காதல் நிரப்பல்

என்னை உறிஞ்சி உறிஞ்சி
என்னையே
மொத்தமாய் உறிஞ்சி
வெளியேற்றி;
உன்னை ஊற்றி
உன் உயிர் மொத்தமும்
ஊற்றி ஊற்றி
என்னை
நிரப்புகிறது காதல்!

- ப்ரியன்.

தொலைதலும் காதலும்

உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
"காதல்" என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
"வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்" சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!

- ப்ரியன்.

கோபமும் காதலும்

என்றும் அதிர்ந்து கூட
பேசாதவன்;
திட்டி விட்டேன் கடுமையாய்!

கடைக்கண்ணில் சேரும்
கண்ணீர் துளிக் கண்டு!

பூமிக்கும் ஆகாயத்திற்கும்
குதித்து ஏசியது காதல்
காதலிக்கத்
தகுதியில்லாதவனென்று சொல்லி!

மெல்ல மெல்ல என் முகம் நகர்த்தி
உன் கண் மீது என் கண் பதித்து
முகம் தன்னை கையில் ஏந்தி
இதழ் கொண்டு கண்ணீர் துளி குடிக்க!

ச்சீ!போடா சொல்லி
அணைத்து இறுக்கி கொள்ள
உன் முகம் முழுதும்
வெட்க மருதாணி!

காதலிக்க இவனிடம் தான்
பாடம் படிக்க வேண்டும்
என்று ஏதோ முணுமுணுத்தப் படி
நகர்ந்தது காதல்!

- ப்ரியன்.

வெட்கம்

இன்னும் கொஞ்சம்
அதிகமாக வெட்கம்
காட்டேன்;
வெட்கம் பற்றி
அகராதி தாயாரிக்க வேண்டும்
இங்கிருக்கும்
மிச்சப் பெண்கள்
அறியும் மட்டும்!

- ப்ரியன்.

வாசனை

மழை நின்றும்
கிளைத் தங்கும்
துளிப் போல;
நீ வந்து
நகர்ந்த பின்பும்
மனைத் தங்கும்
வாசனை!!

- ப்ரியன்.

புன்னகை

உன்
முதல் புன்னகையில்
கை நழுவி
மறு மென்னகையில்
காண கிடைத்தது
எனக்கான காதல்!

- ப்ரியன்.

"ஆள்" கட்டி மழை

திடீர் மழையில்
நிழற்குடை கீழ்
ஒதுங்கினாய்
நீயுமொரு பகுதி
மேகமாய்!

ஊரே
சொல்லாமல் வந்த
மழையை வைய்ய!
தேவதை அருகிலிருத்திய
மழைத்தூதனை வாழ்த்தியபடி
நான்!

மின்னல் வெட்டி
திடுமென ஒர் இடி வெடிக்கையில்
நடுங்கித் திரும்பி
முகத்தாமரை மறைத்து
அர்ச்சுனா அர்ச்சுனா
சொல்லியவளை
பார்த்த கண் பார்த்தபடி
நின்றிருந்தவனை
கண்டு மெலிதாய்
வெட்கம் பூத்தாய்!

மழை ஓய்ந்து
எல்லோரும் ஓடிவிட
நான் நீ
துணைக்கு
மரம் தங்கி
சொட்டும்
சில துளிகளும்
நிழற்குடைக்கு
நன்றி பகன்ற படி!

ஏதோ மறந்தவள்
ஞாபகத்திற்கு உதித்தவளாய்
சட்டென குதித்து
ஓடிப் போனாய்!

கனவில் தேவதை
துரத்தும் குழந்தையென
என் கண்கள்
உனைத் தொடர!
பட்டென திரும்பி
சிறுப் புன்னகைப் பூத்தாய்!

அப்போது பெய்யத் தொடங்கியது
இருதயத்தில் மழை!

அந்நிமிஷம் உன் விழி கண்ட
மின்னல் வெட்டில் கட்டுண்டேன் நான்!

ஆலங்கட்டி மழைக்
கேள்விப் பட்டிருக்கிறேன்!

அன்று பெய்தது
"ஆள்" கட்டி மழை!

- ப்ரியன்.

முதல் பக்கமும் ஒரு கவியும்

நீ:
கவிதை தயாரித்து
வெகு நாட்கள் ஆச்சு!
என்னவாயிற்று உங்களுக்கு?
காதல் கோபித்துக்கொண்டதா?

நான்:
கோபித்தாலும் காதல் அழகாகி
காகிதத்தில் இ(ற)ரங்கியிருக்குமே!

நீ:
தமிழ் தீண்டாமல் நின்றதோ?

நான்:
விடமாட்டேனே தள்ளி நின்றால்
கட்டி கொள்வேனே?
அநுபவமில்லையா?

நீ:
உலகின் அழகு மொத்தமும் செத்துப்போனதுகளோ?

நான்:
இல்லையில்லை நீ உயிரோடு முன் நிற்கிறாயே!

நீ:
பின் எதுதான் எழுதாமல் தடுத்தது உங்களை?
நானா?

நான்:
என் கவிதை சுரங்மே நீதானடி
உன் அழகை களவாடித்தானே
கவிதை சேர்க்கிறேன்...

நீ:
அப்புறம் என்னதான் காரணம்?

நான்:
நீ வாங்கி தந்த குறிப்பேடு
தீர்ந்து போனதடி

நீ:
கோடிட்டு காட்டிருந்தால்
முன்னமே தந்திருப்பேனே?

