மற்றொரு மாலையில்... - 06

ஒரு மரத்தடியில்
வசந்தத்தில் உனக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்!
காத்திருந்து நாட்கள் பல
கடந்த இக்காலத்தில்
காய்ந்த இலைகளை
பொழியத் தொடங்கிவிட்டன
மரங்கள் மழையாக!


கரையோரம் துள்ளும்
தங்க மீனாய்
ஆற்றின் ஓரம்
தோழியர் படைசூழ
தண்ணீருக்கு அடியிலும்
மேலுமென கழித்திருப்பாய்
வாரயிறுதி நாட்களை!

உனை இருநாள்
காணாமல் போனால்
இருண்டிடும் கண்களென
மனம் பகர
கால் முந்த
எத்தோச்சையாய் வருவதாய்
சமாதானம் சொல்லி
கடந்து நான்
அழகு கடத்திப் போகும்
அந்நாட்களில்
ஒரு புன்முருவல் பகிர்வோடு
முடிந்துபோகும்
நம் பேச்சு!

தொட்டுக் கொள்ள
உப்பும் மிளகாயும்
தின்றபின் சுவைக்கூட்ட
ஆற்று தண்ணியுமென
தோழியர்களுடன் நீ
குழுமியிருந்த நாளொன்றில்!

வழமைப் போல்
கண் பேசி
கடந்தவனை
இழுத்து நிறுத்தினாய்
'நெல்லிக்காய் சாப்பிடுகிறாயா?' எனும்
கேள்விக் கொக்கியால்!

அழகு
களவாட வந்தவன்
கண்கயிற்றாய் கட்டுண்டு
சொன்னேன்
'ம்!' அதுவே
ம் அவ்வளவே பதில்!
அதுவே முதலில் உன்னிடம்
பேசிய சொல்லும் கூட!
ஒற்றை எழுத்தானாலும்
ஓராயிரம் முறை
உயிர் சிலிர்த்திட
அதுவே போதுமானதாயிற்று!

இருந்த ஒற்றை
நெல்லிக்காயினை
ஓரக்கடி கடித்து தந்தாய்!

நெல்லிக்காய் தின்று
தண்ணீர் குடித்தால்
தொண்டைக்குழி இனிக்குமென்பது
அதுவரை கண்ட அனுபவம்!
ஆனால்
கடித்த பாகத்தின் ஓரம் ஒட்டிய
உன் எச்சில் திவலைகளை குடித்து
உயிரெல்லாம் இனித்தது
அன்று கொண்ட புது அனுபவம்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 07

இதுகாரும் உருகிய உயிர் காண :

05.,04.,03.,02.,01

0 பின்னூட்டங்கள்: