நிலா

வானத்து வெண்ணொளியில்
மொட்டைமாடி குளித்திருக்க!
வெண்ணொளி தரு நிலாவின்
தண்மையில் பூமி குளிர்ந்திருக்க!

மொட்டை மாடியில்
வேகமெடுத்து கிளம்பியது
அரட்டை!
பக்கத்துவீட்டு பத்மாவை
பார்த்து சிரித்து!
ஊர் தேசம் எல்லாம் சுற்றி
வானில்,நிலாவில்
முட்டி நின்றது அது!

மேடும் பள்ளமும் நிறைந்த
காற்றும் உயிருமில்லா
பெரிய உருண்டை கல்
என்று பகன்றான் ஒருவன்!
கூடுதல் தகவலாய்
பசிபிக் பெருங்கடலில் இருந்து
பிய்த்தெரியப் பட்ட பூமியின்
பகுதியென்றான் அவனே!

வானமகள் தினம் தினம்
அவளே அழித்து
அவளே விதவிதமாய்
இட்டுக் கொள்ளும்
வெள்ளைப் பொட்டென்றான் ஒருவன்!
நல்ல கற்பனைதான்!

பாட்டி வடை சுட்ட கதையும்
முயலின் தியாக கதையையும்
கலந்து சொல்லிக்
குழப்பிக் கொண்டு போனான்
மிஞ்சியவன்!

என் முறை வந்தது
"நிலா" அதுவென்றேன்!
அதுவை அதுவாகவே பார்த்தல்
அழகென்றேன்!
ஒருமாதிரிப் பார்த்து
உறங்கப் போனார்கள்!
இருட்டில் எவனோ
என்னைப் பற்றி முணுமுணுத்தான்
குருட்டு கண்காரன் என்றான்!

உறக்கம் கண்ணில் ஒட்டாமல்
கைப்பிடிச் சுவர் பற்றி
சாலையைப் பார்த்திருந்தேன்!
நேற்றைய மழையில்
தேங்கிய நீரில் ஒற்றையிலை
உதிர்ந்து விழ!
நீரில் தங்கிய நிலா
மெல்ல தளும்பியது!

தன்னைத் நிலாவாகப்
பார்த்தமைக்கு
நன்றிச் சொல்லி
விழி
தளுதளுத்ததாய் தெரிந்தது
என் "குருட்டுக் கண்களுக்கு"!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

யாத்ரீகன் said...

மனிதர்களிடமட்டுமன்றி இயற்கையிடதிலும்.. இப்படிப்பட்ட பார்வை வேண்டும் .. எவ்ள்ளோ எளிமையா சொல்லிட்டீங்க ப்ரியன்.. :-)

நான் கூட.. வழக்கமான மற்றொரு காதல் பிதற்றல் ;-) என்று நினைத்தேன்.. அருமையான முடிவு..

ப்ரியன் said...

நன்றி செந்தில் :) எல்லாம் உங்க ஆதரவுதான்