கவிதை தொகுப்பு - ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்

அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது!
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை;
ஆனாலும்,
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்!

************************
ஒற்றைக் குடைக்குள்
நெருக்கமாகக்
காதலர்கள் நகர்ந்தால்
கோபப்படுகிறான் வருணன்!
மழை பெருக
சாரல் தவிர்க்க
மேலும் நெருக்கமாக
மீண்டும் கோபம்
மீண்டும் சாரல்
மீண்டும் நெருக்கம்

************************

உன் கால்தடத்தில்
தேங்கி இருந்த மழைநீரைத்
தீர்த்தமென்கிறேன்;
அப்படியென்றால்
நீ தேவதைதானே!

************************
கடலுக்குள் விழுந்த
மழைத்துளி போல்
பத்திரப்படுத்திவிட்டேன்
என்னுள் விழுந்த உன்னை!

************************

மழையில் நனைபவளே!
தெரிந்து கொள்
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள
வான் அவன் விடும்
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை!

************************

எல்லோரையும் வெறுமனே
நனைத்துவிட்டுச் செல்கிறது மழை!
உன்னில் மட்டுமே
அதுவே ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!

************************

பெரிதாய்ப் பொழியும் மழையில்
நனைந்து நிற்கிறேன்;
உன் கால்தடத்தைத் தனியே
நனையவிட்டுச் செல்ல
நான் ஒன்றும் உன்னைப் போல்
கொடுமையானவன் அல்ல!

************************

பெரும் பாலையில் தவறிப்
பெய்துவிட்ட
மழை நீ
எனக்கு!

************************
எவ்வளவு பத்திரமாய்
நீ நடந்தாலும்
உன்னையும் அறியாமல்
வழியெங்கும்
பெய்துகொண்டே செல்கிறது
உன் அழகுமழை!

************************

மழை நேரத்தில்
திரும்பும் பக்கமெல்லாம்
தெரியும் மழைக்கீற்று மாதிரி
என் மனதில் திரும்பும் பக்கமெல்லாம்
நீ! நீ! நீ!

************************

தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்னச் சில்லுகள்தாம்
மழை!

************************
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்!
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்!

************************

வானம்,
பெய்ய மழை
பெய்யப் பெய்யப் பெருமழை!
நீ,
காண அழகு
காணக் காணப் பேரழகு!

************************

என்னை அந்தி முதல்
ஆதிவரை நனைத்துச்
செல்கிறீர்கள்!
பலநேரங்களில் நீயும்!
சிலநேரங்களில் மழையும்!

************************

உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு!

************************

இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்!

************************

நேற்றைய
என் கோபத்தையும்
உன் வருத்தத்தையும்
துவைத்துத் துடைத்துப்
போயிருந்தது
இரவில் பெய்த மழை!

************************

என்னவோ அறியேன்
எப்படி என்றும் அறியேன்
என் உயிர்வரை நுழைந்து
மனம் ஊடுருவ உனையும்
மழையையும் மட்டும் அனுமதிக்கிறேன்!

************************

எத்தனை மழைத்துளிகள்
மண் முத்தமிடுமிடுகின்றன என
எவ்வளவு நேரம் எண்ணிக் கொண்டிருப்பது
சீக்கிரம் வந்துவிடு!

************************

என் மீது
ஒரு மழையாய்த் தான்
பொழிந்து செல்கிறது
நீ சிந்தும் மென்னகை!

************************
நீ
கோபம் காட்டும் நாட்களில்
கண்ணாடிச் சில்லுகளாய்க்
குத்திச் செல்கின்றன
மழைத்துளிகள்!

************************

உன் கன்னக்குழியில்
தங்கும் அந்த ஒற்றைத்துளி
மழை அமுதத்தின் விலை
காதல்!

************************

நீ தொட்டுப் பேசுகிற நேரங்களில்
மழை ஞாபகம்
தவிர்க்க இயலவில்லை எனக்கு!

************************

மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்!

************************

உன் மெளனம் கலைந்த கணத்தில்
மனம் கொள்ளும் வேகத்தில்
வானம் உடைத்து
நொறுங்கி விழுகிறது
மழை!

************************

நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை!

