மற்றொரு மாலையில்... - 07

தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!


பரிட்சைக்கு முந்தைய
கடைசி பள்ளி வேலை
நாளது;

படிக்க கொடுக்கும்
படிப்பு விடுமுறையை
களிக்க கணக்குப் போடும்
கூட்டம் ஒன்று!
விடுமுறையை தொடரும்
பரிட்சை பற்றிய
பயத்தில் பதறும்
கூட்டம் மற்றொன்று!

இவ்விரு வேறு
கூட்டத்தினிடையில்
பிரிவை எண்ணி
நடுநடுங்கி இருந்தன
இரு கூடுகள்!

கடைசியாய் பயந்தகிடந்த
அந்நிமிடம் வந்தேவிட்டது
அவ்வகுப்பறையில்
நம் கடைசி மணித்துளிகள்!

கையில் கிடைத்த
கூர்மை பொருள் கொண்டு
நீயே சாட்சியென
மேசையிடம் சொல்லியபடி
மேசையின் உள்பக்கம்
ஒரு பைத்தியமாய்
கிழிக்கிறேன்
இருவர் பெயரையும்!

வெட்டி தொங்கவிடப்பட்ட
தண்டவாள கட்டையில்
பள்ளி முடிந்தற்கான
அடையாளமாய்
நீண்ட மணி அடிக்கப்படுகிறது!
அது
ஏனோ உயிருக்கு
மணியடிப்பதாய் தோன்றுகிறது!

காலியான வகுப்பறையின்
வெறுமை நெஞ்சில் அறைய
கண்ணோரம் துளிர்க்கின்றன
கண்ணீர் துளிகள்!

தலைக்குனிந்து
நகர்ந்தவள்!
தூரமாய் சென்று
நின்று வகுப்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பக்கமாய் நான் வந்ததும்
'நல்லா படி!'
'நல்லா எழுது!' என்ன? என்கிறாய்;
நீ சொன்ன
அதையே கூட உனக்கு திருப்பிச் சொல்ல
தைரியம் இல்லாதவன்
'ம்!' என்றபடி நகர்கிறேன்;
ஒரு குளத்தளவு நீரை
கண்ணில் தேக்கிக்கொண்டு.

- உயிர் இன்னும் உருகும்...

இதுகாரும் உருகிய உயிர் காண :

06.,05.,04.,03.,02.,01

0 பின்னூட்டங்கள்: