சிறகறுந்த கவிதை!
கைகள்
உதிர்ந்து தொலைய
மென்மையான இறக்கைகள்
முளைக்கின்றன பக்கமாய்!
மெல்ல மெல்ல
அசைவு பழகி
சிறு குஞ்சென
தத்தி
தவறி விழுந்து
பின் மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
எட்டா உயரம்
கடந்திடும் வேகத்தோடு!
காடுகள்
வயல்கள்
நதிகள் , நகரங்கள்
கடந்து மறைகின்றன
காலடியில் சடுதியில்!
அசைவின் வேகத்தில்
சிறகொன்று
உதிர்ந்து நழுவ
காற்று காதோரம் வந்து
கிசுகிசுக்கிறது
கிச்சுகிச்சு மூட்டுவதை
நிறுத்தென!
தூரம்
காலம் மறந்து
திரிகிறேன்
கரிய வானெங்கும்
பறத்தலின்
சுகம் சுகித்து பருகி!
சிறகுகளில் வலியில்லை
பறத்தல் சலிக்கவில்லை
ஆனாலும்
விழி வழி
செவி வழி
சிறகேறி உலகம் அமர
பாரம் தாங்காமல்
தரையிறங்குகிறேன்;
அறுபட்டு எங்கோ
விழுந்து தொலைகிறது சிறகு!
அதோடு சேர்த்து
பறத்தல் சுகம் பேசிய
இக்கவிதையும் முடிகிறது
அவசரமாய் இத்தோடு!
என்றாலும்
என்றாவது ஒரு நாளில்
பறவையாகும் பாக்கியம்
கிடைத்தால் எழுதுகிறேன்
மிச்சத்தை!
- ப்ரியன்
2 பின்னூட்டங்கள்:
ஒரு பறவையாகி பறக்க மாட்டோமா என்று உள்ளம் கிடந்து துடிக்கிறது.....
ஹயா
nice...
Post a Comment