மற்றொரு மாலையில்... - 10

உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!



நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!

வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!

ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!

அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!

அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!

இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!

வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!

வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!

உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!

- இன்னும் உருகும்...

3 பின்னூட்டங்கள்:

தனசேகர் said...

பல பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது .... காதல் மாதத்தில் .. காதல் ரசம் சொட்ட சொட்டக் கவிதைகள்... அனைத்தும் அருமை ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!//

வானத்தில் மிதந்தபடி? :-)
நல்லா இருக்குங்க .

சோமி said...

கவிதையில் காதல் இளையோடுகிற போதெல்லாம் ஒரு சுகம் வருகுதே பிரியன்.இன்னா காரணமுன்னு தெரிஞ்சா சொலுங்க கவிஞருங்களா?