பரிசு

நேற்று இரவு,வானம் பார்த்துக்கிடந்த கணம் எனக்கே எனக்கான என் ப்ரியா பக்கத்திலிருந்தால் எதை என் பிறந்தநாளுக்கு(அட இன்னிக்குதானுங்கோ!28.03.)பரிசாக என்ன அளிப்பாள்?என எண்ணியபோது தோன்றியது!இதை ப்ரியன் எழுதுனதா படிக்காமே,என் ப்ரியா எழுதுனதா நினைச்சு படிங்கப்பா!


ஏதோ பேச்சுக்குரல்
கேட்டு விழித்தெழுந்தேன்!

"காது கடித்து வாழ்த்துரைப்பாள்!"

"இல்லையில்லை அவன்
விட்டுச் சென்ற கைக்குட்டையில்
இவள் பெயர்
பதித்து தருவாள்!"

"பைத்தியங்களா,
விலையுயர்ந்த கைக்கடிகாரம்
கட்டிவிடுவாள்!"

"இது என்ன சில்லறைப் பரிசுகள்
மணவாளனுக்கு இவைகளா?
ஒற்றை முத்தம் போதாதா?"

கூடிக் குசுக்குசுவென பேசிக்
கொண்டிருந்தன
சின்னச் சின்னதாய்
கைகால் முளைத்த
கவிதைகள்!

இமை விழித்த சப்தம் கேட்டிருக்கும்
ஓடி வந்து சுற்றி நின்று
என்னத் தரப்போகிறாய்!
நச்சரிக்கத் தொடங்கின
பிசாசுகள்!

முத்தமா?
மொத்தமுமா?
கேட்டுவிட்டு
அடிபடாமல் விலகிக் கொண்டது
குறும்புக்கார கவிதையொன்று!
மொத்ததில் வெட்கத்தில்
கொஞ்சம் சிவந்து வைக்க!

அதுவரை விழித்தும்
விழிக்காதவனாய் நடித்தவன்
வெட்கத்தை விட அழகானப் பரிசா?
வாய்ப்பில்லை!! சொல்லி
கன்னத்தில்
உள்ளங்கை வைத்து
வெட்கம் புசிக்க ரம்பித்தாய்!

அப்படி நீ செய்ததில்
இன்னும் கொஞ்சம்
வெட்கத்தில் அதிகம்
சிவந்ததுதான் மிச்சம்!

- ப்ரியன்.

0 பின்னூட்டங்கள்: