23
அவன் அப்படிச் சொன்னான்
இப்படி சொன்னான்
என காதலன் புராணம்
நீ பாடி சிலாகித்திருக்க
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்
மனதின்
மூலையில் குத்தவைத்து
அழுது கொண்டிருக்கும்
என் காதல்!
காதல் 24
அறிமுகப்படுத்தியதில்லை;
தூரமிருந்தும் அடையாளம்
காட்டியதில்லை;
உன் காதலனின்
பெயரும்கூட அறிய தந்ததில்லை;
ஆனாலும்
உன்னை விடுத்துப் பார்த்தால்
நான் மட்டுமே அறிவேன்
உன் காதலனை
உன்னுள் இருக்கும் காதலை;
இருக்கட்டும்
அவன் வரம் பெறவதற்கென்றே
பிறந்த ஆடவன்;
நான் சாபம் வாங்கவே
வந்த முடவன்!
காதல் 25
மொட்டைமாடியில் அமர்ந்து
கல்லூரி
கடைசி வருடத்தின்
கடைசி தேர்வுக்காக
படித்துக் கொண்டிருக்கையில்;
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை
அனுமதி இல்லாமல்
எடுத்துப் பார்த்தவள்
கவிதைகள் எல்லாம்
உன்னைக் குறித்து இருக்க
பட்டென முடி
சட்டென பறந்து போனாய்;
ஆற்றி முடியாமல்
அழுது கொண்டே இருந்தது
அம்மா நீ
சொல்லாமல் போனாதாய்
கவிதை!
காதல் 26
அடுத்தடுத்த நாட்கள்
பேசாது நீயிருக்க
ஊமையாகிப் போனது
நான்!
ஊனமாகிப் போனது
மனது!
காதல் 27
கல்லூரி கடைசிநாளில்
எல்லோரும்
கலந்திருக்க
பிரிவு் கவலையில்
கரைந்திருக்க!
என் கண்களும்
அழுது கிடந்தன
நீ பேசாததால்
இறந்துப் போன - எந்தன்
இதயத்திற்காக!
காதல் 28
விடுமுறைக்கு ஊருக்கு பயணம்
வழியனுப்ப வலிய எனை
அனுப்பும் உன் அப்பா!
பாதையெங்கும் மெளன
முட்களுடன் பயணம்!
குடிக்க தண்ணீரும்
படிக்க சில புத்தகங்களும்
வாங்கி வந்தவனுக்கு
நன்றிகூட இல்லாதா நீ!
கைப் பையை கூட
என்னிடம் தராமால்
அந்நியமாய் நீ!
முதன்முதலாய்
உன் அண்மை வேண்டா
நிமிடங்கள் அவை!
மெல்ல மெல்ல
இரயில் நகர ஆரம்பிக்க
போ!போ!
மனம் சொல்ல
போய் ஏறிக் கொள்
என கடைசியாய் என் மெளனமும்
கலந்த வினாடியில்!
'உன்னை விட்டுப் போவேனோ?
என் உயிரை தனியே விட்டு போவேனோ?'
என நீ கட்டியணைக்க
கூவி அழைத்து
கையசைத்து நகர்ந்தது
இரயில்!
நிமிர்ந்து பார்த்தவள்
நீ தான்டா இத்துணை நாட்களாய்
நான் சொல்லிச் சொல்லி
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து
அப்போதும் 'பெயர்' சொல்லாமலே
சொல்ல
அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!
- ப்ரியன்.
மடலாடலுக்கு : mailtoviki@gmail.com
பதித்தவர் : ப்ரியன் @ 15 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், கை அசைத்து நகர்ந்தது இரயில்., தொடர், பிப்ரவரி
மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!
- ப்ரியன்.
கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 12 பின்னூட்டங்கள்
நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
எம்மக்கள் புலம்பெயர்ந்த
வெற்று வீதிகளில்
முகம் திருப்பியப்படியே
பயணிக்கிறது சூரியன்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!
- ப்ரியன்.
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!
- ப்ரியன்.
எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!
- ப்ரியன்.
வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!
- ப்ரியன்.
உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!
- ப்ரியன்.
உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 21 பின்னூட்டங்கள்
உன்னைக் கண்டப் பிறகுதான்
அழகென்பது
உடலிருந்து
உள்ளத்துக்குத் தாவியது
எனக்கு!
- ப்ரியன்.
விடம்;
அமுதம்;
எதுவென அறியத்தராமல்
குடித்துப் பார்த்து
அறியும் விளையாட்டு
காதல்!
- ப்ரியன்.
அழகு
உவமைகளை உனக்கு
உவமானம் ஆக்குதலைவிட
உவமைகளுக்கு உன்னை
உவமானம் ஆக்குதலே
தகும்!
- ப்ரியன்.
என்னைப் பார்த்ததும்
நீ
ஊமையாகிவிட்டால் என்ன?
உன்
நாணம்தான்
சொல்லாகிவிட்டதே!
- ப்ரியன்.
இதயதரையில் நீ
நடந்துச் சென்ற
சுவடுகளிலெல்லாம்
கவிதை பூத்து
அழகுபார்க்கிறது காதல்!
- ப்ரியன்.
கரு மை வைக்கிறாய்
திருஷ்டி கழிகிறது
கண்களுக்கு!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
தொடமால்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!
- ப்ரியன்.
ஊர் என்ன பெயரோ
வைத்து அழைத்துவிட்டு போகட்டும்!
'டேய்' என நீ விளித்தலே
பிடிக்கிறது எனக்கு!
இன்று முதல்
'டேய்' என்பதே
என் பெயராகட்டும்!
- ப்ரியன்.
உன் கண்
பூக்களில்
வந்தமர்ந்து தேன் பருகும்
வண்டுகளாய்
என் கண்கள்!
- ப்ரியன்.
நீ இடும் புள்ளிகளில்
நீ ஒரு ஓரமாய்
நான் ஒரு ஓரமாய்
தள்ளி நிற்கிறோம்
இணைத்தேவிடுகிறாய் கோடுகளால்
கோலமாய் முடிக்கையில்!
- ப்ரியன்.
வானவில் வந்தால்
மழை நின்று போகும்
என்கிறது ஒரு கிழம்!
உன் கண்வில்லை
கண்டால் கவிதைமழை
பொழியும் என்கிறது - இந்த
காதல் பழம்!
- ப்ரியன்.
கருப்பான என்
வாழ்க்கைத் தாளில்
வெள்ளை வெள்ளை
எழுத்துக் கவிதைகளாய்
நீ!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
வலைப்பதிவர் பெயர்: ப்ரியன் (எ) பழம்நீ.விக்னேஷ்
வலைப்பூ பெயர் : ப்ரியன் கவிதைகள்
உர்ல் : / சுட்டி http://priyan4u.blogspot.com/ - கவிதைகள் பக்கம்
http://enkanvaziyae.blogspot.com/- என் எண்ணங்கள்
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்: கோவை தற்சமயம் சென்னை
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாருமில்லை...இணையத்தில் மேய்ந்து திரிந்து கண்டுக் கொண்டேன்
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05 சனவரி மாதம் 2005
இது எத்தனையாவது பதிவு: இதோடு 141
இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://priyan4u.blogspot.com/2006/05/blog-post_24.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என் கவிதைகள் சிலதையும் கவிதைப் போன்ற பலதையும் இணைய நண்பர்களுடன் பக்ர்தல் பொருட்டு...
சந்தித்த அனுபவங்கள்: என்னைப் பொருத்தவரை எல்லாமே இனிமை...அரசியல் / சாதி / மத பதிவுகள் தவிர்த்து கவிதைகள் அதிகம் பதித்ததால் இருக்கலாம்
பெற்ற நண்பர்கள்: கணக்கில் அடங்கா - நல் உள்ளங்கள் - உண்மையான நலம் விரும்பிகள்
கற்றவை: ஏராளம்...
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: அதிகம்...அச்சுதந்திரம்தான் வலைப்பூவின் பலமும் பலவீனமும்
இனி செய்ய நினைப்பவை: எழுத்துகளை மெருக்கேற்றும் முயற்சிகள்
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தமிழ்மணத்திற்கு நன்றிகள்
பதித்தவர் : ப்ரியன் @ 7 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வலைப்பூ
பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!
- ப்ரியன்.
உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!
- ப்ரியன்.
உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!
- ப்ரியன்.
குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!
- ப்ரியன்.
எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!
- ப்ரியன்.
நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 5 பின்னூட்டங்கள்
ஓரணி உதைக்கும்
பந்து எதிராளியின்
வலைக்குள் விழுந்தால்
ஒரு புள்ளி
என ஆரம்பமானது
அந்த ஆட்டம்!