************************

முதன்முதலாய் மழையுடன்
பெண்ணை ஒப்பிட்டுக் கவி சமைத்தவன்
யாரென யாராவது கேட்டால்
என்னைக் கை காட்டு!
பெண்ணென்றால் அது
நீ மட்டும்தானே!

************************

ஜன்னலில் பார்த்ததைவிடவும்
பக்கத்தில் பார்த்தல்
அழகு!
நீயும்!
மழையும்!

************************

வார்த்தையாகக் கூட இல்லை
ஒரு எழுத்தாகக் கூட இல்லாதவனை
ஒரு கவிஞனாய் மாற்றிய
பெருமை
உனக்கும்
மழைக்கும் மட்டுமே!

************************

என்னைக் கொஞ்சுகையில்
கைகால் முளைத்த
மழையாகிறாய் நீ!

************************

மழையும் நீயும்
நனைக்கிறீர்கள்
நனைப்பதாய்ச் சுடுகிறீர்கள்
சில நேரங்களில்!

************************

நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழை போல
நீ நின்று போன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு!

************************

நீ மார்பில்
சாயும் தன்மையில்
என்னை அறியாமல்
நானே மழையாகிறேன்!

************************

என் மனம்
பட்டுப் போகக்கூடும்
எனும்போதெல்லாம்
மழையாகப் பெய்துபோகிறாய்
நீ!

************************

மழைத்துளிக்காகப்
புதைந்து காத்திருக்கும்
விதைகள் போல!
உன் விழிப் பார்வைக்காகக்
காத்திருக்கின்றது
என் காதல்!

************************

கருமை வர்ணம் பூசித்திரிந்த
அம்மேகத்தின் பிள்ளை
மண்தீண்டலில் எழுந்த
மண் வாசனை
நுகர்தலில் உணர்கிறேன்
உன் வாசனை!
************************

வானம் கிழிக்கும்
வெளிச்சத்தில் - எழும்
இடி ஒலியில்
சோ! என
மண் நனைத்து
மண் நிறைக்கிறது மழை!
என் உயிர் நனைத்து
என் உயிர் நிறைக்கும் உன் உயிர்!

************************

நீயும் நானும்
இரவில் நடந்துவர
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்து நனைத்து
விளையாடிய
அச்சிறுபிள்ளை சிறுமழையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
கண்ணிலும்
உயிரிலும்!

************************

மண்ணுள் ஊடுருவிச் செல்லும்
மழையென!
என் உள்ளம்
தூர்ந்து நுழைகிறாய் நீ!

************************

எதுவாக நீ வந்தாலும்
இன்பமே!
ஆனால்,
மழையாக வந்தால்
பேரின்பம்!

************************

நனைந்து சென்ற உன்னை
ஆயிரமாயிரம் பிம்பமாய்க்
காட்டியது மழை!

************************

சுத்தமான
அந்த மழைத்துளி
பார்க்கும்போதெல்லாம்
உன் ஒப்பனையற்ற முகம்
முன்னால் நிற்கிறது!

************************

நனைத்து நனைத்தே
நெருக்கமான
மழை போலவே
சுகமாகிறாய்
நீயும்!

************************

நீ வருவாய் என்பதை
முன்னமே வந்து சொல்லிவிட்டுப்
போய்விடுகிறது
மழை!

************************

பைத்தியமாகிவிடத் தோன்றுகிறது
மழையில் உறையும்போதும்
உன் நினைவுகளில் நனையும்போதும்!

************************

பூமியைச் சுத்தமாக்கிப்
புதியதாக்குவது மழை!
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை!

************************

தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!

************************

மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை!
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை!

************************

உனைத் தொட்ட பின்
அதே துளி!
கவனி அதே துளி
ஏன் எனையும் தீண்டவில்லை எனக்
கோபித்துக் கொண்டேன்
மழையிடம் நேற்று!

************************

மழை பெய்யும்
நாட்களெல்லாம்
உனைக் கண்ட நாட்களாக
அமைந்துவிடுகிறது!

************************

உனைக் கண்ட நாட்களுக்கே
என் நாட்காட்டியில்
இடமிருக்கிறது!
போனால் போகட்டும்
உனக்காக
மழை கண்ட நாட்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்!

