வா காதலிக்கக் கற்றுத் தருகிறேன்

வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!

அலையென துள்ளிவரும்
எண்ண அலைகளை
அள்ளி
தூரப் போடு!

வா,
கொஞ்சம் நெருங்கி வா
மூச்சோடு மூச்சு முட்டி
இருவர் இருதயமும்
தகிக்கும் வரை
நெருங்கி வா!

உன் பெயர் மற!
என் பெயர் மறக்கடி!

மெலிதாய் சிரி!

நீ ஆண்
நான் பெண்
என்பது
துடைத்துப் போடு!

எக்காலம்
இக்காலம்
கேள்வி தொலை!

பார்
பார்
பார்த்துக் கொண்டே
இரு!

உன் இரு விழியில்
உயிர் கசிந்து ஒழுகி
என்னுயிரில் கலந்து
போகும் வரை
பார்த்துக் கொண்டே
இரு!

பசிக்காவிட்டாலும்
கண்களால்
கண்கள் பார்த்து
என் உயிர் புசி!
உன்னை
புசிக்க எனக்கு
கற்றுக் கொடு!

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 2

கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!

- ப்ரியன்.

என் கூந்தலின் நீளம்
உன் விரல்கள்
உள் புகுந்து
அளக்க;
அறிகிறேன் நான்!

- ப்ரியன்.

காதலியின்
கொலுசு சிணுங்களிலும்
கண்ணாடி வளையல்களின்
உடைபடும் சப்தங்களிலும்
நெஞ்சு முட்டும்
வெப்ப மூச்சிலும்
மெதுவாக நெய்யப்படுகிறது
இரவு!

- ப்ரியன்.

வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!

- ப்ரியன்.

அவளுக்காக ஒரு
செடி நட்டு வளர்த்து வந்தேன்!
பூத்ததும்
பூ கிள்ளி தலையில் சூடி
செடியை தனியே
தவிக்கவிட்டுப் போகிறாள்!

- ப்ரியன்.

அவன் வருவதாய் சொல்லி
வராத நாட்களில்
அழுது அழுது
வெளிறி நீலம்
கரைகிறது வானம்!

- ப்ரியன்.

உன் கண்களின்
ஆழத்தின் தொலைந்த
என்னை!
அதன் இமை மேடுகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன்!

- ப்ரியன்.

காலை எழுந்து
சோம்பல் முறித்து
கூந்தலில் கட்டி முடிக்கிறாய்!
நம்முடன் விழித்தே
பயணித்த இரவையும்!
கூந்தலில் சிக்கி தொலைந்த
என்னையும்!

- ப்ரியன்.

நான் அமர்ந்திருந்த
மரத்தின்
கார்கால தளிர்கள்
பழுப்பாகி உதிர்கின்றன
இன்னுமா வரவில்லை
நீ!

- ப்ரியன்.

பழைய என் பாலிய
கதைகளில்
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
பாதுகாக்கப்படும் உயிர்!
என்னுடையதை எங்கே
ஒளித்துவைத்திருக்கிறாய்!

- ப்ரியன்.

காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

சந்திரகிரகணத்து அன்று
மட்டுமல்ல!
ஒவ்வொரு முறை
இரவில் நீ
வெளி வரும்போதெல்லாம்
விழுங்கப்படுகிறது
நிலவு!

- ப்ரியன்.

கடற்கரையில் காத்திருந்தேன்
வாராத உனக்காக
விட்ட பெருமூச்சில்
ஆவியாகிப் போனது
கடல்!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில் தெரிகிறது!
மரம் விட்டு
மடி விழும்
இலைகளின் நேசம்!

- ப்ரியன்.

உன் மடியில்
குழந்தையாக தவழ ஆசை
இன்று உள்புகுத்தி
நாளைப் பிள்ளையாய்ப்
பெற்றுக் கொள்ளேன்
என்னை!

- ப்ரியன்.

இரவில்
நீ மொட்டைமாடியிலிருந்து
எட்டிப் பார்த்தால்தான்
மொட்டு வெடிப்பேன் என
அடம் பிடிக்கிறது
என் வீட்டு மல்லிகை!

- ப்ரியன்.

எல்லா நதிகளும்
மலைக்கிடையில் தொடங்குகின்றன!
என் உயிர் நதி மட்டும்
ஏனோ,
உன் மார்புக்கிடையில்
தொடங்குகிறது!

- ப்ரியன்.

நேரமாகி அவன் வந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப் போகின்றன
அதுவரை துணையாயிருந்த
கண்ணீர் துளிகள்!

- ப்ரியன்.

நகரத்து ஆசாமி

பக்கத்துவீட்டு பாட்டியின்
சாவிற்கு மெதுவாக
அழச்சொல்லி கத்திவிட்டு
தற்காலிகமாக மரணமடைய
தாராளமாய்
கட்டில்பாடையில்
சரிகிறான்
நகரத்து ஆசாமி!

- ப்ரியன்.

நிழல்

அந்தியில் என்னுடன்
சேர்ந்து சாய்ந்து அமர்ந்த
நிழல்
இரவில் கிளம்பி
வர மறுக்கிறது
மரத்தைவிட்டு!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள்

இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

- ப்ரியன்.

அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.

- ப்ரியன்.

நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

- ப்ரியன்.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

- ப்ரியன்.

காதல் நினைவுகள்

என் இதயம் தோண்டி
அகழ்வாராய்ச்சி ஒன்று
நிகழ்த்தப்பட்டது!

வெட்டிய பகுதியெங்கும்
அறைகள்!

அறைகள் கொள்ளாமல்
முழுவதும்
முதுமக்கள் தாழிகள்!

மெல்ல நகர்ந்து
தைரியம் கொண்டு
ஒரு முதுமக்கள் தாழி
திறக்கின்றேன்!

பட்சிகளாய்
தலையைச் சுற்றிப்
பறக்கத் தொடங்குகின்றன
இதுவரை
முதுமக்கள் தாழி - உள்
உறங்கிய உன்
நினைவுகள்!

- ப்ரியன்.

கல் தேடும் மனிதன்

நாயைக் கண்டால்
கல் தேடும் மனிதன்!
இவனைக் கண்டால்
யார் கல்
தேடுவது?

- ப்ரியன்.

உயிர்ச் சிதறல்

உன்னுடனான
முதல் சந்திப்பில்
ரோசாவின்
இதழ் இதழாய்
சிதறிய என்னை;
என் உயிரை!

வெகுநாள் செலவில்
பொறுக்கிப் பொறுக்கி
சேர்த்து
ஒட்டிக் கொண்டிருந்தேன்!

எதிப்பாரா திசையிலிருந்து
வரும் புயல் போல்
எட்டிப் பார்த்து
புன்முறுவல் சிந்தி
ஒரு வினாடியில்
மீண்டும்
சிதறடித்துச் செல்கிறாய்!

மீண்டும் உயிர் இதழ்
தேடி சேர்க்கவோ;
சிதறவோ என்னால்
இயலாது!

சிதறடித்தலுடன்
சேர்த்தலையும்
இனி,
நீயே கவனித்துக் கொள்!

- ப்ரியன்.

நிலா

வானத்து வெண்ணொளியில்
மொட்டைமாடி குளித்திருக்க!
வெண்ணொளி தரு நிலாவின்
தண்மையில் பூமி குளிர்ந்திருக்க!

மொட்டை மாடியில்
வேகமெடுத்து கிளம்பியது
அரட்டை!
பக்கத்துவீட்டு பத்மாவை
பார்த்து சிரித்து!
ஊர் தேசம் எல்லாம் சுற்றி
வானில்,நிலாவில்
முட்டி நின்றது அது!

மேடும் பள்ளமும் நிறைந்த
காற்றும் உயிருமில்லா
பெரிய உருண்டை கல்
என்று பகன்றான் ஒருவன்!
கூடுதல் தகவலாய்
பசிபிக் பெருங்கடலில் இருந்து
பிய்த்தெரியப் பட்ட பூமியின்
பகுதியென்றான் அவனே!

வானமகள் தினம் தினம்
அவளே அழித்து
அவளே விதவிதமாய்
இட்டுக் கொள்ளும்
வெள்ளைப் பொட்டென்றான் ஒருவன்!
நல்ல கற்பனைதான்!

பாட்டி வடை சுட்ட கதையும்
முயலின் தியாக கதையையும்
கலந்து சொல்லிக்
குழப்பிக் கொண்டு போனான்
மிஞ்சியவன்!

என் முறை வந்தது
"நிலா" அதுவென்றேன்!
அதுவை அதுவாகவே பார்த்தல்
அழகென்றேன்!
ஒருமாதிரிப் பார்த்து
உறங்கப் போனார்கள்!
இருட்டில் எவனோ
என்னைப் பற்றி முணுமுணுத்தான்
குருட்டு கண்காரன் என்றான்!

உறக்கம் கண்ணில் ஒட்டாமல்
கைப்பிடிச் சுவர் பற்றி
சாலையைப் பார்த்திருந்தேன்!
நேற்றைய மழையில்
தேங்கிய நீரில் ஒற்றையிலை
உதிர்ந்து விழ!
நீரில் தங்கிய நிலா
மெல்ல தளும்பியது!

தன்னைத் நிலாவாகப்
பார்த்தமைக்கு
நன்றிச் சொல்லி
விழி
தளுதளுத்ததாய் தெரிந்தது
என் "குருட்டுக் கண்களுக்கு"!

- ப்ரியன்.

எறும்பு

வரிசை தப்பிய எறும்பு ஒன்று
என்னருகே ஊர்ந்து வந்தது!
அச்சின்ன உடல் பெரிதாக
ஆட ஆட என் மேலேறுகிறது
அவ்வெறும்பு!

நகர்ந்தால் நசுங்கிவிடுமென
சுட்டுவிரலில் எட்டி எடுக்கிறேன்!
பிரயோகித்த சின்ன வேகத்தில்
பற்றிய ஒற்றை தானியம் தொலைக்கிறது
அவ்வெறும்பு!

தொலைத்த தானியம் தேடும்
அதனை கைக்குள் மூடி
தானியம் தேடி எடுத்து அருகில்
கொண்டுச் செல்லும் நேரம் கவனிக்கிறேன்
மூடிவைத்த கஷ்டத்திலோ,
தானிய நஷ்டத்திலோ
கடிக்கத் தயாராகிறது
அவ்வெறும்பு!

பாட்டி சொன்ன
கடித்த எறும்பு மரித்துப் போகும்!
தகவல் மனதில் முந்தி நிற்க
எறும்பை தரையில்விட்டு
தானியம் அருகில் வைத்தேன்
அவ்விடமே நின்று சுற்றிச் சுற்றி வந்த
அவ்வெறும்பு தானியத்தை
நான்கு முறைச் சுற்றி
பின் பக்கம் வந்து
சுமந்து நகர்ந்தது!
என்னைக் கடித்தலை மறந்து!

கண்டிப்பாக
நான் - மனிதன்
அவ்வெறும்பாக
இருந்திருந்தால்
தானியம் விட்டு
கடித்துதான் நகர்ந்திருப்பேன்!

- ப்ரியன்.

ஆசிரியன்

அன்னைக்கும் அப்பனுக்கும்
அடுத்து வைத்து!
தெய்வத்திற்கு முன்னே
வைத்தது உலகம்
உன்னை! - அய்யனே
என்னுயிரில் முன்னே
வைத்தேன் உன்னை!

அன்னை சுட்டினாள்
உயிர்வித்தளித்த அப்பனை!
அய்யனே! - நீ சுட்டினாய்
உணர்வளர்க்கும் அறிவை
என் தமிழை!

தாய்க்கு மகன்
தந்தைக்கு மகள்
செல்லம்!
குருவே உனக்கு
இருபாலருமே
வெல்லம்!
கட்டி வெல்லம்!

தாய்க்கு தந்தைக்கு
உற்றார் உறவினர்க்கு
என்னிடத்தில் உண்டு எண்ணிலடங்கா
எதிர்ப்பார்ப்புகள்!
உன்னிலும் உண்டு
என்னிடத்திலான எதிர்ப்பார்ப்புகள்
என்றாலும் அவை நீ
காணும் என் எதிர்காலங்கள்!

உன் சூரியஅறிவில்
கடன் வாங்கி
சுற்றித் திரியும்
சின்னச் சின்ன
மின்மினிகள் நாங்கள்!

ஆசிரியனாய் இருந்து
முதல்குடிமகனாய் உயர்ந்தவனின்
பிறந்தநாளில் கண்டார்கள் - உனக்கு
ஆசிரியர்தினம் என்று ஒன்று!
அறியாப்பிள்ளை உரக்கச் சொல்வேன்
பாரதத்தில் மட்டும்தான்
இதுவென்று!

அரவணைத்து அன்னையானாய்!
நல்வழி புகுத்தி அப்பனானாய்!
ஆலயத்திற்கு ஒப்பான - பள்ளியில் அமர்ந்து
தெய்வமானாய்!
மூன்றும் சேர்ந்ததால் நீ
குருவானாய்!

அருவாய் திரிந்தவரை - நல்
அறிவால் சமுகம் காக்கும்
எருவாய் மாற்றும்
குருவே வாழ்த்த வந்தேன்!
சிறுவன் இச்சிறுவன்
உருகி நின்றேன் - நின்
பெருமை கண்டு
உருகி நின்றேன்!

முதல் வகுப்பில் நீ
சொல்லித்தந்த பாடம் தான்!
மீண்டுமொருமுறை
அதே கூட்டுக் குரலில்
வணக்க்க்க்ம் அய்ய்ய்ய்யா!

- ப்ரியன்.