நீயோ இசையாக வழிகிறாய்!

அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!

*

ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!

*

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

*

உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!

*

உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

*

ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!


- ப்ரியன்.

நன்கு சாற்றி தாளிடப்பட்ட கதவின் பின்னால்

நன்கு சாற்றி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்,
தூக்கமும்
கவிதையும் இல்லா
பின்னிரவு கழிகிறது
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்
மின்விசிறியின் சப்தத்தினோடு!

- ப்ரியன்

இருளோடு பேசும் மின்மினிகள்!

நீளும் கரிய இரவில்
கண்சிமிட்டி சிமிட்டிப் பேசுகிறாய்!
இருளோடு பேசும்
மின்மினிகள் போல்!

*

உனது கிளைகளில்
எப்போதும்
இசைச் சொல்லித் திரியும்
குயில் நான்!

*

உன் அலங்கார அறையை
முன் அநுமதியின்றி எட்டிப்பார்த்தேன்;
ஒரு காதில் சூரியனையும்
மறு காதில் சந்திரனையும்
அணிந்து அழகுப் பார்த்திருந்தாய் நீ!

*

காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!

*

வலையோடு காத்திருக்கிறேன்
விண்மீனான உனைப்
பிடித்துவிடும் ஆசையோடு!

- ப்ரியன்.

சலனம்

மொட்டை மாடி
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;
சாக்கடையில் விழுந்து
பிரகாசித்துக் கொண்டிருந்தது
இரவெல்லாம் நிலவு
யாதுமொரு சலனமில்லாமல்!

- ப்ரியன்.

இன்னும் இருக்கிறது ஆகாயம் - 4

ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!

தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!

மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!

இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!