************************

மழை தொட்டால் மட்டுமே
சிலிர்த்தவன் நான்!
நான் தொட்டால் மட்டுமே
சிலிர்ப்பவள் நீ!

************************

தெரியும்,
மழையில் நனைகையில் சிலசமயம்
நான் பருகும்
ஒவ்வொரு துளியிலும்
இருக்கிறாய் நீ!

************************

எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்!
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்!
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்!
அடுத்த மழை பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்!

************************

சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே!
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை!

************************

எப்படித் தேர்வு செய்கிறாய்
உன்னை நனைப்பதற்கான
மழையை!

************************

மழையில் சிக்கிக் கொண்ட
பெருவியாதிக்காரனின் தவிப்பாய்
உன் விழிதேடிக் கிடக்கிறது
என் காதல்!

************************

உனைப் பார்க்க வரும்போதெல்லாம்
மண் அன்னையை நோக்கிவரும்
மழைப் பிள்ளையென
குதித்தோடி வருகிறேன்!

************************

உன் இதழில் உணர்ந்தேன்
சுவையில்லா ஒரு சுவையான
மழையின் சுவையை!

************************

உன்னை நினைத்தபடி
வானம் நோக்கி
இருந்தேன்!
நெற்றி விழுந்து
நெஞ்சுவரை நீந்திய
மழையின் தண்மை
இன்னமும் அதிகமாய்
ஞாபகப்படுத்திவிட்டது உன்னை!

************************

உன் மீது கோபம் காட்டும் நாட்களில்
என்னை மட்டும் தீண்டாமல்
விலகிப் பெய்துவிட்டுச் செல்கிறது மழை!

************************

நீ பேசாமல் இருந்தால்
என் வானமெங்கும்
மேகமூட்டம்!

************************

நீ கோபம் காட்டும் நாட்களில்
என் மனமெங்கும் பெய்யும்
வலிக்க வலிக்கக்
கல் அடி மழை!
ஆலங்கட்டி மழை!

************************

மழை மண் விழுந்த அடுத்தநாள்
முளைத்துவிடும் விதையென
நீ கண்ணுள் விழுந்த
அடுத்த நொடி முளைத்துவிட்டான்
என்னுள் காதல்!

************************

நீ மழையில் நனைந்த
லயத்தில் கண்டுக்கொண்டேன்
மழையே ரசிக்கும்படி
எப்படி மழையில்
நனைவதென!

************************

பெருமழைக்கே
பயந்து போகாதவன்
உன் விழியோரம் வழியும்
ஒருதுளிக்குப்
பதறிப் போகிறேன்!

************************

உன்னைக் கொஞ்சுவதில்
எனக்குப் போட்டி
மழை மட்டுமே!

************************

மண் விழுந்த மழை மட்டுமா?
நீயும்
கவிதை நடையில்தான்
நடக்கிறாய்!

************************

திட்டிக் கொண்டே
துப்பட்டா கொண்டு நீ
தலை துவட்டுகையில்
எனக்கு
இன்னமும் செல்லமாகிப் போகிறது
மழை!

************************

உன்னில்
கவிதை காணும் இடமெல்லாம்
ஒரு புள்ளி வைத்துச்
செல்கிறது மழை!

************************

- ப்ரியன்.

மடலாடலுக்கு - mailtoviki@gmail.com

5 பின்னூட்டங்கள்:

பழனி said...

மழை , அவள் , காதல் ... மூன்றுமே கவிதையில் அழகு .. இந்த மூன்றையும் சேர்த்து முக்கனிச் சுவையாக படைத்திருப்பது ..அருமை ..

- யெஸ்.பாலபாரதி said...

அப்பூ... ஆரது...?!

Anonymous said...

வாழ்த்துக்கள்! "வளரும்" கவிஞர் விக்கி வாழ்க :-D

Anonymous said...

அழகான வரிகளில் என் இதயம் வழுக்கி விழுகிறதே....

மஞ்சூர் ராசா said...

மழையை பற்றிய உங்களின் இக்கவிதைகள் பெருமழையாகவும் இல்லாமல் தூறலாகவும் இல்லாமல் விட்டு விட்டு பெய்யும் ஒரு ஜாலத்தை உருவாக்கியிருக்கிறது.

வெற்றியடைய வாழ்த்துக்கள்.