ஒருவன் பக்கவாட்டில்
தூரமாய் செல்ல
துரத்தமுடியாமல் திணறினார்கள்
எதிர்முகாம் ஆட்கள்!
கோடுகள் குறிக்கப்பட்டு
எல்லைகள் வரையறுக்கப்பட்டன!
அடுத்ததாய் கால்தடுக்கி
விழவைத்து முட்டியிலும்
நெற்றியிலும் ரத்தப்பொட்டு
வைத்து வெற்றி
தட்டினார்கள்! - நடுவர்கள்
நடுவில் வந்தார்கள்!
கொஞ்சமாய் தவறு
செய்தவன் எச்சரிக்கப்பட்டான்
திரும்பத் திரும்ப
செய்பவன் வெளியேற்றப்பட்டான்!
ஒவ்வொரு தவறிலும்
தப்பிலும் ஆட்டம்
கற்றுக் கொண்டது
புது விதி!
அவ்வாறே வாழ்க்கையும்!
- ப்ரியன்.
அண்ணன் புகாரியின் 'ஆடுகளக்கோடுகள்' என்ற கவிதை வாசிக்கும் போது தோன்றிய வரிகள் இவை...நன்றி புகாரி அண்ணா :)
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
இரவெல்லாம்
கண்விழித்துப்
பார்த்திருந்தேன் நிலவை;
ஆனாலும்,
காணாமல் போயிருந்தது
காலையில்
என் காவலையும் மீறி!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 5 பின்னூட்டங்கள்
கைத்தவறி விழுந்த
கண்ணாடி சுக்குநூறாய்
சிதறிக்கிடந்தது தரையில்!
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னத்தடா ஒடச்சு தொலைச்சே
அடுப்படியிலிருந்து கடிந்துக் கொண்டாள்
அம்மா!
அதன் ஆயுசு
அவ்வளவுதான் விடுவென்று
உடைத்த எனை காத்து
அப்போதும் வேதாந்தம் பேசினார்
அப்பா!
கண்ணாடி காதலியான
அக்காவோ
புதிது வாங்கும்போது
இன்னமும் பெருசா என்பதோடு
முடித்துக் கொண்டாள்!
ஏதும் பேசாமல்,
சில்லுகளைப்
பொறுக்கிச் சேர்த்து
குப்பைத் தொட்டியில்
போடுகையில்தான்
கவனித்தேன்;
உடைந்த
கண்ணாடித் துகள்கள்
ஒவ்வொன்றிலும் உறைந்த்திருந்தது
எந்தன் பிம்பம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 10 பின்னூட்டங்கள்
தூரத்தில் தங்கி
தயங்கி நிற்கும்
நிலா!
அவளின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டு!
என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!
ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக் குறித்தாலும்
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளி!
வெறும் புள்ளி!
ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது!
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை;
ஆனாலும்,
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்!
************************
ஒற்றைக் குடைக்குள்
நெருக்கமாகக்
காதலர்கள் நகர்ந்தால்
கோபப்படுகிறான் வருணன்!
மழை பெருக
சாரல் தவிர்க்க
மேலும் நெருக்கமாக
மீண்டும் கோபம்
மீண்டும் சாரல்
மீண்டும் நெருக்கம்
************************
உன் கால்தடத்தில்
தேங்கி இருந்த மழைநீரைத்
தீர்த்தமென்கிறேன்;
அப்படியென்றால்
நீ தேவதைதானே!
************************
கடலுக்குள் விழுந்த
மழைத்துளி போல்
பத்திரப்படுத்திவிட்டேன்
என்னுள் விழுந்த உன்னை!
************************
மழையில் நனைபவளே!
தெரிந்து கொள்
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள
வான் அவன் விடும்
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை!
************************
எல்லோரையும் வெறுமனே
நனைத்துவிட்டுச் செல்கிறது மழை!
உன்னில் மட்டுமே
அதுவே ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!
************************
பெரிதாய்ப் பொழியும் மழையில்
நனைந்து நிற்கிறேன்;
உன் கால்தடத்தைத் தனியே
நனையவிட்டுச் செல்ல
நான் ஒன்றும் உன்னைப் போல்
கொடுமையானவன் அல்ல!
************************
பெரும் பாலையில் தவறிப்
பெய்துவிட்ட
மழை நீ
எனக்கு!
************************
எவ்வளவு பத்திரமாய்
நீ நடந்தாலும்
உன்னையும் அறியாமல்
வழியெங்கும்
பெய்துகொண்டே செல்கிறது
உன் அழகுமழை!
