கையோடு கை

இரவு முழுவதும் நடக்கும்
நாளைய சந்திப்பின்
கனவுகளைச் சுமந்து!

காலை சூரியனோடு
உனையும் எழுப்பி
படுக்கையில் கூடக் கிடக்கும்
கைப்பேசி தடவி
காலை வணக்கம்
தவிர்த்து
"உனை நான் காதலிக்கிறேன்"
என்பதில் தொடங்கும்
என் விளையாட்டுகள்!

கடக்கையில்
பார்வை பரிமாறி
நேரம் கிடைக்கையில்
உரையாடி
சாப்பிட்டதில் தொடங்கி
எல்லாமே சொல்லி முடித்திருப்பேன்!

மெதுவாக குட்டி மா என்பாய்
என்னமா என்றால்
ச்சும்மா என்று மனம் சுளுக்க
சிரித்து வைப்பாய்!

சாப்பிட போங்க
செல்லமாய் சொல்லுகையில்
நிரம்பியிருக்கும் பகுதி
வயிறு!

மதியம் பேச்சே
வேறு மாதிரியிருக்கும்
நான் சொல்லுதல் உனக்கு புரியாது
நீ சொல்லுதல் எனக்கு புரியாது
உண்ட மயக்கமல்ல
காலையிலிருந்து நமை நாமே
தின்ற மயக்கம்!

சின்னச் சின்னதாய்
மனஸ்தாபங்கள்
சிணுங்கல்கள்
அதை தொடரும்
மன்னிப்பு கோரல்கள்!

பல நாட்கள்
மன்னிப்பு கிடைக்காமல்
போகும்;
பணி முடிந்து
கையோடு கை பிணைத்து
வீடு திரும்புதலுக்காகவே!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: