மற்றொரு மாலையில்... - 03

இசையின் குறிப்பாய்
பேசத் துவங்குகிறாய்!
எங்கோ!தூரத்தில்
இசைகிறது புல்லாங்குழல்
ஒத்தாக!


திருத்திய தேர்வுத்தாள்கள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
மதிப்பெண் வாரியாய்;

மரம் தங்கி
குளுமை குடித்த காற்று
கள்ளமாய் வகுப்பறை நுழைந்து
நுனி தொட்டு
செல்லமாய் வருடிச் செல்ல
ஸ்பரிசத்தின் கூச்சத்தில்
சிலுசிலுத்து
படபடத்து
அடங்குகின்றன தேர்வுத்தாள்கள்!

உனக்கடுத்தாய் என் பெயரோ
எனது அடுத்தாய் உனதையோ
அல்லது இருபெயரையும்
சேர்த்தோ அழைக்க
ஆசிரியரிடம்
தாள் வாங்கி
திரும்பும் பொழுது
எதிர் எதிர் திசையில்
பயணிக்கும் அதிவேக இரயில்களாய்
கண்கள் நான்கும்
முட்டிக் தொட்டுக் கொள்ளும்!

அக்கணம்,
சூழ்நிலையெங்கும் இருள் கவிந்து
மின்னல் வெட்டி
மழை தன் ஆடை களைகிறது

அம்மணமான மழை
கண்ட வெட்கத்தில்
புன்னகை மொட்டொன்று
இதயத்தினுள்
மெல்ல அவழ்ந்து பூக்கிறது!
முகம் மலர்கிறது!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 04

இதுகாரும் உருகிய உயிர் காண :

02.,01

3 பின்னூட்டங்கள்:

Umabathy said...

எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நவீன் ப்ரகாஷ் said...

உவமைகளும்
உவமேயங்களும்
கவிதையெங்கும்
மணம் வீசுகின்றன
ப்ரியன்
மிக ரசித்தேன் ! :))

G.Ragavan said...

இரண்டாவது கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ப்ரியன். எல்லாமே தாள்கள்தான். ஆனால் வரிசைப் படுத்த அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கப்படத்தானே வேண்டியிருக்கிறது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் என்று வள்ளுவனார் சொன்னது சரியாக வருகிறது இந்தக் கவிதையில்.