நான்:
சரி தா...
ஆனால்
நிபந்தனை ஒன்று...

நீ:
என்ன அது?

நான்:
முத்தம் பதிக்க வேண்டும்

நீ:
ஆசை தோசை
வேறு கேள்
முடிந்தமட்டும் தருக்கிறேன்

நான்:
கவிதைசுரங்கத்தின் கைபக்குவத்தில்
கவியொன்று வேண்டும் முன் பக்கத்தில்

நீ:
நீ சொல் நான் எழுதுகிறேன்

நான்:
ம்.கூம் அடாது
நீயே யோசித்து எழுது
உன் பெயராயினும்
சம்மதம்...

நீ:
எனக்கும் தமிழுக்கும்
சண்டையடா சண்டை
யார் அழகு என்பதில்
போட்டியடா போட்டி

நான்:
இதுவே கவிதைதானடி

நீ:
கண்டிப்பாக நான்
எழுத வேண்டுமா?

நான்:
நிச்சயமாக...

சொல் கேட்ட மாத்திரத்தில்
குறிப்பேடு எடுத்து
யோசித்து யோசித்து
மறைத்து மறைத்து
எழுதி தந்தகணம்
முகம் முழுவதும் வெட்கத்தின்
சிவப்பு கோடுகள் திட்டுத்திட்டாய்

என்னதான் எழுதியிருப்பாய்
ஆர்வத்தில் பறித்து
வாசித்ததில்

மழலைப் போட்ட
கோலமாய்
"ப்ரியனுடன்ப்ரியா"
வரைந்திருந்தாய்

எழுதிய,எழுதக் காத்திருக்கும்
கவிதைகளெல்லாம்
ஓடி வந்து
உன் காலடியில்
சரண்ஆயின...

உனைக் கட்டிக்கொண்டு
இவள் என் காதலி
பெருமையாய் கத்தினேன்
கவிதைகளுக்கு மட்டும்
கேட்கும்மட்டும்...

- ப்ரியன்.

நிலா

பார்த்து பார்த்து
உனை சமைத்த கணம்
கைவலி பொறுக்கமாட்டாமல்
பிரம்மதேவன் தூரிகை
உதறியதில் சிந்தி
தங்கிவிட்ட ஒற்றைத்துளி
"நிலா"!

- ப்ரியன்.

காதல் நாடகம்!

யோசித்து யோசித்து
ஏதோ எழுதிக் கொண்டிருக்கையில்
பின் நின்று நுனிநாக்கால்
காதுமடல் வருட ஆரம்பித்தாய்!

காகிதம் மேலிருந்த
கவனம் முழுவதும்
காது மடலில் குவிந்த கணம்
வருட்டெனக் கடித்துவைத்தாய்!

கடித்தது நீயென்றாலும்
சின்னதாய் வலிக்கத்தான்
செய்தது!

செல்லமாய் கோபம்
மெலிதாய்
அடித்து வைக்கத் துணிந்தேன்!

எதிர்ப்பார்த்தவள்
பாதுகாப்பான தூரம்
நின்று!
உடைந்துவிட எத்தனிக்கும்
இடையில் இருகை வைத்து
புருவம் தூக்கி
என்னடாவென்றாய்
மெலிதாய் தலைசாய்த்து
புன்னகை பூத்தூவி!

அதுவரை மூக்கின்
மேல்நின்று தவம் செய்த கோபம்
மெதுவாய் கை ஊன்றி
கீழிறங்கி முன்நின்று
அவள் காதலுக்கும்
எனக்கும் ஏழாம் பொருத்தம்
சொல்லி காற்றில்
கரைந்து போனது!

பேசாமல் சில நொடிகள்
நான் நின்றுவிட!
சேயழைக்கும் தாய்ப்போல்
இருகை நீட்டி
வா வா
வாடா செல்லம் என்றாய்!

மந்திரமென காதல்
கட்டிப் போட்டதில்
மழலையென மார்ப்பில்
சாய்ந்து ஒட்டிக்கொள்கிறேன்!

சுகமோ சுகமென
நினைக்கையில்
மெதுவாய் முன்னேறி
காது மடல்
வருட முனைகிறாய்!

சீக்கிரத்தில்,
அரங்கேறும்
மற்றொரு காதல்
நாடகம்!

- ப்ரியன்.

குழந்தை

தப்பு தப்பாய் தமிழ்
வாசிக்க அறிவாய்!
தாறுமாறாய்
எழுதித்தந்தாலும்
தலைவன் எனக்காக
தரமானது என்பாய்!
கவிதை புத்தகங்கள்
காணோமென்று தேடினால்
தலையணை அடியிலிருந்து
எடுத்து நீட்டி இதனால்
என்மேல் உங்கள் கவனம்
குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!

என்றுமில்லாமல்
இன்று புது வெட்கம்
காட்டி!
பூமியை புரட்டிப்போடும்
புன்னகை சிந்தி!
நாணி கோணி
சிரிப்பால் நனைந்து
எனையும் நனைத்து
தோள் சாய்ந்து
கையில் தந்தாய்;
படித்துவிட்டு
சொன்னேன் அருமையான
கவிதை படைத்தாய்!

சொல்லி முடிக்கும் கணம்
பொக்கைவாய் திறந்து
நம்மிருவர் முகம் நோக்கி
முதல் புன்னகை உதிர்த்தது
கையிலிருந்த கவிதை!
நம் குழந்தை!

- ப்ரியன்.