************************
மழை நேரத்தில்
திரும்பும் பக்கமெல்லாம்
தெரியும் மழைக்கீற்று மாதிரி
என் மனதில் திரும்பும் பக்கமெல்லாம்
நீ! நீ! நீ!
************************
தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்னச் சில்லுகள்தாம்
மழை!
************************
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்!
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்!
************************
வானம்,
பெய்ய மழை
பெய்யப் பெய்யப் பெருமழை!
நீ,
காண அழகு
காணக் காணப் பேரழகு!
************************
என்னை அந்தி முதல்
ஆதிவரை நனைத்துச்
செல்கிறீர்கள்!
பலநேரங்களில் நீயும்!
சிலநேரங்களில் மழையும்!
************************
உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு!
************************
இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்!
************************
நேற்றைய
என் கோபத்தையும்
உன் வருத்தத்தையும்
துவைத்துத் துடைத்துப்
போயிருந்தது
இரவில் பெய்த மழை!
************************
என்னவோ அறியேன்
எப்படி என்றும் அறியேன்
என் உயிர்வரை நுழைந்து
மனம் ஊடுருவ உனையும்
மழையையும் மட்டும் அனுமதிக்கிறேன்!
************************
எத்தனை மழைத்துளிகள்
மண் முத்தமிடுமிடுகின்றன என
எவ்வளவு நேரம் எண்ணிக் கொண்டிருப்பது
சீக்கிரம் வந்துவிடு!
************************
என் மீது
ஒரு மழையாய்த் தான்
பொழிந்து செல்கிறது
நீ சிந்தும் மென்னகை!
************************
நீ
கோபம் காட்டும் நாட்களில்
கண்ணாடிச் சில்லுகளாய்க்
குத்திச் செல்கின்றன
மழைத்துளிகள்!
************************
உன் கன்னக்குழியில்
தங்கும் அந்த ஒற்றைத்துளி
மழை அமுதத்தின் விலை
காதல்!
************************
நீ தொட்டுப் பேசுகிற நேரங்களில்
மழை ஞாபகம்
தவிர்க்க இயலவில்லை எனக்கு!
************************
மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்!
************************
உன் மெளனம் கலைந்த கணத்தில்
மனம் கொள்ளும் வேகத்தில்
வானம் உடைத்து
நொறுங்கி விழுகிறது
மழை!
************************
நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை!
************************
முதன்முதலாய் மழையுடன்
பெண்ணை ஒப்பிட்டுக் கவி சமைத்தவன்
யாரென யாராவது கேட்டால்
என்னைக் கை காட்டு!
பெண்ணென்றால் அது
நீ மட்டும்தானே!
************************
ஜன்னலில் பார்த்ததைவிடவும்
பக்கத்தில் பார்த்தல்
அழகு!
நீயும்!
மழையும்!
************************
வார்த்தையாகக் கூட இல்லை
ஒரு எழுத்தாகக் கூட இல்லாதவனை
ஒரு கவிஞனாய் மாற்றிய
பெருமை
உனக்கும்
மழைக்கும் மட்டுமே!
************************
என்னைக் கொஞ்சுகையில்
கைகால் முளைத்த
மழையாகிறாய் நீ!
************************
மழையும் நீயும்
நனைக்கிறீர்கள்
நனைப்பதாய்ச் சுடுகிறீர்கள்
சில நேரங்களில்!
************************
நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழை போல
நீ நின்று போன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு!
************************
நீ மார்பில்
சாயும் தன்மையில்
என்னை அறியாமல்
நானே மழையாகிறேன்!
************************
என் மனம்
பட்டுப் போகக்கூடும்
எனும்போதெல்லாம்
மழையாகப் பெய்துபோகிறாய்
நீ!
************************
மழைத்துளிக்காகப்
புதைந்து காத்திருக்கும்
விதைகள் போல!
உன் விழிப் பார்வைக்காகக்
காத்திருக்கின்றது
என் காதல்!
************************
கருமை வர்ணம் பூசித்திரிந்த
அம்மேகத்தின் பிள்ளை
மண்தீண்டலில் எழுந்த
மண் வாசனை
நுகர்தலில் உணர்கிறேன்
உன் வாசனை!
************************
வானம் கிழிக்கும்
வெளிச்சத்தில் - எழும்
இடி ஒலியில்
சோ! என
மண் நனைத்து
மண் நிறைக்கிறது மழை!
என் உயிர் நனைத்து
என் உயிர் நிறைக்கும் உன் உயிர்!
************************
நீயும் நானும்
இரவில் நடந்துவர
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்து நனைத்து
விளையாடிய
அச்சிறுபிள்ளை சிறுமழையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
கண்ணிலும்
உயிரிலும்!
************************
மண்ணுள் ஊடுருவிச் செல்லும்
மழையென!
என் உள்ளம்
தூர்ந்து நுழைகிறாய் நீ!
************************
எதுவாக நீ வந்தாலும்
இன்பமே!
ஆனால்,
மழையாக வந்தால்
பேரின்பம்!
************************
நனைந்து சென்ற உன்னை
ஆயிரமாயிரம் பிம்பமாய்க்
காட்டியது மழை!
************************
சுத்தமான
அந்த மழைத்துளி
பார்க்கும்போதெல்லாம்
உன் ஒப்பனையற்ற முகம்
முன்னால் நிற்கிறது!
************************
நனைத்து நனைத்தே
நெருக்கமான
மழை போலவே
சுகமாகிறாய்
நீயும்!
************************
நீ வருவாய் என்பதை
முன்னமே வந்து சொல்லிவிட்டுப்
போய்விடுகிறது
மழை!
************************
பைத்தியமாகிவிடத் தோன்றுகிறது
மழையில் உறையும்போதும்
உன் நினைவுகளில் நனையும்போதும்!
************************
பூமியைச் சுத்தமாக்கிப்
புதியதாக்குவது மழை!
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை!
************************
தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!
************************
மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை!
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை!
************************
உனைத் தொட்ட பின்
அதே துளி!
கவனி அதே துளி
ஏன் எனையும் தீண்டவில்லை எனக்
கோபித்துக் கொண்டேன்
மழையிடம் நேற்று!
************************
மழை பெய்யும்
நாட்களெல்லாம்
உனைக் கண்ட நாட்களாக
அமைந்துவிடுகிறது!
************************
உனைக் கண்ட நாட்களுக்கே
என் நாட்காட்டியில்
இடமிருக்கிறது!
போனால் போகட்டும்
உனக்காக
மழை கண்ட நாட்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்!
************************
மழை தொட்டால் மட்டுமே
சிலிர்த்தவன் நான்!
நான் தொட்டால் மட்டுமே
சிலிர்ப்பவள் நீ!
************************
தெரியும்,
மழையில் நனைகையில் சிலசமயம்
நான் பருகும்
ஒவ்வொரு துளியிலும்
இருக்கிறாய் நீ!
************************
எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்!
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்!
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்!
அடுத்த மழை பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்!
************************
சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே!
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை!
************************
எப்படித் தேர்வு செய்கிறாய்
உன்னை நனைப்பதற்கான
மழையை!
************************
மழையில் சிக்கிக் கொண்ட
பெருவியாதிக்காரனின் தவிப்பாய்
உன் விழிதேடிக் கிடக்கிறது
என் காதல்!
************************
உனைப் பார்க்க வரும்போதெல்லாம்
மண் அன்னையை நோக்கிவரும்
மழைப் பிள்ளையென
குதித்தோடி வருகிறேன்!
************************
உன் இதழில் உணர்ந்தேன்
சுவையில்லா ஒரு சுவையான
மழையின் சுவையை!
************************
உன்னை நினைத்தபடி
வானம் நோக்கி
இருந்தேன்!
நெற்றி விழுந்து
நெஞ்சுவரை நீந்திய
மழையின் தண்மை
இன்னமும் அதிகமாய்
ஞாபகப்படுத்திவிட்டது உன்னை!
************************
உன் மீது கோபம் காட்டும் நாட்களில்
என்னை மட்டும் தீண்டாமல்
விலகிப் பெய்துவிட்டுச் செல்கிறது மழை!
************************
நீ பேசாமல் இருந்தால்
என் வானமெங்கும்
மேகமூட்டம்!
************************
நீ கோபம் காட்டும் நாட்களில்
என் மனமெங்கும் பெய்யும்
வலிக்க வலிக்கக்
கல் அடி மழை!
ஆலங்கட்டி மழை!
************************
மழை மண் விழுந்த அடுத்தநாள்
முளைத்துவிடும் விதையென
நீ கண்ணுள் விழுந்த
அடுத்த நொடி முளைத்துவிட்டான்
என்னுள் காதல்!
************************
நீ மழையில் நனைந்த
லயத்தில் கண்டுக்கொண்டேன்
மழையே ரசிக்கும்படி
எப்படி மழையில்
நனைவதென!
************************
பெருமழைக்கே
பயந்து போகாதவன்
உன் விழியோரம் வழியும்
ஒருதுளிக்குப்
பதறிப் போகிறேன்!
************************
உன்னைக் கொஞ்சுவதில்
எனக்குப் போட்டி
மழை மட்டுமே!
************************
மண் விழுந்த மழை மட்டுமா?
நீயும்
கவிதை நடையில்தான்
நடக்கிறாய்!
************************
திட்டிக் கொண்டே
துப்பட்டா கொண்டு நீ
தலை துவட்டுகையில்
எனக்கு
இன்னமும் செல்லமாகிப் போகிறது
மழை!
************************
உன்னில்
கவிதை காணும் இடமெல்லாம்
ஒரு புள்ளி வைத்துச்
செல்கிறது மழை!
************************
- ப்ரியன்.
மடலாடலுக்கு - mailtoviki@gmail.com
பதித்தவர் : ப்ரியன் @ 5 பின்னூட்டங்கள்
குறிச்சொல் ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள், கவிதை, காதல்
நட்சத்திரங்களால் ஒரு நிலவு
------------------------
மேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள் செதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி மின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர்,
இளையவர் கவிஞர் ப்ரியன்.
உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர் எனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய் இணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே அறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.
சின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட வளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.
காகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து விடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில் இவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே ஓட்டிவிடலாம்.
வாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு இழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில் நான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.இவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது,காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.
இவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார் பூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில்அசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது,அதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல்தெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே தெரிவாள்.
தன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன் காதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும் பொழுதுக்கும் கொடுத்துக்க்கொண்டே இருக்கிறார்.
அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை
ஆனாலும்
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்
காதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து விட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர் டைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல் சொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.
காதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள் கவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்.
தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்ன சில்லுகள்தாம்
மழை
சில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக இருக்கும்? யோசிக்கும்போதே நனைந்துபோகிறதல்லவா,தலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள்? கவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி விடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம்.அப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்
யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா? மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும் நாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில்
பூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி :)
மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை
இப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப் பண்பா :) ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும் கட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்?
நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை
இதற்கு என்ன பொருள்? மழையே பொழியாமல் இருந்திருக்குமா என்ன? அப்படியல்ல. பெய்தவையெல்லாம் இவருக்கு மழையாகத் தெரியவில்லை. அவள் இருந்தால் பெய்யாதபோதும் மழையை உணர்கிறார் இவர். அப்படியென்றால் காதலியும் மழையும் வேறு வேறு அல்ல. இவரின் காதல்தான் மழையோ?
எதையும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தால் அது எத்தனை அழகானாலும் அலுப்புதான் தோன்றும். எத்தனை முறைதான் ஒன்றையே காண்பது?ஆனால் காதலனுக்குத் தன் காதலிதான்
பிரபஞ்ச அதிசயம். பொழுதுக்கும் அவளைக் கண்டு கொண்டே இருப்பான் அலுக்கவே அலுக்காது என்பதைவிட காணக்காண மேலும் மேலும் ஆவலையே தூண்டுவாள் அவள். அதை
எத்தனை எளிமையாய்ச் சொல்கிறார் பாருங்கள் ப்ரியன்.
வானம்
பெய்ய மழை
பெய்யப் பெய்ய பெருமழை
நீ
காண அழகு
காணக் காணப் பேரழகு
அவள் ஓர் ஏழை. ஆனால் அழகில் சீமாட்டி. கிழிந்த ஆடை அவள் அழகைக் குறைக்கவில்லை மேலும் கூட்டிவிடுகிறது. அதோடு கொஞ்சம் மழை நீரும் சேர்ந்துகொண்டால் அவளின் அழகு
என்னவாகும்? இந்தக் காட்சியை எத்தனை நயமாய்ச் சொல்கிறார் பாருங்கள். ஓர் எசகுபிசகான காட்சியை மிக நாகரிகமாகச் சொல்லும் இந்த மெல்லிய வரிகளை பண்பாடுமிக்க ஒரு பொன்மனக் கவிஞனால்தான் பொழியமுடியும்.
உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு
அதென்ன "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" என்றொரு தலைப்பு?இதோ காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள். அது எத்தனை இனிமை என்று உணருங்கள்
மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்
இவரின் மழைத்துளிக் கவிதைகளில் மேகத்தின் மொத்தமும் அப்படியே ஊர்வலம் போகிறது. உதாரணத்திற்காக ஒரு கவிதை இதோ
நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழைப்போல
நீ நின்றுபோன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு
காதலின் மிக முக்கிய ஓர் பணி என்னவென்றால், அது காதலர்களைப் பண்படுத்த வேண்டும். எத்தனைக் கரடுமுரடான இதய வேர்களையும் அது சீவிச் சிக்கெடுத்து இனிப்பு நீரில் நீந்தச் செய்யவேண்டும்.காதலியின் பார்வையால் மீண்டும் மீண்டும் பிரசவமாகும் உயிரைப் போன்றவன்தான் காதலன்.
பூமியை சுத்தமாக்கி
புதியதாக்குவது மழை
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை
காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு. அதையும் மிக அழகாக ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் ப்ரியன்
எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்
அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்
காதல் என்றாலே அது அதீத சந்தோசமும் அதீத சோகமும் கொண்ட வினோதமான பூ. அழுகை அந்தப் பூவின் இதழ்கள். சந்தோச நெசிழ்வில் அழுகை, சோகத்தின் பிடியில் அழுகை. ஆனால், நாம் அழவேண்டாம்,நமக்காக அழ ஓர் ஆள் இருக்கிறது என்று காதலியிடம் சொல்கிறார் ப்ரியன். யார் அந்த ஆள் என்று பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.
சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை
என்றால் மழை இவருக்கு யார்? இந்தக் கேள்வியை இதயத் தாடைகளில் அசைபோட்டபடியே இந்தத் தொகுப்பெனும் தோப்பினுள் நீங்களும் முயல்களாய்த் தத்தித்தத்திச் செல்லுங்கள். குயில்களாய்ப் பாடிப்பாடித் திரியுங்கள். மலர்களாய்ப் பூத்துப்பூத்துக் குலுங்கள்.பிரியாத ஆர்வத்தோடு கவிஞர் ப்ரியன் மேலும் பல நல்ல கவிதை நூல்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகின்ற இவ்வேளையில் வாழ்க இவர் போன்ற கவிஞர்களால் மேலும் இளமை எழில் கொப்பளிக்கும் தமிழ்க் கவிதைகள் என்றும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
அன்புடன் புகாரி
கனடா
பிப்ரவரி 23, 2006
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
குறிச்சொல் ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள், கவிதை, காதல்
அன்புடன் அன்பர்களுக்கு,
சென்ற சனவரியில் எனக்கு தனிமை கிடைத்தது என்னவென்று தெரியவில்லை ஏதோ ஒன்று என்னை எழுத உந்த விளையாட்டாய் மழையையும் , பெண்ணையும் காதலையும் வைத்து எழுத ஆரம்பித்தேன்.தூங்கும் போது மணி காலை 4 அதனால் பாதகமில்லை கிட்டத்தட்ட 130 கவிதைகள் :) அதில் மிகவும் இரசித்ததை மட்டும் தேர்வு செய்தேன்...பிடிஎப் ஆக மாற்றி அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பலாம் என எண்ணினேன்.சரி செய்வதுதான் செய்கிறோம் ஒரு புத்தகவடிவில் தந்தால் என்ன எண்ணி அணிந்துரைக்கு அண்ணன் கவிஞர் புகாரியையும் , திருத்தங்களுக்கு சேதுவையும் அணுகினேன் அவர்கள் ஆவலோடு அதனை ஏற்று சில நாட்களிலேயே முடித்தும் கொடுத்துவிட்டார்கள்...ஆனால் என்னால் உடனடியாக இதில் ஈடுபட முடியவில்லை,வேறு ஒன்றும் இல்லை வேலை...இப்போது எல்லாம் தாண்டி இதோ உங்களின் பார்வைக்கு "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்"...எப்போதும் போல உங்கள் விமர்சனக்களை எதிர்நோக்கி...
குறிப்பு : "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" அதிகமான பரும அளவு (4 MB) என்பதால் கோப்பு பரிமாற்ற தளத்தில் இடுகிறேன் (பிடிஎப்) மற்றப்படி எழுத்துவடிவில் இதே இழையிலும் இடுகிறேன்...பிடிஎப் (புத்தக வடிவில்)ஆக பார்க்க கீழுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்
http://www.uploading.com/?get=MB9XW285
இணைய இணைப்பு இல்லாதவர்கள் சொல்லுங்கள் தனிமடலில் அனுப்புகிறேன்
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
குறிச்சொல் ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள், கவிதை, காதல்
பகலிலும் அலறும் ஆந்தை
கள்ளிச் செடி
காய்ந்த சருகு - அதில்
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
மண்ணெண்ய் வாசத்துடன்
குபுகுபுவென எரியும் சவத்தீ!
சுழன்று அடிக்கும் காற்றில்
கனன்று பறக்கும் சாம்பல்
கால் இடறும் எலும்புகள்,
அடையாளங்களோடு
பிணம் காத்து
உக்காந்து இருக்கு சுடுகாடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
வண்டொன்று
குறும்பாய்
மூங்கிலில் துளையிட்டபோது
அறிந்திருக்கவில்லை;
தான்,
உலகின் முதல் புல்லாங்குழலின்
உருவாக்கத்திலிருப்பதை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!
விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
எனக்கு
கவிதையெல்லாம்
எழுத தெரியாதென்றபோது
கன்னத்தில்
அழுத்தமாய் ஆழமாய் அழகாய்
முத்தமிட்டு இப்போது
எழுதென்றாய்!
இப்போதும் சொல்கிறேன்
உன் இதழ் என் கன்னத்தில்
எழுதிய அளவுக்கு
எனக்கு கவிதை எழுத வராது!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
உனக்கும் எனக்குமான
தூரம்!
அது
விழிக்கும் இமைக்குமான
தூரம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
கவிதை ஒன்றின்
ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்!
குறிப்பை ஆளாளுக்கு
அலசிப் போனார்கள்!
யாருமே கண்டுகொள்ளாமல்
அனாதையாய் கிடந்தது
கவிதை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
என் யுக யுகத்திற்கான
சந்தோசம்;
நீ சிந்தும் ஒற்றை
குறுநகையில்
ஒளிந்திருக்கிறது!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
அன்புக்கு அம்மா!
ஆசைக்கு மகள்!
பாசத்திற்கு தங்கை!
நேசத்திற்கு மனை!
எப்பெயர் நீ கொளினும்
அதுவாகவே ஆகிப்போகிறாய் நீ!
உன்னாலேயே
அர்த்தம் பெறுகின்றன
அவ்வுறவுகள்!
பொறுமைக்கு நீயென
பூமிக்கு உன்னை குறித்தோம்!
நடக்கும் வழியெல்லாம் தாயுள்ளமாய்
தழுவிச் செல்லும் நதிக்கும்
உன்னை வைத்தோம்!
* மகனாக்கி
தமயனாக்கி
தகப்பனாக்கி
நண்பனாக்கி * (நன்றி பரநீதரா)
இன்னும் பலவாக்கி
உலகுக்கெல்லாம்
எம்மை
அடையாளம் காட்டியவளே!
உன்னில் என்னில்
என்று பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ நிறைந்து நிற்கும்
பண்பாலே
இவ்வுலகம் நிலைத்திருக்க செய்தவளே!
பெருமைமிகு
பெண்மையே
உன்னைப் போற்றுதும்!
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வாழ்த்து
அடுத்தப் பெட்டியில் இருக்கும் போதே
காட்டிக் கொடுத்துவிட்டது
அவனை
கட்டைக்குரலில் அந்த சோகப்பாட்டு!
முந்தைய நிமிடம் வரை சும்மா இருந்தவர்கள்
அவசர அவசரமாய் செய்திதாளில்
மூழ்கிப் போனார்கள்!
கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்!
ஒரு சிலர்,
முன்னங்காலில் முகம் புதைத்து
தற்காலிகமாய்
செத்தும் போனார்கள்!
இவன் நகர்ந்தால் போதுமென
அவசரமாய் அம்பது நூறு காசுகள்
இட்டனர் இன்னும் சிலர்!
தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்!
யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில்
அந்தப் பாட்டு
அழுதபடியே போனது
அது பாட்டிற்கு!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
தென்றலுக்குக் கூட
ஏராளமான பூக்களை
அள்ளி உதிர்க்கிறது
அவ்வேப்பமரம்!
என்றாலும்,
சிலப்பூக்களையாவது
காய்க்கவும் பழுக்கவும்
செய்கிறது அதுவே!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 5 பின்னூட்டங்கள்
என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 6 பின்னூட்டங்கள்
உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 7 பின்னூட்டங்கள்