இன்னும் இருக்கிறது ஆகாயம் - 4

ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!

தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!

மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!

இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

இன்னும் இருக்கிறது ஆகாயம் - 3

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

இன்னும் இருக்கிறது ஆகாயம் - 2

மழை பருகி
நாளான பூமியில்
வேர்வரை காய்ந்து நிற்கும்
மரமொன்றின்
உயிர் துளிர்க்கும்
நம்பிக்கையில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

இன்னும் இருக்கிறது ஆகாயம் - 1

தந்த
ஒற்றை முத்த சுவைக்கே
அசந்துப் போனால் எப்படி?
தந்து - பெற
இன்னும் மிச்சமிருக்குது
ஆகாயம்!

- ப்ரியன்.

* ஆகாயம் - மிகுதி எனக் கொள்க

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

இசையாக

ஒடிந்த வலியினையும்
தீக்கோலிட்ட
புண்ணினது ரணத்தையும்
காற்றினூடே
சொல்லிச் சொல்லி
அழுகிறது
புல்லாங்குழல்

- ப்ரியன்.